எம்.எல்.ஏ.வுக்கு கொரோனோ :சேலம் மாவட்டம் கெங்கவல்லி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மருதமுத்துவுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாராயணசாமி தர்ணா :புதுவையில் ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் தர்ணா போராட்டம் தொடங்கியுள்ளது. அவருடன் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
மோடி நம்பிக்கை :இந்தியாவின் கொரோனா தடுப்பூசி உற்பத்தி மற்றும் வினியோகம், ஒட்டு மொத்த மனித குலத்துக்கே பெரும் பயன் அளிக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சக உயரதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். முன்னதாக பிரதமர் மோடி நேற்று காணொலி வாயிலாக பிரபல பொருளாதார நிபுணர்களுடன் கொரோனோ காலத்திற்கு பிந்தைய பொருளாதார வளர்ச்சி குறித்து கலந்துரையாடினார்.
ஆளுநர் சந்திப்பு :டெல்லி வந்துள்ள மேற்கு வங்க மாநில ஆளுநர், இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து, மேற்கு வங்க மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு விவகாரம், சட்டமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
விபத்து -விசாரணை: மகாராஷ்டிரா மாநிலம் பண்டாரா மாவட்ட அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இதில், ஒரு மாதத்தில் இருந்து மூன்று மாதத்திலான குழந்தைகள் உயிரிழந்தற்கு அம்மாநில முதல்வர் உதவ் தாக்ரே ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளதுடன், விபத்திற்கான காரணம் குறித்து விரைவாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தேபேக்கு உத்தரவிட்டுள்ளார்.