கொரோனோ நோய் தொற்று இந்தியாவில் பரவியத் தொடங்கிய கடந்தாண்டு மார்ச் மாத இறுதியில், அதுதொடர்பாக நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். நோய் தடுப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். தொடர்ந்து நோய் தாக்கம் நாடு முழுவதும் அதிகரித்த போதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மருத்துவ சிகிச்சை முறைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து நாட்டு மக்களுக்கு விளக்கியதுடன், மாதந்தோறும் அனைத்து மாநில முதல் அமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் தொடர்பு கொண்டு கருத்துகளை கேட்டறிந்தார். தேவையான ஆலோசனை வழங்கினார். கடந்தாண்டு முழுவதும் அடிக்கடி நடந்த நிகழ்வுகள், 2021 ஆம் ஆண்டிலும் தொடர்கிறது. நாடு முழுவதும் கொரோனோ நோய் தொற்று பரவுவதல் 95 சதவிகிதத்திற்கு மேல் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், இரண்டாவது அலை என்று சொல்கிற அளவுக்கு இங்கிலாந்தில் இருந்து இந்தியா திரும்பியவர்களும், மாற்றம் கண்டுள்ள புதிய வகை கொரோனோ தொற்று பரவும் ஆபத்துள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்தநிலையில், முழுமையான நோய் தடுப்பு முறைகள், தடுப்பூசி போட்டுக் கொள்வது உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி வரும் 11 ஆம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலி வாயிலாக ஆய்வு நடத்தவுள்ளார்.