அன்றாடக்காஞ்சிகள் கூட கூட தன்மானத்தை இழக்க துணிவதில்லையே….
நடிகர் விஜயக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு மட்டுமல்ல, 2021 ஆம் ஆண்டும் சச்சரவு நிறைந்த ஆண்டாக இருப்பதுதான் சோதனையான விஷயம். கடந்தாண்டு முழுவதும் கொரோனோ தொற்று பரவல் காரணமாக அவரை வீட்டிலேயே பல மாதங்கள் முடக்கிப் போட்டிருந்தது ஒருபக்கம் என்றால், அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், அவரது பெயரால் தொடங்கிய புதிய கட்சி அறிவிப்பும், நடிகர் விஜய்க்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது.
குடும்பத்திற்குள் ஏற்பட்ட சிக்கலுக்கு இடையே, சுமார் 150 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட மாஸ்டர் திரைப்படத்தை உரிய காலத்தில் வெளியிட முடியாமல் தவித்து வந்த நடிகர் விஜய், தனது தந்தையின் அரசியல் ஆசையால், அவருடைய உறவையே துண்டிக்கும் அளவுக்கு துணிந்தார்.
ஒருவழியாக கொரோனோ அச்சுறுத்தல் குறையத் தொடங்கியதால், பொங்கல் பண்டிகையையொட்டி, மாஸ்டர் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட நடிகர் விஜய் முன்வந்தார். 50 சதவிகித இருக்கைக்கு மட்டுமே அனுமதி உள்ள நிலையில், படத்திற்கு செலவு செய்த 150 கோடி ரூபாய் வசூலாவது சிரமம் என்று கருதி, அ.தி.மு.க.அரசின் உதவியை மறைமுகமாக கூட இல்லாமல் நேரடியாகவே பெற முயன்றார். அதற்காக தன்னுடைய இமேஜ் பாதிக்கப்பட்டால் கூட பரவாயில்லை என்ற அளவுக்கு அவர் இறங்கி போனார். திரையரங்களுக்கு 100 சதவிகிதம் பார்வையாளர்களை அனுமதிக்கும் உத்தரவு கிடைத்தால் தமக்கு லாபமும் இரட்டிப்பாக கிடைக்கும் என்ற முடிவில் கடந்த வாரம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து 100 சதவிகித இருக்கைக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அந்த சந்திப்புக் கூட ஒருவகையில் நடிகர் விஜயின் தன்மானத்தை உரசிப் பார்க்கும் விதமாக அமைந்ததாக பரவலாக பேச்சு உள்ளது. காரணம், விஜயை கொஞ்ச நேரம் காத்திருக்க வைத்தே முதல்வர் விஜயை சந்தித்தாகவும் திரையுலகினரிடையே ஒரு பேச்சு உண்டு.
இப்படி தன்னுடைய தன்மானத்திற்கு இழுக்கு ஏற்படும் வகையில், முதல்வரை சந்தித்து 100 சதவிகித இருக்கைக்கு அனுமதி பெற்ற போதும், சென்னை உயர்நீதிமன்றம் மூலம் நடிகர் விஜயின் முயற்சிக்கு முட்டுக்கட்டை விழுந்துள்ளது. பொங்கல் பண்டிகை நாளையொட்டி மாஸ்டர் திரைப்படத்தை வெளியிடுவதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்ட நிலையில், எப்படியும் 100 சதவிகிதம் பார்வையாளர்கள் வந்துவிடுவார்கள். அதன் மூலம் செமத்தியான லாபம் பார்த்துவிடலாம் என்ற நம்பிக்கையில், முதல்வருக்கு நன்றி தெரிவித்து நடிகர் விஜய் பெயரிலான மக்கள் இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் ஆளுயர போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
சுயநலத்துடன் முதல்வரை சந்தித்து வேண்டுகோள் விடுத்ததுடன், அதையும் விளம்பரப்படுத்தி, ஆதாயம் தேடிக் கொள்ள நடிகர் விஜய் மேற்கொண்ட முயற்சி அத்தனையும் கேலிக்குரியதாக மாறியிருப்பது விஜய் ரசிகர்களிடம் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மூட்டை தூக்கும் தினக்கூலிகள் உட்பட அன்றாடக் காஞ்சிகள் கூட தன்மானத்தை இழக்க துணிவதில்லையே.. கொண்ட கொள்கைக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணிக்கும் மாந்தர்கள் வாழும் பூமியில், வீர வசனம் பேசும் நடிகர்களுக்கு தன்மானம் என்பது துளியும் இல்லாமல் போவது நியாயமா? என்பதுதான் பொதுமக்களின் கேள்வியாக இருக்கிறது.