அதிமுகவுடன் எப்போதுமே கூட்டணி வேண்டாம் என்பதில் திட்டவட்டம்..
தாரை.வே.இளமதி., சிறப்புச் செய்தியாளர்…
நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், ஆளும்கட்சியான திமுக தலைமையிலான கூட்டணி, உற்சாகமாக தேர்தலை எதிர்கொண்டுள்ளது. தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் முனைப்பு காட்டி வரும் திமுக தலைமை, கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தையின் முதல் சுற்றை விரைவில் நிறைவு செய்யவுள்ளது.
ஆனால், திமுக கூட்டணிக்கு எதிராக பலம் பொருந்திய கூட்டணியுடன் களம் காண வேண்டிய பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, தங்கள் தலைமையில் இணைந்து போட்டியிட விரும்பும் கட்சிகளை அடையாளம் காண முடியாமல் திணறிக் கொண்டிருப்பதுதான் பரிதாபம்.
அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்தால் ஒன்றிரண்டு தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்ற போதிலும், மத்திய பாஜக அரசுக்கு எதிராக தேர்தல் நிலைப்பாடு எடுத்திருக்கும் எடப்பாடி பழனிசாமியுடன் இணைவதற்கு, திமுக எதிர்ப்பு நிலையில் உள்ள பல்வேறு கட்சிகள் மிகவும் தயக்கம் காட்டி வருகின்றன.
அதிமுக வரலாற்றில், இன்றைய நேரத்தில் எதிர்கொண்டிருக்கும் சவால்களைப் போல, இதற்கு முந்தைய எந்தவொரு தேர்தல் காலத்திலும் அதிமுக எதிர்கொண்டதே இல்லை. ஒட்டுமொத்தமாக அதிமுகவை தனிமைப்படுத்தும் வகையில்தான், திமுகவுக்கு எதிரான மனநிலையில் உள்ள அரசியல் கட்சிகள், அதிமுகவுடன் கூட்டணி சேருவதற்கு தயக்கம் காட்டி வருகின்றன என்பது, தமிழகம் இதுவரை கண்டிராத தேர்தல் கால விசித்திரமாகும்.
பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவை விட, கட்டமைப்பிலும், ஆதரவு வாக்கு சதவீதத்திலும், அதிருப்தி வாக்குகளை அறுவடை செய்வதிலும் மிகவும் பின்தங்கியிருக்கும் பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்வதற்கு, ஏற்கெனவே அதிமுக கூட்டணியில் இருந்த பல கட்சிகள் முனைப்பு காட்டி வருவதால், பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைமை மிகுந்த உற்சாகம் அடைந்திருக்கிறது.
ஊழல் கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவுக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சி தலைமையில் தனி கூட்டணி அமைய வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்து வருகிறார் தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை. தனது தலைமையிலான பாரதிய ஜனதா கட்சிக்கு, தமிழ்நாட்டு மக்களிடம் அமோக ஆதரவு கிடைத்து வருகிறது என்று தமிழ்நாட்டு பாஜக தலைவர்களை மட்டுமல்ல, அகில இந்திய பாஜக தலைவர்களையும் நம்ப வைத்துள்ள கே.அண்ணாமலை, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையில் தான் கூட்டணி அமைய வேண்டும். பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் கூட பாஜக தலைமையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் அண்ணாமலையின் தேர்தல் கால திட்டமாக இருந்து வருகிறது என்கிறார்கள் அவருக்கு மிக மிக நெருக்கமான அரசியலுக்கு அப்பாற்பட்ட நலம் விரும்பிகள்.
நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கு 5, 6 மாதங்களுக்கு முன்பே தெளிவாக திட்டமிட்டு, அதற்கான அறிக்கையை பாஜக மேலிட தலைவரிடம் வழங்கிவிட்டார் கே.அண்ணாமலை என்று கூறும் அவரின் நலம் விரும்பிகள், எம்பி தேர்தலில், பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் இணைந்து களம் கண்டு வெற்றி பெறும் அனைத்துக் கட்சிகளுக்கும் பிரதமர் மோடி தலைமையில் 3 வது முறையாக அமையும் மத்திய பாஜக ஆட்சியில் அமைச்சர் பதவி உறுதியாக கிடைக்கும் என்ற உத்தரவாத்தை அண்ணாமலை வழங்கியிருக்கிறார் என்றும் கூறுகிறார்கள் அவரது நண்பர்கள்.
மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்க வேண்டும் என்ற தாகம் கொண்ட பாமக, தேமுதிக, தமாகா, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகள், பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி என்பதை பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றே மன்றாடி வருகிறார்கள்.
எடப்பாடி பழனிசாமியை தவிர்த்து அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட, மூன்றாவது முறையாக பாஜக தலைமையில் தான் மத்தியில் ஆட்சி அமையும் என்று வெளிப்படையாகவே கூறி வருகிறார்கள்.
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் பாஜக அரசில், அமைச்சராக பதவியேற்க வேண்டும் என்ற ஆசை கொண்டவர்களாக, அதிமுக முன்னணி நிர்வாகிகள் பலர் இருக்கிறார்கள் என்று வாக்குமூலமே அளிக்கிறார்கள் இபிஎஸ்ஸுக்கு மிக நெருக்கமான முன்னணி தலைவர்கள்.
மத்தியில் மூன்றாவது முறையாக பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி அமைவது உறுதியென முழுமையாக நம்பிக்கை கொண்டிருக்கும் திமுக கூட்டணிக்கு எதிரான தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் பலர், பிரதமர் மோடி தலைமையிலான அரசில் எப்படியாவது மத்திய அமைச்சர் ஆகும் வாய்ப்பு உருவானால், அப்படிபட்ட அதிர்ஷ்டத்தை ஒருபோதும் தவறவிட்டு விடக் கூடாது என்று துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழக பாரதிய ஜனதா கட்சி முன்னணி தலைவர்களைப் போல, தமிழகத்தில் உள்ள பிற அரசியல் கட்சித் தலைவர்களும் மத்திய அமைச்சர் கனவோடு வாழ்ந்து கொண்டிருக்கும் நேரத்தில், தங்க தாம்பாளத்தில் கிடைக்கவுள்ள மத்திய அமைச்சர் பதவியை, ஒரு சதவீதம் கூட விரும்பாத ஒரே ஒரு அரசியல் தலைவர், தமிழ்நாட்டில் இருக்கிறார் என்றால் வியப்பாக இருக்கிறது அல்லவா என்று புதிர் போடுகிறார்கள் பாஜக மூத்த நிர்வாகிகள்.
மத்திய அமைச்சர் பதவியை நூறு சதவீதம் வெறுக்கிறார் அண்ணாமலை என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறார்கள் அவரின் நலம் விரும்பிகள்.
மத்திய அமைச்சர் பதவி மீதான வெறுப்புக்கு முக்கிய காரணமே, தமிழ்நாட்டு அரசியலை கைவிட வேண்டியிருக்கும் என்பதுதான் என்று கூறும் அவர்கள்
தமிழ்நாட்டை விட்டுவிட்டு தேசிய அரசியலுக்கு ஒருபோதும் செல்ல மாட்டேன் என்று அண்ணாமலை பிடிவாதம் காட்டி வருகிறார் என்கிறார்கள்.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் எவ்வளவோ வற்புறுத்தியும், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று அண்ணாமலை திட்டவட்டமாக கூறிவிட்டார் என்கிறார்கள் அவரின் விஸ்வாசமிக்க சிஷ்யர்கள்.
நாடாளுமன்றத் தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுவதற்கு தயார் என்றால், தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் எந்தவொரு தொகுதியை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம் என்றுகூட பாஜக மேலிட தலைவர்கள் ஆசை காட்டியிருக்கிறார்கள்.
ஆனால், மேலிட தலைவர்களின் அறிவுரைகளை ஏற்க மறுத்துவிட்ட அண்ணாமலை, மத்திய அமைச்சர் பதவி மீதோ, தேசிய அரசியலில் பங்கெடுக்க வேண்டும் என்ற விருப்பமோ சிறிதளவும் இல்லை என்று உறுதிபட கூறிவிட்டார் என்கிறார்கள்.
மத்திய அமைச்சர் பதவி மீது அண்ணாமலைக்கு வெறுப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக ப.சிதம்பரத்தின் அரசியல் வாழ்க்கைதான் அமைந்திருக்கிறது என்று சொன்னால், அதிர்ச்சியடையாதவர்கள் பாரதிய ஜனதா கட்சியில் கூட இருக்க மாட்டார்கள் என்று புதிய குண்டை தூக்கிப் போடுகிறார்கள் அண்ணாமலையின் அரசியல் ஆலோசகர்கள்.
ப.சிதம்பரத்திற்கு இருக்கும் அரசியல் ஞானத்திற்கும், திறமைக்கும், பொருளாதாரம், சட்டம் உள்ளிட்ட துறைகளில் இருக்கும் ஆளுமைத்திறனுக்கும், தமிழ்நாட்டில் மட்டுமே அரசியல் செய்திருந்தால், தமிழ்நாட்டில் பல ஆண்டுகளுக்கு முன்பே திராவிட ஆட்சிகளுக்கு முடிவு கட்டியிருக்க முடியும் என்பதுதான் அண்ணாமலையின் ஆழ்மனதில் படிந்திருக்கும் எண்ணமாகும்.
தேசியம் வழியாக தமிழ்நாட்டு அரசியலை முன்னெடுத்தது ப.சிதம்பரம் செய்த மிகப்பெரிய தவறு என்று அண்ணாமலை அடிக்கடி கூறி வருகிறார்.
2014 ம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போதுதான் ப.சிதம்பரத்திற்கு அரசியல் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு புத்தியில் உரைத்து இருக்கிறது. தமிழ்நாடு எனும் கண்ணாடி மூலம் தான் இந்தியாவை பார்ப்பேன் என்று அப்போதுதான் முழக்கமிட்டார் ப.சிதம்பரம். ஆனால், காலம் கடந்து தோன்றிய புத்தியால், ஒரு நன்மையும் ஏற்பட்டுவிடவில்லை என்பது அண்ணாமலையின் மதிப்பீடாக இருக்கிறது என்கிறார்கள்.
காலம் கடந்து எடுத்த முடிவால், ப.சிதம்பரத்திற்கு தமிழ்நாட்டு அரசியலும் கை கொடுக்கவில்லை. தேசிய அரசியலும் கை கொடுக்கவில்லை. இளம் வயதில், மத்தியில் அமைச்சராக பதவி வகித்த காலத்தில் கிடைத்த மரியாதையும், செல்வாக்கும், வாழ்வின் நிறைவுப் பகுதியை எட்டியிருக்கும் ப.சிதம்பரத்திற்கு இன்றைய தேதியில் கைகொடுக்கவில்லை என்பதுதான் அண்ணாமலை நினைவுக்கூரும் கருத்தாகும் என்கிறார்கள்.
ப.சிதம்பரத்தின் அரசியல் வாழ்வை பின்பற்றுபவர்கள் இன்றைக்கு தமிழ்நாட்டிலும் இல்லை. தேசிய அளவிலும் ஒருவர் கூட இல்லை. அரசியல் அனாதை என்று சொல்லும் அளவிற்கு ப.சிதம்பரத்தின் நிலைமை இன்றைக்கு மாறியிருப்பதற்கு அவர் வகுத்துக் கொண்ட தேசிய அரசியல் பாதைதான் என்று அடிக்கடி கூறும் அண்ணாமலை, ப.சிதம்பரம் செய்த தவறை தான் ஒருபோதும் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்யும் மனவுறுதியோடு கூறி வருகிறார் என்கிறார்கள் அவரது நலம் விரும்பிகள்.
தமிழ்நாட்டு அரசியலை விட்டு ஒருபோதும் விலக மாட்டேன் என்ற உறுதி பூண்டிருக்கும் அண்ணாமலை, ஊழலில் ஊறிப் போன இரண்டு திராவிட கட்சிகளையும் முடக்கிப் போடுவதுதான் தன்னுடைய வாழ்நாள் லட்சியம் என்று உறுதிகாட்டிக் கொண்டிருக்கிறார். அதன் காரணமாகதான் திராவிட அரசியலை ஆவேசமாக எதிர்த்துக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள் அண்ணாமலை பாதையில் பயணிக்கும் பாஜக இளைஞரணி நிர்வாகிகள்.
ப.சிதம்பரத்தின் அரசியல் வாழ்க்கையில் இருந்து பாடம் கற்றுக் கொண்டிருப்பதாக அண்ணாமலை கூறி வருவதை முழுமனதோடு வரவேற்க முடியாமல் தவிக்கிறார்கள் அவரது அரசியல் ஆலோசகர்கள்.
தமிழக அரசியலில் ப.சிதம்பரம் செல்வாக்கு இழந்து இருந்தாலும் கூட, மத்திய அமைச்சராக பதவி வகித்த காலத்தில் ப.சிதம்பரம் வெளிப்படுத்திய ஆளுமைத்திறனை,அரசியல் எதிரிகள் கூட விரும்பும் அரசியல் நாகரிகத்தை போற்றக் கூடியவர்கள், தமிழ்நாட்டை கடந்து நாடு முழுவதும் பரவியிருக்கிறார்கள்.
இன்றைய தேதியில் மட்டுமல்ல, எதிர்காலத்திலும் தலைவர் என்ற மரியாதையுடனும், சிறந்த நிர்வாகி என்ற புகழையும் பெற்றவராக நிலைக்க வேண்டும் என்றால், வெறும் திராவிட இயக்க எதிர்ப்பு மட்டுமே அண்ணாமலைக்கு கை கொடுக்காது.
வெற்று ஆவேசக் கூச்சல்களை முழுமையாக கைவிட்டுவிட்டு, இளம் தலைமுறையினரை பண்படுத்தும் அறிவார்ந்த அரசியலையும், சொல்லிலும் செயலிலும் நேர்மையுடனும் செயல்பட தொடங்கினால், வரும் கால தமிழக அரசியலில் நிரந்தர இடம் கிடைப்பதற்கான வாய்ப்பு நிச்சயம் உருவாகிவிடும் என்று கே.அண்ணாமலைக்கு அனுதினமும் அவரது நலம் விரும்பிகள் பாடம் நடத்தி வருவதாக கூறுகிறார்கள் அண்ணாமலையின் வளர்ச்சியில் அக்கறையுள்ள கொங்கு சமுதாயத்தைச் சேர்ந்த பிரபலங்கள்.