Sat. May 18th, 2024

லட்சக்கணக்கான தேமுதிக தொண்டர்களை கண்ணீரில் தத்தளிக்க வைத்த கேப்டன் விஜயகாந்த்திற்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தாமாக முன்னெடுத்த மரியாதைக்குரிய செயல்பாடுகள், அரசியல் மாச்சர்யங்களை கடந்து அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.
மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியோடு உயிரோடு இருந்த காலத்தில் இருந்தே, திமுகவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகிறார் யூ டியூப்பர் மாரிதாஸ்.


விஜயகாந்த் மறைவையொட்டி, உண்மையான அஞ்சலி செலுவதற்கு கூட நேரத்தை செலவிடாமல், மாரிதாஸ், விஜயகாந்த் உயிரோடு இருந்த காலத்தில் திமுக செய்த துரோகத்தை அதிகமாக வெளிச்சம் போட்டு காட்டுவதற்கு விஜயகாந்த்தின் மரணத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
திமுக ஆட்சிக்காலத்தில்தான் நடிகர் விஜயகாந்த்தின் கோயம்பேடு திருமணம் இடிக்கப்பட்டது என்பதை, சமூக வலைதளங்களில் இரண்டு நாட்களாக பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
பெரியளவில் மக்களை சென்றடையாத திமுக மீதான வெறுப்பு அரசியலை ஊதி யிருக்கிறார் மாரிதாஸ்.


கோயம்பேடு திருமண மண்டபம் அரசியலுக்கு காரணங்களுக்காகத்தான் இடிக்கப்பட்டது என்று கொந்தளித்த விஜயகாந்த், அன்றைக்கு ஆட்சியில் இருந்த திமுக அரசின் துஷ்பிரயோகத்திற்கு அப்போதே கடுமையாக கண்டனம் தெரிவித்திருந்தார். 2016 சட்டமன்றத் தேர்தலின் போது திமுக கூட்டணியில் விஜயகாந்த் இணையாததால் ஏற்பட்ட ஆத்திரத்தின் காரணமாகவே விஜயகாந்தின் சொத்துக்கள் மீது குறி வைக்கப்பட்டது.


அன்றைய தேதியில் மத்திய அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலு, மேம்பாலம் கட்டுவதற்கு இடைஞ்சலாக உள்ளது என்ற காரணத்தை கூறி, விஜயகாந்திற்கு சொந்தமான கோயம்பேடு திருமண மண்டபத்தின் பெரும்பகுதியை இடித்து தள்ளினார்.
70 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பை சந்திக்க நேரிட்டது என்று மனம் நொந்து போனார் விஜயகாந்த். அரசியல் பழிவாங்குதலை நேரடியாக எதிர்கொண்ட விஜயகாந்த், 2016க்குப் பிறகு திமுகவையும், அதன் தலைவர் கலைஞர் மு.கருணாநிதியையும் கடுமையாக எதிர்த்து அரசியல் செய்து வந்தார்.


கலைஞர் மு.கருணாநிதி மறைந்த நேரத்தில், உடல் நலம் குன்றி இருந்த போதும், பழைய பகையை மறந்துவிட்டு, கலைஞர் நினைவிடத்தில் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார் விஜயகாந்த்.
திமுகவின் தலைவராகவும், திராவிட மாடல் ஆட்சியின் முதல் அமைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்ட மு.க.ஸ்டாலின், பழைய பகையை எல்லாம் மறந்துவிட்டு, விஜயகாந்த் மீது உண்மையான பாசத்தை செலுத்தினார்.
2019 மற்றும் 2021 ஆகிய இரண்டு தேர்தல் காலங்களிலும் தேமுதிகவை, திமுக கூட்டணியில் சேர்ப்பதற்கு மு.க.ஸ்டாலின் முன் வந்தாலே போதும், விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, அவரின் சகோதரர் சுதீஷ் ஆகியோர் பேராசையுடன் நிபந்தனைகளை முன் வைத்ததால், விஜயகாந்த் உயிருடன் இருக்கும் வரை திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.
கேப்டன் விஜயகாந்த் காலமான செய்தியை அறிந்தவுடனே, முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைந்து சென்று, விஜயகாந்த் உடலுக்கு மரியாதை செலுத்தினார். விஜயகாந்தின் குடும்பத்தினர், தேமுதிக நிர்வாகிகள் கோரிக்கை வைப்பதற்கு முன்பாகவே, விஜயகாந்தின் உடல் அடக்கம், அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். மறைந்த கலைஞர் வழியிலேயே மக்களால் போற்றப்பட்ட அரசியல் தலைவர்களுக்கு உரிய மரியாதையை வழங்கும் மாண்பை, முதல்வர் மு.க.ஸ்டாலினும் வெளிப்படுத்தியதை பார்த்து, திரையுலக பிரபலங்கள் நெகிழ்ந்து போனார்கள்.
கோயம்பேடு திருமண மண்டபத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக விஜயகாந்தின் உடல் வைக்கப்பட்டது. மிகவும் குறுகிய இடத்தில் அஞ்சலி செலுத்துவதற்கு திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் சிரமப்படுகிறார்கள் என்ற தகவல் கிடைத்தது, விஜயகாந்தின் ஒட்டுமொத்த வாழ்விற்கு அங்கீகாரம் என்ற வகையில், தீவுத்திடலில் இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு குறுகிய நேரத்திலேயே அனுமதி வழங்கி, பொதுமக்கள் சிரமம் இன்றி அஞ்சலி செலுத்த விரைவான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு செய்தது.
கோயம்பேட்டையிலேயே விஜயகாந்தின் உடல் வைக்கப்பட்டிருந்தால், இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு, கூட்ட நெரிசலால் பல்வேறு சிக்கலை உருவாக்கியிருக்கும்.
லட்சக்கணக்கான மக்களின் அன்பிற்கு உரிய விஜயகாந்தின் உடல் அடக்கம், மிகுந்த கண்ணியத்திற்குரிய வகையில் நடைபெற வேண்டும் என்று விரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தீவுத்திடலில் இருந்து கோயம்பேடு திருமண மண்டபம் வரை இறுதி ஊர்வலம் நடைபெறும் வகையில், தமிழ்நாடு அரசு உயர் அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளை இரவோடு இரவாகப் பணியாற்றிய விஜயகாந்தின் மனைவி பிரேமலதா உருகிப் போனார் என்கிறார்கள் மூத்த ஊடகவியலாளர்கள்.
கலைஞர் மு.கருணாநிதி காலத்தில் மனம் உடைந்து போனார் விஜயகாந்த் என்பது மறைக்க கூடிய செய்தி அல்ல. ஆனால், விஜயகாந்தின் மறைவையொட்டி, தீவுத்திடலில் இறுதி அஞ்சலி செலுத்த அனுமதி வழங்கியதிலும், பல கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக செல்வதற்கு தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்ததன் மூலம் கலைஞர் காலத்தில் ஏற்பட்ட காயத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மருந்து தடவியிருக்கிறார். விஜயகாந்திற்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு தீவுத் திடலைப் பயன்படுத்தி அனுமதி வழங்கியதின் மூலம் லட்சக்கணக்கான மக்களிடம் புண்ணியம் தேடிக் கொண்டிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
முதல்வர் மு.க.ஸ்டாலினைப் போலவே அவரது புதல்வரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினும், விஜயகாந்த் மீதான மரியாதையை வெளிப்படுத்தும் வகையில், உண்மையான அக்கறை காட்டியிருக்கிறார். இறுதி அஞ்சலியும் இறுதி ஊர்வலமும் மிகுந்த கண்ணியத்துடன் நடைபெறுவதற்கு பிரேமலதா விருப்பத்தின் பேரிலேயே தமிழக அரசின் உயரதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கியதுடன் களத்திலேயே உதயநிதி ஸ்டாலின் நின்றார், விஜயகாந்தின் மீது அவருக்கு உள்ள மரியாதையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என்கிறார்கள் தேமுதிக மூத்த நிர்வாகிகள்.
நன்றி நண்பர்களே.. மற்றொரு சிறப்பு செய்தி தொகுப்புடன் மீண்டும் சந்திக்கிறோம்.