Mon. Apr 29th, 2024

உதயநிதி ஸ்டாலினிடம் உள்துறை பொறுப்பை வழங்க வேண்டும்..

இப்படி கூக்குரல் எழுப்புபவர் மூத்த அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமியோ அல்லது முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத்து உறவினராகவே வலம் வந்து கொண்டிருக்கும் அமைச்சர் மகேஷ் அன்பில் பொய்யாமொழியோ அல்ல..

30 ஆண்டுகளுக்கு மேலான ஊடக வாழ்க்கையில் நேர்மையான விமர்சகர் என்ற புகழை சுமந்து கொண்டிருக்கும் மூத்த ஊடகவியலாளர் மணிதான்.

மூத்த ஊடகவியலாளர் மணியின் வேண்டுகோள் நியாயமானதுதான் என்பதற்கு மற்றொரு சாட்சியாகவும் இருக்கிறது உதயநிதியை பாராட்டிய சவுக்கு சங்கரின் பேட்டியும் கூட.

உதயநிதியை ஏன் துணை முதல்வராக்க வேண்டும் என்பது பற்றிய சிறப்பு செய்தி தொகுப்பை பார்வையாளர்கள் முன் வைக்கிறது நல்லரசு.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி, இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நேரத்தில், கொண்டாட்டத்தில் திளைக்க வேண்டிய மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களுக்கு பேரிடியாக அமைந்துவிட்டது விஷச் சாராய மரணங்கள்..

விஷச் சாராய மரணங்களுக்கு யார் பொறுப்பு ஏற்பது என்ற சர்ச்சையில், ஒட்டுமொத்த கோபமும், காவல்துறை மீதும் வருவாய் துறை மீதும் திரும்பியிருக்கிறது.

திமுக ஆட்சியோ.. அதிமுக ஆட்சியோ.. எல்லா காலத்திலும் கள்ளச் சாராயம்,, வற்றாத ஜீவநதியாகவே ஓடிக் கொண்டிருக்கிறது என்பதுதான் நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை.

அரசியலிலும் பொது வாழ்விலும் 60 ஆண்டுகளுக்கு மேலான மிகுந்த அனுபவம் கொண்டவரும், எளிய மக்களின் எதார்த்தை உள்வாங்கி ஆட்சியாளர்களுக்கு அறிவுரை கூறுபவருமான பழ கருப்பையாவின் கூற்றை எளிதாக புறம்தள்ளி விட முடியாது.

கிராம மக்களின் துயரங்களை போக்குவதற்கும், மனவலியை, உடல் வலியை மறைக்க செய்வதற்கும் சாராயம்தான் அருமருந்தாக இருந்து வருகிறது.

நகர மக்களைப் போல நாள் ஒன்றுக்கு 200 ரூபாய் செலவு செய்து டாஸ்மாக் மதுபானங்களை, கிராம மக்களால் அருந்த முடியாது.

நாள் ஒன்றுக்கு கூலியாக கிடைக்கும் 300 ரூபாய், 400 ரூபாய் வருமானத்தில் 100 ரூபாய் செலவு செய்வது என்பதே கிராமத்தில் வாழும் கூலித் தொழிலாளிக்கு உச்சபட்ச செலவாகும்.

அப்படியிருக்கும் போது அரசாங்கம் விற்பனை செய்யும் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் 150 ரூபாய்க்கு குறைவாக மதுபானங்களே விற்பனை செய்யப்படுவதில்லை என்கிற போது, கூலித் தொழிலாளிகள் கள்ளச்சாராயத்திடம் சரணாகதி அடைவதை குற்றம் சொல்ல முடியாது.

இரண்டாவதாக, கள்ளச்சாராயத்தால் ஏற்படும் உயிர் இழப்புகளை முழுமையாக தடுக்க வேண்டும் என்றால், குக்கிராமங்களில் கள் விற்பனைக்கு அனுமதி வழங்க  அரசு முன் வர வேண்டும் என்பதும் பழ கருப்பையாவின் அறிவுரையாக இருக்கிறது.

இதே வேண்டுகோளை பத்தாண்டுகளுக்கு மேலாக முழங்கி வருகிறார் விவசாயிகள் சங்க தலைவர் நல்லுசாமி.

கள் இறக்குவதற்கும் அனுமதி தர மாட்டோம்.. டாஸ்மாக் கடைகளில் 100 ரூபாய் விலையில் மதுபானங்களையும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்று தமிழக அரசு பிடிவாதமாக இருந்தால், கிராமங்களில் மட்டுமல்ல, பின்தங்கியுள்ள நகரங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் கூலி தொழிலாளர்களின் வாழ்க்கையை காவு வாங்குவதற்கு கள்ளச்சாராயம் எப்போதுமே தயங்காது.

கள்ளச்சாராயத்திற்கு பலியானவர்களின் குடும்பங்களுக்கு பத்து லட்சம் ரூபாய் இழப்பீடு என்பது அதிகபட்ச நிவாரணம் என்றும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்துக் கொண்டிருக்கின்றன.

கள்ளச்சாராய பலிக்கு பொறுப்பு ஏற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்றும் முழக்கங்கள் எழுந்து விட்டன.

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மட்டுமல்ல, நடுத்தர மக்களின் பொருளாதாரத்தையும் அனுதினமும் அழித்துக் கொண்டிருக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து ஒருநாள் கூட குரல் கொடுக்காத புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கும்பகர்ண தூக்கத்தில் இருந்து திடீரென்று விழிப்பு பெற்று, கள்ளச்சாராயத்தில் பலியானவர்களுக்காக நீலிக் கண்ணீர் வடித்திருக்கிறார். 

கள்ளச்சாராயத்தால் பலியான கிராமங்களில் இருந்து ஒலிக்கும் அவலக்குரல் மிகவும் துயரத்தை தருகிறது.

விவசாய கூலி வேலைக்கு பணம் தர மாட்டார்கள். சாராய பாக்கெட்டுகள்தான் தருவார்கள்..

காலம் காலமாக கூலிக்கு பதில் சாராயம் என்பது சாதாரணமான ஒன்றாக இருந்து வந்திருக்கிறது.

கள்ளச்சாராயத்தால் உயிர் இழந்தவர்களின் உறவினர்களின் ஒப்பாரிகளில், காவல்துறை மீதான சீற்றம்தான் அதிகமாக எழுந்து நிற்கிறது.

சாராயத்திற்கு அடிமையாக கிடக்கும் கிராம மக்களை, அதுவும் குடி நோய்க்கு அடிமையாகி கிடக்கும்  கூலி தொழிலாளர்களை, மீட்டெடுக்கும் தலையாய கடமை தமிழ்நாடு அரசுக்குதான் இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

ஆனால், கள்ளச்சாராய மரணங்கள் நேரிட்ட கிராமங்களில், அரசியல் விழிப்புணர்வு பெற்றவர்கள் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். திமுக, அதிமுக மற்றும் பல அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

விவசாய வேலைக்கு வெறும் பணம் மட்டுமே கொடுத்தால்  மக்கள் வர மாட்டார்கள் என்பதும் கூலியோடு சாராயம் கொடுத்தால் வயல் வேலைக்கு வருவார்கள் என்பது எல்லோருக்குமே தெரிந்து இருக்கிறது.,

இப்படிபட்ட ஒரு அவலத்தை போக்க, கிராமங்களில் வாழும் இளைஞர்கள் ஒன்றிணைந்து போராட்டங்களை முன்னெடுத்து இருக்க வேண்டும்.

அதற்கடுத்து, ஆளும்கட்சியான திமுகவுக்கு எதிராக அரசியல் போராட்டங்களை முன்னெடுத்து வரும் அதிமுகவும் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போன்ற போராட்டங்களை முன்னெடுத்து, திமுக அரசின் கவனத்தை ஈர்த்து இருக்க வேண்டும்.

பாட்டாளி மக்களுக்காகவே அரசியல் இயக்கம் கண்டு, கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக மத்திய, மாநில அரசுகளில் அங்கம் வகித்து பல்வேறு சுகங்களை அனுபவித்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தற்போதைய தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர், குடி நோய்க்கு எதிரான போராட்டங்களை கிராமங்கள் தோறும் நடத்தியிருக்க வேண்டும்.

மது விற்பனைக்கு எதிராக காலம் எல்லாம் குரல் கொடுத்து வரும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் நிறைந்திருக்கும் வட மாவட்டங்களில் தான் கள்ளச்சாராய  விற்பனை அதிகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது

கள்ளச்சாராய விற்பனையை தடுக்காத காவல்துறை அதிகாரிகளை இடம் மாற்றம் செய்வதும், நிவாரணத் தொகை வழங்குவது மட்டுமே சரியான தீர்வாக இருக்காது.

அரசு மீது பழியை போட்டு தப்பித்துக் கொள்வதற்குப் பதிலாக, அனைத்து கிராமங்களிலும் கள்ளச்சாராய விற்பனைக்கு எதிராக இளைஞர்கள் துணிந்து போராட வேண்டும்.

குடிநோயாக மாறியிருக்கும் கொடுமைக்கு எதிரான போராட்டத்தின் வெப்பம் தணியாமல் இருக்க அனைத்து அரசியல் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளும், சமுக ஆர்வலர்களும் கை கோர்த்து,, கள்ளச்சாராயத்தை அடியொடு ஒழிக்க வேண்டும்.

ஒரு கோடி பேரை திமுக உறுப்பினர்களாக்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ள ஆளும்கட்சியின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக கூறப்படும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது தலைமையிலான இளைஞர் அணி நிர்வாகிகளை, குடி நோயில் இருந்து பொதுமக்கள் விடுபட, விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன்னெடுக்க அறிவுரைகளை வழங்க வேண்டும்.

இன்றைய தேதியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மிகவும் மென்மையானவராக இருக்கிறார். தவறும் செய்யும் காவல்துறை அதிகாரிகள் மீதும் அரசு உயர் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க மிகவும் யோசிக்கிறார். தட்டிக்கொடுத்து வேலை வாங்குவதே சிறந்தது என்று நினைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

முதல்வரின் நல் எண்ணத்தை கிண்டலடிப்பவர்கள், அரசியலை கடந்து எல்லா மட்டங்களிலும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறார்கள்.

இப்படிபட்ட நேரத்தில்தான், அமைச்சர் உதயநிதியின் பங்களிப்பு, அவர் பொறுப்பு வகிக்கும் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறையை கடந்து உள்துறையிலும், ஆட்சி நிர்வாகத்திலும் அதிகமாக இருக்க வேண்டும் என்ற முழக்கம், எதிரொலிக்க தொடங்கியிருக்கிறது.

திமுகவினரிடம் இருந்து உதயநிதிக்கு ஆதரவாக குரல்கள் எழுந்தால், அதில் அரசியல் லாப, நட்ட கணக்குகளை பார்க்கலாம்.
ஆனால், மூத்த ஊடகவியலாளர் மணி போன்றவர்கள், உதயநிதியிடம் உள்துறையை வழங்க வேண்டும் என்ற குரல் எழுந்துள்ள நிலையில், இதுதான் சரியான தருணம்.

உதயநிதியை துணை முதல்வராக்கி அவரிடம் உள்துறையை வழங்கி, சோம்பி கிடக்கும்  காவல்துறையையும், அரசு நிர்வாகத்தையும் தட்டியெழுப்பி, முழு வீச்சோடு மக்கள் பணியாற்ற வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாய்ந்திருக்கும் அருமையான தருணம் இதுவே..

திமுக ஆட்சிக்கு எதிராக, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக கூட, நாள்தோறும் கண்டன கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கவில்லை.

சனாதன தர்மத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கும், நாள்தோறும் பிரசாரமாக்கிக் கொண்டிருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூட, சுய சிந்தனையின் போதுதான் ஆளும்கட்சிக்கு நெருக்கடி கொடுக்கிறார்.

ஆனால், ஒரு மணி நேரம் கூட இடைவெளி கொடுக்காமல், ஆளும்கட்சிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை அடுக்கி, கூலி கொடுக்கும் முதலாளிகளை சந்தோஷப்படுத்திக் கொண்டிருக்கும் சவுக்கு சங்கர் கூட, அமைச்சர் உதயநிதியின் ஒரு நடவடிக்கையை மனமுவந்து பாராட்டியிருக்கிறார்.

நரியே ஊளையிட்டுவிட்டது. இதுதான் நல்ல நேரம் என்று கூறும் திமுக இரண்டாம் கட்ட தலைவர்கள், உதயநிதியை, துணை முதல்வராக்கும் முடிவை முதல்வர் மு.க.ஸ்டாலின் இனியும் தள்ளி போடக் கூடாது என்று அழுத்தம் திருத்தமாக வேண்டுகோளை முன் வைக்கிறார்கள்.

பள்ளிக்கல்வித்துறையில் நடைபெற்ற சைக்கிள் கொள்முதல் முறைகேட்டை நடத்து நிறுத்தியிருக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என்பதுதான் சவுக்கு சங்கரின் பாராட்டாகும்.

ஆட்சி நிர்வாகத்தில் நடைபெறும் தவறுகளை களைய வேண்டும் என்ற துடிப்பும், மக்களின் வரிப்பணம் கொள்ளையடிக்கப்பட்டு விடாது என்ற கொள்கை பிடிப்பும் உண்மையில் உதயநிதிக்கு இருக்கிறது என்றால், அதை மேலும் மேலும் மெருகு ஏற்ற, உடனடியாக அமைச்சர் உதயநிதியை துணை முதல்வராக்க வேண்டிய மிகப்பெரிய கடமை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இருக்கிறது.

திமுகவின் ஜென்ம எதிரிகளின் விமர்சனங்களைப் பற்றி கவலைப்படாமல், முதல்வர் மு.க.ஸ்டாலின் துணிந்து செயலாற்ற வேண்டிய நேரம் இதுதான் என்கிறார்கள் தலைமைச் செயலகத்தில் உள்ள மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பலர்.