சோழர் கால வரலாற்றுப் பெருமைகளை பேசும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை போல தமிழர்களின் வரலாற்று காவியமா, லியோ திரைப்படம்.
நடிகர் விஜய் பல நூறு கோடி ரூபாய் சம்பாதிப்பதற்கு எதற்காக தமிழக அரசு பணிந்து போக வேண்டும் என்ற கேள்வியை சமூக ஆர்வலர்கள் ஆவேசமாக எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
லியோ திரைப்பட விவகாரத்தில் தொடக்கம் முதலே நடிகர் விஜயின் ஒவ்வொரு செயல்களும் அரசியல் ரீதியாகவே இருந்து கொண்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டு பல தளங்களில் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது
அரசியல் அரிதாரம் பூச ஆசைப்படம் நடிகர் விஜய், நேரடியாக அரசியலுக்கு வருவதற்கு துணிவு இல்லாமல், திரைப்படங்கள் மூலம் அரசியல் பேசிக் கொண்டிருப்பது, இளம்தலைமுறையைச் சேர்ந்த விஜய்க்கு பெருமையை தேடி தந்துவிடாது என்று குமறுகிறார்கள் திரைப்பட தயாரிப்பாளர்கள்.
கடந்த ஒரு மாதத்தில் பிரபல நடிகர்கள் நடித்த திரைப்படங்கள் உள்பட எண்ணற்ற திரைப்படங்கள் வெளியாகி வியாபார ரீதியாக மட்டுமின்றி பொதுமக்களிடமும் முழுமையாக வரவேற்பும் கிடைக்காமல் போய்விட்டது என்று கவலையோடு கூறும் புதிதாக திரைப்பட தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் வர்த்தகர்கள், நடிகர் விஜய் வாய் திறந்து குறைகளை கூறாத போதும் அவருக்காக விழுந்து விழுந்து ஆதரவு தருபவர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள் என்று வேதனைபடுகிறார்கள்.
நடிகர் விஜயின் லியோ படத்திற்கு சிறப்பு காட்சி நடத்தி கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியதே பெருமைக்குரிய விஷயம் என்கிற போது, விடியற்காலை 4 மணிக்கு தான் திரைப்படத்தை வெளியிடுவோம் என்று லியோ படத் தயாரிப்பாளர்கள் அடம் பிடித்துக் கொண்டிருப்பது ஏற்புடையதல்ல என்று கடுமையாக எதிர்ப்புக்குரல் எழுப்புகிறார்கள் திரைப்பட தயாரிப்பாளர்களில் ஒரு பிரிவினர்.
லியோ படத்தின் பாடல்கள் வெளியிடும் நிகழ்ச்சியை, நேரு உள்விளையாட்டு மைதானத்தில் நடத்துவதற்கு ஆசைப்படாமல், சென்னை புறநகரில் தனியார் கல்லூரிகளிலோ அல்லது 234 தொகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்குவதற்கு பயன்படுத்தப்பட்ட தனியார் திருமண மண்டபங்களிலோ நடிகர் விஜய் ஆர்வம் காட்டியிருக்க வேண்டும்.
அதைவிடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடனேயே வாகன போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரு உள்விளையாட்டு அரங்கை தேர்ந்தெடுத்தார்கள் லியோ தயாரிபபாளர்கள். பாதுகாப்பு காரணங்களை காட்டி காவல்துறை அனுமதி மறந்த போது, அதை பெருந்தன்மையாக ஏற்றுக் கொள்ளாமல், அரசியலுக்கு வருகிறார் விஜய். அமைச்சர் உதயநிதிக்கு போட்டியாக வந்துவிடுவார் என்றெல்லாம் கூறி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்கு காரணமாக அமைந்தவர் நடிகர் விஜய்.
லியோ ஆடியோ லான்ஞ் விவகாரத்தை வைத்து பத்து நாட்களுக்கு மேலாக யூ டியூப்புகளில் திமுக அரசுக்கு எதிராக அவதூறுகள் வரிசை கட்டி எழுந்த போதும் கூட, திமுக அரசு மீது எந்தவொரு தவறும் இல்லை என்று நடிகர் விஜய் நேரடியாக எதுவும் கூறவில்லை.
500 கோடி ரூபாய்க்கு மேலாக லியோ சினிமா வியாபாரம் ஆகிவிட்டது என்று தகவல்கள் கசிந்த நேரத்தில், நடிகர் விஜய்க்கு மட்டும் சில நூறு கோடி ரூபாய் வருமானம் கிடைத்திருக்கிறது என்றும் திரையுலகத்தைச் சேர்ந்தவர்களே கூறிக் கொண்டிருக்கிறார்கள். இப்படிபட்ட பின்னணியோடு, லியோ சினிமாவை வைத்து திமுக அரசோடும், அமைச்சர் உதயநிதியோடும் நடிகர் விஜய் மோதிக்கொண்டிருப்பது ஒட்டுமொத்த திரையுலகத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்று ஆவேசமாக குரல் எழுப்புகிறார்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள்.
நடிகர் விஜயும், லியோ படத் தயாரிப்பாளரும் பல நூறு கோடி ரூபாய் சம்பாதிப்பதற்கு தமிழக அரசு எதற்கு சலுகை காட்ட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோபமாக கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். வழக்கமாக தீபாவளி, பொங்கல், தமிழ் புத்தாண்டு ஆகிய விழா காலங்களில்தான் சிறப்பு காட்சிகள் தியேட்டர்களில் வெளியாகும். ஆனால், லியோ படத்திற்கு சிறப்பு காட்சி திரையிடுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று லியோ பட தயாரிப்பாளரோ, நடிகர் விஜயோ தமிழக அரசுக்கு நேரடியாக கோரிக்கை வைக்கவில்லை.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் கூட்டி பிரபல இயக்குனரான பாரதி ராஜா மூலம் லியோ படத்திற்கு சிறப்பு காட்சி வெளியிடுவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். திமுக அரசு மீதும் அமைச்சர் உதயநிதியும் மீதும் அவதூறுகளை பரப்பியதை பற்றி பொருட்படுத்தாமல் பெருந்தன்மையாக லியோ சினிமாவுக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கியிருக்கிறார் முதல்வர் மு.கஸ்டாலின்.
விடியற்காலை 4 மணி என்பது ரசிகர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த பொதுமக்களுக்கும் பாதுகாப்பு தருவது சிரமம் என்பதால், காலை நேரத்தில் நடத்திக் கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறியிருக்கிறது திமுக அரசு. ஆனால், அரசின் அறிவுறுத்தலுக்கு கட்டுப்படாமல், நீதிமன்றத்திற்கு சென்றது லியோ தயாரிப்பாளர்கள்.
ஒரு திரைப்படத்தை தயாரித்துவிட்டால், அதை எப்போது வேண்டுமானாலும் வெளியிடுவோம். அதை தமிழக அரசு கேள்வி கேட்கக் கூடாது என்ற திமிர், திரையுலகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அதிகமாகவே இருக்கிறது என்கிறார்கள். நடிகர் விஜய் போன்ற பிரபலங்கள் நடிக்கும் திரைப்படங்களை சாமான்யர்கள் பார்த்து ரசிக்கும் அளவுக்கு சினிமா டிக்கெட் கட்டணங்கள் நிர்ணயிக்கப்படுவதில்லை. சினிமா ரீலிஸ் ஆகி முதல் 20 நாட்களில் கொள்ளை லாபம் பார்க்கும் அளவுக்கு பேராசை கொண்டவர்களாக திரையுலகினர் மாறிவிட்ட பிறகு, திரையுலகின் மிரட்டல்களுக்கு எல்லாம் தமிழ்நாடு அரசு,பணிந்து போக கூடாது என்பதே பலதரப்பட்ட மக்களின் வேண்டுகோளாக இருக்கிறது.
ஒட்டுமொத்தமாக, லியோ சினிமா விவகாரத்தில் தொடக்கம் முதலே நடிகர் விஜய்தான், அநாகரிகமாக நடந்து கொண்டு வருகிறார். நடிகர் விஜயை வைத்து யூ டியூப்பர்கள் பொறுப்பற்ற முறையில் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், விஷமத்தனமாக பேசிக் கொண்டிருப்பதை தமிழ் தேசியத்தில் ஆழமான நாட்டம் கொண்டுள்ள ஜனநாயகவாதிகள் கூட ரசிக்கவில்லை என்பதுதான் உண்மை
லியோ பட விவகாரத்தில் நடிகர் விஜயும், தயாரிப்பாளரும் நடந்து கொள்வது வருத்தம் அளிக்கும் வகையில்தான் உள்ளது என்று பகிரங்கமாகவே கூறி வருகிறார்கள் தியேட்டர் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள். லியோவுக்கு எதிராகவோ முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசோ, துளியளவும் கூட உள்நோக்கத்துடன் செயல்படவில்லை என்று உண்மையை பேசிக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள். ஆனால், சீமானோ, நடிகர் விஜயை திமுக அரசு சீண்டிப் பார்க்கிறது என்று விஷத்தை கக்குகிறார்.
நடிகர் விஜய் அரசியலுக்கு நுழைந்தால் கடுமையாக பாதிக்கப்படப் போவது முதலில் சீமான்தான். அந்த பயத்தை வெளிப்படுத்திக் கொள்ள முடியாமல்தான் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுப்பதை போல திமுக அரசு மீது புழுதி வாரி தூற்றிக் கொண்டிருக்கிறார் சீமான்.
திமுக அரசுக்கு எதிராக நாள்தோறும் புழுதி தூற்றுவதைப் போலவே, நடிகர் விஜயின் லியோ விவகாரத்திலும் சீமான் குற்றம் சாட்டுகிறார்.
சீமானைப் போல நடிகர் விஜய் ஏன் திமுக அரசு மீது நேரடியாக குற்றம் சுமத்த தயங்குகிறார்.
நூறு கோடி ரூபாய்க்கு மேல் சம்பளத்தை பெற்றுக் கொண்டிருக்கும் விஜய்க்கு இல்லாத அக்கறை சீமானுக்கு ஏன் வந்தது. இப்படி விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுப்பதற்கும் திமுக அரசை வசைப்பாடுவதற்கும் லியோ பட தயாரிப்பாளர், சீமானுக்கு சில லட்சம் ரூபாயை எலும்பு துண்டுகளாக தூக்கி போட்டு விட்டாரா? என்று சந்தேகத்தை எழுப்புகிறார்கள் திரையுலகத்தைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளர்கள்.
திமுக அரசுக்கு எதிராகவோ அல்லது அமைச்சர் உதயநிதிக்கு எதிராக நடிகர் விஜயை தூண்டிவிடும் கயமைத்தனத்தை சீமான் செய்தாலும் கூட அவர் பேச்சை கேட்டு ஒருபோதும் வாயை திறக்கமாட்டார் நடிகர் விஜய்.
நிறைவாக நடிகர் விஜய், தனது புதுப்படங்கள் ரீலிஸ் ஆகும்போதெல்லாம் தேவையற்ற சர்ச்சைகளை கிளப்பினால், அவர் மீது பெண்களும் மாணவர்களும் வெளிப்படுத்தி வரும் அன்பு, வெகு சீக்கிரமாக வெறுப்பாக மாறிவிடும் என்பதை நடிகர் விஜய் புரிந்து கொண்டால் அவரின் வளர்ச்சிக்கு நல்லது என்று அறிவுரை கூறுகிறார்கள் அவரது நலம் விரும்பிகள்.