Sun. Nov 24th, 2024

கோயில் வளாகத்தில் நேர்ந்த கொடூரம்….

நாகை தோப்பு வெளிப்பாளையம் பகுதியை சேர்ந்த வேதையன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால், இவரது மனைவி சந்திரா (40), தங்களது 2 பெண் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். கட்டட வேலைக்குச் சென்று தனது இரண்டு மகள்களையும் வளர்ந்து வருகிறார். இரவு நேரத்தில், தனது சகோதரி வீட்டுக்கு சென்று தூங்கி வந்தார். வழக்கம்போல, நேற்று இரவு சகோதரி வீட்டுக்கு தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த அருண்ராஜ் (25), ஆனந்த் (26) ஆகிய 2 பேர் சந்திராவை பின்தொடர்ந்து சென்று, அவரது வாயில் துணியை திணித்து, கடுமையாக தாக்கி அருகில் உள்ள பிள்ளையார் கோவில் வளாகத்துக்கு தூக்கிச் சென்றனர். அங்கு இருவரும் சந்திராவை பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இதில் சந்திரா மயங்கி விழுந்தார். இரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணி வரை மாறிமாறி பாலியல் சித்ரவதை செய்துள்ளனர். பின்னர், அவரை அங்கேயே விட்டுவிட்டு சந்திராவின் சகோதரி வீட்டுக்குச் சென்ற அருண்ராஜும், ஆனந்த்தும் நடந்த சம்பவத்தை கூறியதுடன், இதுபற்றி யாரிடமாவது புகார் தெரிவித்தால், உங்களை உயிரோடு விட மாட்டோம் என கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பி சென்றனர்.

தகவலைகேட்டு அதிர்ச்சியடைந்த சந்திராவின் சகோதரியும் அவரது கணவரும் மயக்கநிலையில் இருந்த சந்திராவை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.சந்திராவின் புகாரின்பேரில், வழக்குப்பதிவு விசாரணையை துரிதப்படுத்திய வெளிப்பாளையம் காவல்நிலைய ஆய்வாளர் தியாகராஜன், தலைமறைவாக இருந்த அருண்ராஜ், ஆனந்த் ஆகிய 2 பேரை கைது செய்தார்.