Sat. Nov 23rd, 2024

வன்னியர் சமுதாயத்தினருக்கு தனியாக 20 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி வருகிறார். இந்த கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டங்களிலும் அக்கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக, முதல்வர் இ.பி.எஸ்.ஸை சந்தித்து டாக்டர் அன்புமணி எம்.பி. உள்ளிட்ட தலைவர்கள் கோரிக்கை மனு அளித்தனர். இதுதொடர்பாக, அமைச்சர்கள் சிலருடன் முதல்வர் ஆலோசனை நடத்தியபோது, வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடாக 20 சதவிகிதம் வழங்கக் கூடாது என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்தாக ஆதாரமற்ற தகவல்கள் சமூக ஊடகங்களில் பரவியது.

இந்த நிலையில், தனி இடஒதுக்கீடு தொடர்பாக தான் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என துணை முதல்வர் மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர்,தனது டிவிட்டரில் விளக்கம் தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில், இட ஒதுக்கீட்டிற்கு நான் எதிர்ப்பு தெரிவித்ததாக தவறான கருத்துகளை சில விஷமிகள் சமூகவலைதளங்களில் பரப்பி வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. முற்றிலும் உண்மைக்கு புறம்பான இந்த கருத்துகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.