Sun. Nov 24th, 2024

சென்னை உயர்நீதிமன்றம் கருத்து…

திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்குவது நல்லதல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

கொரோனோ தடுப்பு நெறிமுறைகளின்படி திரையரங்குகளில் 50 சதவிகித இருக்கைக்கு தமிழக அரசு ஏற்கெனவே அனுமதியளித்திருந்தது. பொங்கல் பண்டிகையையொட்டி நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் வெளியாகுகிறது. இதனையொட்டி, 100 சதவிகித இருக்கைக்கு அனுமதியளிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து விஜய் கோரிக்கை விடுத்திருந்தார். இதனைத்தொடர்ந்து, திரையரங்குகளில் 100 சதவிகிதம் பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு மருத்துவ நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தியேட்டர்களில் 100 % இருக்கைக்கு அனுமதி என்பது தற்கொலைக்கு சமமான முடிவு என காட்டமாக கருத்து தெரிவித்தனர். இதனிடையே கொரோனோ தடுப்பு நெறிமுறைகளுக்கு மாறாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று மத்திய அரசும் தலைமைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பியிருந்தது.

இதனிடைய, தமிழக அரசின் அறிவிப்புக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில், வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இருதரப்பு விசாரணைக்குப் பின்னர், பள்ளிகள் மூடியிருக்கும்போது தியேட்டர்களில் 100% ரசிகர்களை அனுமதிப்பது நல்லதல்ல என்றும் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு உத்தரவு கருத்து தெரிவித்துள்ளது. மேலும், பள்ளிகள் மூடியிருக்கும்போது தியேட்டர்களில் 100% அனுமதியா? – என்றும் கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, வரும் 11 ஆம் தேதி வரை 50 சதவிகித இருக்கைக்கு மட்டுமே அனுமதி வழங்க முடியும் என்றும் அன்றைய தினம் தமிழக அரசு பதில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.