சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பெரும்பாலும் வடமாவட்டங்களைச் சேர்ந்த நீதியரசர்கள்தான் பதவியேற்று இருக்கிறார்கள். கடந்த காலங்களில் ஒவ்வொருவரும் பதவியேற்கும்போது, தமிழரின் பண்பாடுகளை புகழ்ந்து பேசுவார்கள்.ஆனால், கடந்த சில நாள்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்ட நீதியரசர் சஞ்ஜிப் பானர்ஜி, திருவள்ளூவர் பிறந்த மண்ணிற்கு வந்தததை பெருமையாக கருதுவதாக குறிப்பிட்டார். அவரின் தலைமையிலான அமர்வு முன்பு ஒரு சில வழக்குகள்தான் விசாரணைக்கு வந்தன. அந்த வழக்குகளில் அவரின் உள்மனதின் ஆழத்தை வெளிப்படையாக தெரிந்து கொள்ளும் வாய்ப்பு, வழக்கறிஞர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து தரப்பினருக்கும் தெளிவாக உணர்த்திவிட்டது. வழக்குகளின் அம்சங்களில் முக்கியமாக நீதியரசர், பார்த்தது, பொதுமக்களின் நலனைதான் முதன்மையாக கருதினார். அந்தவகையில், ஜனவரி 8 அன்று அவரது அமர்வு விசாரித்த வழக்கில் அவர் உதித்த வார்த்தைகள், வறிய மக்களின் வாழ்வாதாரத்தைப்பற்றிய கவலையை வெளிப்படுத்தியது.
மெரினா கடற்கரையை தூய்மைப்படுத்துவது, புயலில் சேதமடைந்த பெசன்ட் நகர் லூர் சாலையை புணரமைப்பது, மீன் கடைகளை ஒழுங்குப்படுத்துவது தொடர்பான வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வு, மெரினா கடற்கரையை அழகுப்படுத்துவது அவசியம் என்றாலும் கூட அதைவிட முக்கியம் மீனவர்களின் நலனும், அவர்களின் மனித உரிமைகளுமே முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஆணித்தரமாக தெரிவித்துள்ளனர்.
மனித உரிமை என்ற வார்த்தையே அதிகாரவர்க்கத்திற்கு வேப்பங்காய் போன்று முகம் சுளிக்க வைக்கும் நேரத்தில், அந்த வார்த்தையை அடித்தளமாக வைத்து சிந்தித்து, கருத்து தெரிவித்திருப்பது, நீதித்தேவதையை மட்டுமே முழுமையாக நம்பியிருக்கும் மக்களுக்கு நிம்மதியை தரக் கூடிய செய்தியாகும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது…