போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தகவல்…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16,221 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் திருவிழா, மாநிலம் முழுவதும் வெகு விமர்ச்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதனால், சொந்த ஊரைவிட்டு பணி நிமித்தமாக வெளியூர்களுக்குச் சென்றவர்கள், தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப, தமிழக அரசு ஆண்டுதோறும் சிறப்புப் பேருந்துகளை இயக்கி வருகிறது. அந்தவகையில், இந்தாண்டும் சிறப்புப் பேருந்துகள் இயக்க, மாநில போக்குவரத்துறை பல்வேறு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. அதுதொடர்பாக, போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள கருத்துகள் பின்வருமாறு
வரும் 11ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொங்கல் திருவிழா முடிந்தவுடன் அவரவர் ஊருக்கு திரும்பும் வகையில், வரும் 17 முதல் 19ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மொத்தமாக 15,270பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்குச் செல்லும் மக்களுக்காக ஏற்கெனவே நடைமுறையில் உள்ளபடி, சென்னை மாதவரம், கே.கே.நகர், தாம்பரம், பூந்தமல்லி, கோயம்பேடு பேருந்து நிலையங்களில் இருந்து, சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்தார்.