Sat. Nov 23rd, 2024

சமகால பிரபல ஸ்டார்கள் அடக்கி வாசிக்கும் போது விஜய் மட்டும் துள்ளுவது ஏன்…

நல்லரசு வாசகர்களுககு அன்பு வணக்கம்…

நடிகர் விஜய்யை பற்றி நாளுக்கு நாள் வெளியாகும் செய்திகள், தமிழ்நாடு அரசியலை சூடாக்கி கொண்டிருக்கிறது.

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகிவிட்டார் நடிகர் விஜய் என்று திரையுலக ஊடகவியலாளர்கள் ஆணித்தரமாக கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படங்கள் மட்டுமல்ல, அவரைப் பற்றி வருகிற செய்திகளும் கூட விறுவிறுப்புகளுக்கு பஞ்சம் வைப்பதில்லை.

அரசியலில் குதிக்க வேண்டும் என்ற பேராசை நடிகர் விஜயக்கு வருவதற்கு முன்பே அவரது தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகருக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்திருந்தது.

தமிழ்நாட்டில் அசைக்க முடியாத அரசியல் தலைமைகளாக திகழ்ந்த மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி, தமிழ்நாட்டின் இரும்பு பெண்மணி என்று வர்ணிக்கப்பட்ட அதிமுக பொதுச் செயலாளரும் மறைந்த முதல்வருமான செல்வி ஜெயலலிதா ஆகியோர் உயிரோடு இருந்த காலத்திலேயே நடிகர் விஜயை அரசியல் எனும் காட்டாற்று வெள்ளத்தில் தூக்கி எறிய தயாரானார் எஸ்.ஏ.சந்திரசேகர்.

அப்பாவின் அரசியல் சாணக்கியதனத்தை ஏற்றுக் கொள்ள மறுத்த நடிகர் விஜய், திரைப்படங்களில் நடிப்பதில் மட்டுமே மிகவும் கவனத்தை செலுத்தி வந்தார். ஆனால், தந்தையைப் போல, நடிகர் விஜய்க்கும் அரசியல் ஆசை ஆழ்மனதில் கொழுந்து விட்டு எரிகிறது என்பதை அவரது ஒவ்வொரு புதுப்படங்களும் வெளிப்படுத்திக் கொண்டே இருந்தன.

திரைப்படங்களில் ஆட்சியாளர்களுக்கு எதிராக வசனங்களை நரம்பு புடைக்க முழங்குவதாகட்டும், புதிய சினிமாக்களின் ஆடியோ லாஞ்ச் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் குட்டி கதைகளை சொல்லி ஆளும்கட்சியினரை வெறுப்பு ஏற்றுவதிலும் நடிகர் விஜய் தனித்த ஆர்வம் கொண்டிருந்ததை தமிழ் கூறும் நல்லுலகம் கவனிக்க, கணிக்க தவறியதே இல்லை.

தலைவன் சினிமா ரீலீஸ் ஆன காலத்திலேயே நடிகர் விஜய்க்கு, முதல் அமைச்சர் பதவி மீது ஆசை வந்துவிட்டது என்பதை அப்போதைய ஆளும்கட்சியான அதிமுகவும், அதன் ஆளுமையுமான அப்போதைய முதல்வர் செல்வி ஜெயலலிதா உணர்ந்திருந்தார். தலைமை தாங்க தயாராகிவிட்டார் என்ற ஒற்றை வரி தான் அன்றைய காலத்தில் முதல்வர் செல்வி ஜெயலலிதாவை சீற்றம் கொள்ள செய்தது. அந்த சீற்றத்தை தணிக்க, கோடநாடு பங்களா முன்பு தவமாய் காத்திருந்தார் நடிகர் விஜய் என்பதெல்லாம், அவரின் ரசிகர்கள் மறந்திருப்பார்கள். ஆனால், தமிழக அரசியல் வரலாற்றில் கல்வெட்டாக, நடிகர் விஜயின் வீரத்தை பதிவு செய்து வைத்திருக்கிறது காலம்.

திரையுலகில் இருந்து அரசியலில் வெற்றிக் கொடி நாட்டியவர்கள் மறைந்த முதல்வர் எம்ஜிஆர், செல்வி ஜெயலலிதா என்ற நினைப்பில் நடிகர் விஜயும் களத்தில் குதிக்க தயாராகிவிட்டார் என்று கூறுகிறார்கள் அவருக்கு அரசியல் பாடம் நடத்தி வரும் பழம்பெரும் அரசியல் தலைவர்கள்.

சினிமா பிரபலத்தை மட்டுமே முதலீடாக வைத்துக் கொண்டு அரசியலில் ஜெயித்து விட முடியாது என்பதற்கு சமகால உதாரணம் கமல்ஹாசன். நடிப்புலகில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் கமலஹாசனின் இன்றைய பரிதாப நிலையை பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரையாக கூறுகிறார்கள் நடிகர் விஜயைப் போல தமிழ் திரையுலகில் உச்சத்தில் இருக்கும் பிரபல நடிகர்களின் ஆலோசகர்கள்.

மறைந்த முதல்வர் எம்ஜிஆர், செல்வி ஜெயலலிதா ஆகியோர் வரிசையில் மற்றொரு சினிமா பிரபலத்திற்கும் முதல் அமைச்சர் நாற்காலி தயாராகவே காத்திருந்தது.. ஆனால், அதில் அமர்ந்து அரசாட்சி செய்வதற்கான ராஜதந்திரம் இல்லாததால் மிகவும் பரிதாபத்திற்குரியவராக மாறிப் போயிருப்பவர் தேசிய முற்போக்கு திராவிடர் கழக தலைவர் விஜயகாந்த்.

அரசியலில் வெற்றி பெறுவதற்கும், நிலை நிற்பதற்கும் மக்கள் செல்வாக்கு மட்டுமல்ல, அரசியல் களத்தில் பல முனைகளில் வீசும் சூறாவளிகளை சாதூர்யமாக எதிர்கொண்டு, அறிவாற்றலால், ஆளுமைத்திறனால் செல்வாக்கை உயர்த்திக் கொள்வது என்பது சாதாரணமான அம்சம் இல்லை.

மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆரோ, செல்வி ஜெயலலிதாவே வெறும் சினிமா கவர்ச்சியை மட்டுமே நம்பி அரசியல் களத்தில் குதிக்கவில்லை. பல ஆண்டுகள் கிராமம் கிராமமாக சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து, அவர்களின் குறைகளை காது கொடுத்து கேட்டு அன்பை வெளிப்படுத்தியவர்கள். ஏழை எளிய நடுத்தர மக்களின் மனங்களில் அசைக்க முடியாத நம்பிக்கை பிறந்தால்தான், தங்களின் கஷ்டங்களை தீர்க்க வந்த தலைவர்கள் என்பதை ஆழ்மனதில் பொதுமக்கள் பதிந்து கொண்டால்தான் முதல் அமைச்சர் பதவியை தூக்கி தருவார்கள்.

அப்படிபட்ட நம்பிக்கையை நடிகர் விஜயகாந்தால கூட பெற முடியவில்லை என்கிற போது நடிகர் கமல்ஹாசன் எல்லாம் எம்மாத்திரம்.

தமிழக அரசியல் களத்தில் 2026 ஆம் ஆண்டு மிகவும் முக்கியமான காலகட்டமாகும்.

2026 சட்டமன்றத் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொண்டு முதல் அமைச்சர் பதவியில் அமர்வதற்கு இப்போது இருந்தே தயாராகி வரும் தலைவவர்கள் 5 6 பேர் உள்ளார்கள்.

இன்றைய தேதியில் ஆளும்கட்சிக்கு தலைமை ஏற்றிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் புதல்வர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2026 ஆம் ஆண்டில் திமுகவின் முதல் அமைச்சர் வேட்பாளராக களத்தில் குதிக்க உள்ளார்.

திமுகவுக்கு மாற்று அதிமுகதான் என்று இன்றைக்கும் கூட கூறிக் கொண்டிருக்கும் அதிமுக முன்னணி தலைவர்கள், அதிமுகவின் முதல் அமைச்சர் வேட்பாளராக எடப்பாடியாரை களத்தில் முன் நிறுத்துவார்கள்.

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு மத்தியில் 3 வது முறையாகவும் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி தான் அமையும். அசைக்க முடியாத தலைவராக உருமாறியிருக்கும் பிரதமர் மோடியின் செல்வாக்கைப் பயன்படுத்தி தமிழ்நாட்டில் பாஜகவை கால் ஊன்ற வைத்து, தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் நாற்காலியில் அமர்ந்து விடலாம் என்று நப்பாசையில் நடமாடிக் கொண்டிருக்கும் பாஜக தலைவர் அண்ணாமலை, ரேஸில் 2 இடத்தில் இருக்கும் அதிமுகவையே இப்போது இருந்தே சில்லு சில்லாக உடைததுக் கொண்டிருக்கிறார். 

30 லட்சம் வாக்குகளைப் பெற்று 4 வது இடத்தில் இருக்கும் நடிகர் சீமான், தமிழ் தேசியத்தை கட்டமைக்கும் லட்சியத்துடன் உலகெங்கும் பரவியிருக்கும் தமிழர்களின் ஏகோபித்த ஆதரவுடன், 2026 சட்டமன்றத் தேர்தலில் கடும் போட்டியாளராக இருப்பார் என்று ஆரூடம் கூறுகிறார்கள் அனுபவம் மிகுந்த அரசியல் ஆய்வாளர்கள்.

2021 சட்டமன்றத் தேர்தலிலேயே மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்ற முழக்கத்தோடு களத்திற்கு வந்த பாட்டாளி மக்கள் கட்சியின் இளம் தலைவர் அன்புமணி ராமதாஸும், 2026 சட்டமன்றத் தேர்தலில் முதல் அமைச்சர் பதவியை கைப்பற்றவே காய் நகர்த்தலை தொடங்கியிருக்கிறார்.

உதயநிதி, எடப்பாடியார், அண்ணாமலை, சீமான், அன்புமணி ராமதாஸ் வரிசையாக முதல் அமைச்சர் நாற்காலியை கைப்பற்றுவதற்கு துடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், திடீரென்று அரசியல் வேஷம் போட்டு ஆட்சியை பிடிப்பதற்காக இப்போதிருந்தே தயாராகி கொண்டிருக்கும் நடிகர் விஜயை, தமிழ்நாட்டு வாக்காளர்கள் அவ்வளவு எளிதாக அங்கீகரித்து விடுவார்களா என்று கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்கள்.

234 சட்டமன்றத்  தொகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு பரிசுகள் கொடுப்பதும், வாக்காளர்களை கவர்ந்து இழுக்கும் வகையில் நலத்திட்ட உதவிகள் எனும் பெயரில் வாண வேடிக்கைகளை காட்டுவதும், 2026 சட்டமன்றத் தேர்தலின் தலையெழுத்தை மாற்றி விடுமா என்ற சந்தேகம், நடிகர் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளிடமே அதிகமாக எழுந்திருக்கிறது என்கிறார்கள் மூத்த ஊடகவியலாளர்கள்.

நடிகர் விஜய்க்கு இணையாக திரையுலகில் பிரபலமானவர்கள் அஜித், சூர்யா, விக்ரம் போன்றவர்கள் எல்லாம் அரசியல் ஆசை இல்லாமல், சினிமா தொழிலே போதும் என்று ஆர்ப்பாட்டம் இல்லாமல் காலத்தை கடத்தி கொண்டிருக்கும் போது நடிகர் விஜய்க்கு மட்டும் எதற்கு இந்த விபரீத புத்தி என்று கேள்வி கேட்கிறார்கள் பழுத்த அரசியல் தலைவர்கள்.

அரசியலில் குதித்து கிராமங்கள் தோறும் கட்சியை நிறுவி, பொதுமக்களை சந்தித்து நம்பிக்கை ஏற்படுத்தி தேர்தல் களம் காண்பது என்பது சினிமா சூட்டிங்கைப் போல ஒரு சில மாதங்களில் நடைபெற கூடிய ஒன்று அல்ல.

மக்களை அன்றாடம் பாதிக்கும் பிரச்னைகளில் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதும், ஆளும்கட்சியின் தவறான அரசியல் நடவடிக்கைகளை எதிர்த்து குரல் கொடுப்பதும் ஆண்மையுள்ள அரசியல்வாதிகளுக்கு இலக்கணமாகும்.

மக்கள் செல்வாக்கோ.. ரசிகர்கள் செல்வாக்கோ.. எதை நம்பி அரசியலில் குதித்தாலும் கூட தமிழ்நாட்டு அரசியலில் காலம் காலமாக ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் கொள்கை, சித்தாந்தம் போன்ற விஷயங்களில் தெளிவான சிந்தனை இருக்கிறதா அரசியல் தலைவர்களுக்கு என்று பரிசோதித்து பார்க்கிற குணமும் தமிழக வாக்காளர்களுக்கு நிறையவே உண்டு.

அடிதட்டு மக்கள் ஆரவாரமாக கொண்டாடும் வகையில் எந்தவொரு விஷயத்தையும் முன் வைக்காத நடிகர் விஜய், நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அரசியல் கட்சியை தொடங்கி மக்களிடம் ஆதரவு திரட்ட முயன்றால், அவரின் அரசியல் அரிதாரத்திற்கு வெற்றி கிடைக்குமா என்பது மிகவும் சந்தேகத்திற்கு உரியது என்கிறார்கள் திரையுலகத்தைச் சேர்ந்த அரசியல் புள்ளிகள்.

இன்றைய தேதியில் நடிகர் விஜய் நடித்த திரைப்படங்கள் மட்டுமே அபார வெற்றி பெறவில்லை. அவரை விட அதிக வசூலை பெற்று தந்துக் கொண்டிருக்கிறது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்படங்கள். அதுபோலவே அஜித் படங்களும் பல நூறு கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆகிறது. இந்த வரிசையில் நடிகர்கள் சூர்யா, விக்ரம், விஜய் சேதுபதி போன்றவர்களும் போட்டி போட்டு கொண்டே இருக்கிறார்கள்.

நடிகர் விஜயின் ரசிகர்கள், பெரும்பாலும 20 வயதிற்குட்பட்ட சிறார்கள்தான். அவர்கள் மீது பொதுமக்களுக்கு எந்தவொரு நம்பிக்கையும் எப்போதுமே இருந்ததில்லை. அரசியலில் குதிப்பேன் என்று பல காலமாக சொல்லிக் கொண்டிருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நம்பி, 20 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிளை வழங்கி வந்த ரஜினி ரசிகர்கள் போல, நடிகர் விஜயின் ரசிகர்களுக்கு எந்தவொரு பொதுசேவை அனுபவமும் கிடையாது.

நடிகர் விஜயின் ரசிகர்கள் எப்படிபட்டவர்கள் என்பதை பொதுமக்கள் தெரிந்து கொள்ளாத நேரத்திலேயே, லியோ படத்தின் டிரைலர் வெளியான நாளில், சென்னை ரோகினி தியேட்டர் சந்தித்த கொடுமையை, மூலை முடுக்கெல்லாம் ஊடகங்கள் கொண்டு சென்று, நடிகர் விஜயின் ரசிர்கள் மீது காறி துப்ப வைத்துவிட்டாகர்ள். அண்மைக்காலமாக நடிகர் விஜய் நடித்து வரும் அனைத்து திரைப்படங்களும் சமுதாயத்திற்கு எதிரான தீமைகளை தோலுரித்து காட்டும் வகையிலேயே அமைந்திருக்கிறது.

நடிகர் விஜய் பேசும் வசனங்களும் கூட அநீதிக்கு எதிராக சூட்டை கிளப்புகின்றன. சினிமாக்களில் தன்னை ஏழை பங்காளன், சமூக போராளி போன்று வெளிப்படுத்தும் விஜயை, தனிப்பட்ட வாழ்க்கையில் எப்படிபட்டவர் என்பது இன்றைய தேதியிலும் கூட மர்மமாகவே இருக்கிறது.

அதைவிட, அவருடைய சிந்தனைகள், தமிழர் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் உள்ளனவா என்பதும் சந்தேகத்திற்குரிய ஒன்றுதான். லியோ படததில் விஜய் பேசும் வசனத்தில் இடம் பெற்றிருக்கும் ஒரு வார்த்தை, மிகவும் கீழ்த்தரமானதாக இருககிறது என்ற குற்றச்சாட்டு பல தளங்களில் எழுந்திருக்கிறது.

அந்த அநாகரிமான வார்த்தைக்கு விஜய் பொறுப்பு ஏற்றுக்கொள்ளாமல் படத்தின் இயக்குனர் மீது தூக்கிப் போட்டுவிட்டார் என்றும் கூட நடிகர் விஜயை சமூக ஆர்வலர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

அரசியல் பாதை என்பது திரைப்படம் போல மலர் பாதை அல்ல. முட்கள் நிறைந்தவை.

அரசியலில் துணிந்து குதிக்கும் போது, கட்சியை நடத்தவும் தேர்தலை சந்திக்கவும் பல ஆயிரம் கோடி ரூபாயை செலவழிக்க வேண்டியிருக்க வேண்டும்.

திரையுலகில் அசைக்க முடியாத இடத்தை பிடித்திருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனே, தமிழக அரசியலில் கால் ஊன்ற முடியாமல் அவமானப்பட்ட கதையை எல்லாம் விஜய் கேள்விபட்டது உண்டா..

திரைப்படத்தில் நடிப்பதற்கான சம்பளத்தையே சட்டத்திற்கு உட்பட்டு பெறாமல், சட்டத்திற்கு விரோதமான வகையில்தான் நடிகர் விஜய் பெற்றுக் கொண்டிருக்கிறார் என்ற குற்றச்சாட்டுகளையும் திரையுலகினரே முன்வைக்கிறார்கள்.

இப்படிபட்ட பின்னணியில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அரசியல் கட்சியை துவங்கி பிரசாரத்தை விஜய் துவங்கினால், அவருக்கு முதல் எதிரியாக களத்தில் நிற்பவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானாகதான் இருக்கும். நடிகர் விஜயின் அரசியல் நிலைப்பாட்டை மட்டுமல்ல, அவரின் தனிப்பட்ட வாழ்க்கையையும் கடுமையாக விமர்சனம் செய்வார் சீமான். அதை எல்லாம் எதிர்கொண்டு நேர்மையான அரசியல் பாதையில் பயணிக்கும் துணிச்சல் நடிகர் விஜய்க்கு இருக்குமா என்று கேள்வி எழுப்புகிறார்கள் ஜனநாயகவாதிகள்.

பொற்காசுகளை அள்ளித் தரும் திரையுலகத்திலேயே தொடர்ந்து பயணிக்காமல், மண் குதிரையான அரசியல் வாழ்க்கையை நம்பி, தேர்தல் எனும் ஆற்றில் இறக்க துடிக்கும் நடிகர் விஜய்க்கு தமிழக வாக்காளர்கள் என்னமாதிரியான பாடத்தை புகட்ட போகிறார்கள்..

முதல் அமைச்சர் கனவில் இருக்கும் இரண்டாம் கட்ட தலைவர்களான சீமான், அன்புமணி ராமதாஸ், அண்ணாமலை போன்றவர்களின் எதிர்ப்பை நடிகர் விஜய் எப்படி முறியடிப்பார்.

வரும் காலங்கள்தான் பதில் சொல்ல வேண்டும். காத்திருப்போம் நண்பர்களே..