காவல் துறை குடும்பத்தினரின் காவல் அரணாக உயர்ந்து நிற்கிறார்….
ஒரு துறையின் தலைமை அதிகாரியாக இருப்பவர், எப்படிபட்ட நற்குணங்களோடு இருக்கிறாரோ, அவரின் செயல்பாட்டிற்கு ஏற்பதான், அந்தத் துறையின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதும், மாறாக விமர்சனத்திற்குள்ளாவதையும் கண்கூடாக அனைவருக்கும் தெரிய வரும். அந்த வகையில், எந்தெவொரு துறையின் உயரதிகாரியாக இருந்தாலும், பொதுமக்களோடு மனிதநேயத்தோடு இருக்கும்போது, அவரின் தலைமையின் கீழ் பணியாற்றும் அதிகாரிகளும், முடிந்தளவுக்கு சேவை மனப்பான்மையோடு பழக தொடங்குவார்கள். அந்தவகையில், காவல்துறையின் பங்களிப்பு என்பது மிகவும் அசாதாரணமானது. சென்னை மாநகர காவல் ஆணையராக பதவியேற்பவர்கள், பெரும்பாலும், பொதுமக்களோடு கலந்து பழகுவதை பெரிதும் விரும்புவதில்லை என்பதுதான் கடந்த கால நிகழ்வுகள் உணர்த்தியுள்ள பாடம். விதிவிலக்குகளும் இல்லாமல் இல்லை.
அந்த வகையில், தற்போதைய சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் ஐ.பி.எஸ்., பதவியேற்ற நாள் முதல், பொதுமக்களோடு நெருங்கிப் பழகுவதற்கான எல்லா வாய்ப்புகளையும் முழுமையாக பயன்படுத்தத் தொடங்கியுள்ளார்.
அதேபோல, அவரது தலைமையின் கீழ் பணியாற்றும் கீழ்நிலை அதிகாரிகள் வாழ்வியலையும் அக்கறையோடு கவனித்து, அதற்கேற்ப பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து, அவர்களை மட்டுமல்ல, அவர்களது குடும்பத்தினருக்கும் ஒருவித நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறார் என்பது சிறப்புக்குரிய ஒன்றாக பார்க்கப்படுகிறது.
அதற்கு உதாரணமாக பல நிகழ்வுகள், குறுகிய காலத்திலேயே காவல் ஆணையர் செய்திருக்கிறார் என்பதுதான் ஆச்சரியத்திற்குரிய ஒன்று. கொரோனோ காலத்தில் குழந்தைகளின் உயர்க்கல்வி என்பது மலைக்க வைக்கக் கூடிய ஒன்றாக இருந்த நிலையில், காவல்துறை குடும்பத்தைச் சேர்ந்த 139 மாணவ, மாணவியர்களுக்கு, அவர்கள் விரும்பிய கல்லூரிகளில் (இங்கு கவனிக்கப்பட வேண்டியது, அவர்கள் விரும்பிய கல்லூரிகள்) விருப்பத்திற்குரிய பாடப்பிரிவுகளை பெற்று தந்திருக்கிறார். மேலும், உயிரிழந்த காவல் அதிகாரிகளின் குழந்தைகளுக்கு ரூ. 10 லட்சத்திற்கு மேலான கல்வி உதவித்தொகை, பிறந்தநாள் அன்று விடுமுறை, காவலர் குடியிருப்பில் சுகாதாரத்தை மேம்படுத்துதல், தரமான மருத்துவச் சிகிச்சை, படித்த இளம்தலைமுறையினருக்கு தனியார் வேலைவாய்ப்பு மூலம் பணி நியமனம் என எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியிருக்கிறார்.
இவ்வளவு சிறப்புகளுடன், பணியின் போது காவல் துறையினர் சத்தான உணவு சாப்பிடுவததற்கான அமைக்கப்பட்டுள்ள உணவகத்தை நேரில் பார்த்து ஆய்வு செய்தல் என சின்னச்சின்ன அம்சங்களில் கூட காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் காட்டும் அக்கறை, உண்மையிலேயே வித்தியாசமானதாக இருப்பதுடன், வியப்பையும் ஏற்படுத்தக் கூடியவையாகதான் அமைந்திருக்கிறது.
இந்த பட்டியலில் மேலும் ஒரு முத்தாய்ப்பு நிகழ்வாக, வியாழக்கிழமை(ஜன.8) புதுப்பேட்டை ஆயுதப்படை குடியிருப்பு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள காவலர் குடும்ப சுயதொழில் மையத்தை, காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் திறந்துவைத்து, தையல், பிரிண்டிங் உள்ளிட்ட சுயதொழிலில் ஆர்வமுள்ள பெண்கள் மற்றும் இளம்தலைமுறையினரிடம் கலந்துரையாடினார்.
காவல்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் நிம்மதியுடனும், மன உளைச்சல் இன்றியும் பணியாற்ற வேண்டும் என்றால், அவர்களது குடும்பம் நிம்மதியாக இருப்பதுடன், தங்களை கவனிக்கவும் ஒருவர் இருக்கிறார் என்ற நம்பிக்கை பிறந்தால், ஒரு சில இடங்களில் எட்டிப் பார்க்கும் முரட்டுத்தனம் கூட குறைந்து, காவலர்கள் உங்கள் நண்பர்கள் என்ற வார்த்தைக்கு உண்மையான அர்த்தம் கிடைத்துவிடும். அதற்கான முயற்சிகளில் முழுவீச்சுடன் செயல்பட்டு வரும் சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வாலுக்கு பாராட்டுகளை உரிதாக்குவோம்…..