Wed. Apr 24th, 2024

அதிமுக பொதுக்குழுக் கூட்டம் திட்டமிட்டப்படி நடைபெறுமா என்று கடந்த ஒரு வார காலமாக பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இபிஎஸ் தரப்பின் விடா முயற்சியால் இன்று காலை அக்கட்சியின் பொதுக்குழு மிகுந்த எழுச்சியோடு தொடங்கியது.

ஆனால், பொதுக்குழுக் கூட்டத்தில் 23 தீர்மானங்களைத் தவிர வேறு எந்தவொரு தீர்மானம் நிறைவேற்றக் கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவால் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் விரக்தியடைந்தனர். அவர்களின் ஒட்டுமொத்த கோபம், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மீது திரும்பியது.

ஒற்றைத் தலைமை தீர்மானத்திற்கு அங்கீகாரம் கொடுத்து இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமியை, மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர், செல்வி ஜெயலலிதா ஆகியோர் வரிசையில் இபிஎஸ்ஸையும் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்து கொண்டாடும் மனநிலையில் இருந்த முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழகச் செயலாளர் என ஒட்டுமொத்த அதிமுகவும் ஓபிஎஸ்ஸை ஓரம் கட்டும் வேலையில் துணிந்தே இறங்கினார்கள்.

என்ன நடந்தது பொதுக்குழுவில்?

அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் இன்று காலை 10 மணியளவில் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அடையாறு பசுமை வழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து புறப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு வழியெங்கும் திரண்டிருந்த அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனால், பல மணிநேர பயணத்திற்குப் பிறகே பொதுக்குழுக் கூட்ட அரங்கிற்கு இபிஎஸ் வந்து சேர்ந்தார்.

அவருக்கு முன்னதாகவே திருமண மண்டபத்திற்கு வந்த ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்க ஒரு மூத்த நிர்வாகிகள் கூட செல்லாததால், பொதுக்குழுவில் வழக்கத்திற்கு மாறான நிகழ்வுகள் நடைபெற போகின்றன என்பது சூசகமாக வெளிப்பட்டது.

அதிமுக நிர்வாகிகளின் வெள்ளத்தில் மிதந்து வந்த இபிஎஸ்ஸுக்கு அதிமுக முன்னணி தலைவர்கள் சிவி சண்முகம், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் மலர் கொத்து வழங்கி விழா மேடைக்கு அழைத்து வந்தனர்

முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி வரவேற்புரை ஆற்றிய நேரத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரை குறிப்பிடவே இல்லை. அதையும் கடந்து புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் பாடலை பாடி, ஒரு தலைவன் இருக்கிறான் என்று அதிமுகவின் அடுத்த தலைவர் எடப்பாடி பழனிசாமிதான் என்று உரக்க கூறி, பொதுக்குழு உறுப்பினர்களை உற்சாகப்படுத்தினார்.

அதனையடுத்து பேசிய சிவி சண்முகம், அதிமுக பொதுக்குழு முன்பு வைக்கப்பட்ட 23 தீர்மானங்களும் ஒட்டுமொத்த பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவோடு நிராகரிக்கப்படுவதாகவும், அடுத்த பொதுக்குழுவில் ஒற்மை தலைமை குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதனுடன் இந்த 23 தீர்மானங்களும் நிறைவேற்றப்படும் என்று அறிவித்தார். மேலும், அடுத்த பொதுக்குழு கூட்டத்திற்கான தேதியை இன்றைய தேதியிலேயே அவைத்தலைவர் அறிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்ததுடன் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கோரிக்கை மனுவை அவைத்தலைவரிடம் வழங்கினார்.

முன்னதாக, தற்காலிக அவைத்தலைவரான தமிழ் மகன் உசேனை,நிரந்தர அவைத்தலைவராக நியமனம் செய்வது தொடர்பான அறிவிப்பை எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதை முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார் ஆகியோர் முறையே முன்மொழிந்து, வழிமொழிந்தனர்.

தொடர்ந்து பேசிய கே.பி.முனுசாமி, அதிமுகவின் தலைமைப் பொறுப்பை ஏற்க துணிச்சல் மிகுந்த ஒற்றை தலைமை வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அதன் பிறகு அவைத்தலைவர் தேர்வுக்கு நன்றி தெரிவித்து பேசிய தமிழ் மகன் உசேன், அடுத்த பொதுக்குழுக் கூட்டம் அடுத்த மாதம் 11 ஆம் தேதி காலை 9.15 மணிக்கு நடைபெறும் என்று அறிவித்தார்.

தொடர்ந்து நன்றியுரை ஆற்ற முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அழைக்கப்பட்டார். அவர் தனது உரையை தொடங்கிய நேரத்தில் மேடையின் முதல் வரிசையில் அமர்ந்திருந்த ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் ஆகியோர் எழுந்து மேடையை விட்டு வெளியேறினர். அப்போது வைத்திலிங்கம், இன்றைய பொதுக்குழுக் கூட்டம் சட்டவிரோதமாக நடைபெறுவதாக அறிவித்தார்.

நிறைவாக நன்றியுரை ஆற்றிய எஸ்.பி.வேலுமணி, அடுத்த பொதுக்குழுவில் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவார் என்றும் அவரது தலைமையில் திமுக ஆட்சியை அகற்றிவிட்டு மீண்டும் அதிமுக ஆட்சி அமையும். முதல் அமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்பார் என்று உரத்த குரலில் முழங்கினார்.

விடியற்காலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானதையடுத்து, அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் அடியோடு மாறியதால் கூச்சல், குழப்பமாக கூட்டம் நடைபெற்றதால், அதிமுக தொண்டர்கள் சோர்வடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கூட்டத்தில் நடைபெற்ற சுவாரஸ்யமான அம்சங்கள்…

ஒற்றைத் தலைமை குறித்த சர்ச்சை மேலெழுந்தது. அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்தது.

ஆனால், வரையறை செய்த 23 தீர்மானங்கள் தவிர்த்து, வேறு எந்த தீர்மானமும் நிறைவேற்றக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.

ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்திற்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வந்தடைந்தார்.

அப்போது அங்கு குவிந்திருந்த ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மாறிமாறி கோஷங்களை எழுப்பினர்.

திருமண மண்டபத்திற்கு வந்த ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.இதனால் அந்தப் பகுதியில் சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.

ஓ.பன்னீர் செல்வம் வெளியேற சொல்லி பழனிசாமி ஆதரவாளர்கள் முழக்கமிட்டனர்.

எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் இருந்து 9 மணிக்கு கிளம்பியவர் 11 மணிக்குத்தான் வானகரம் வந்தார்.

கிட்டத்தட்ட 2 மணி நேரம் அவரது கார் தொண்டர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்தது.

ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களாக இருந்த வைத்திலிங்கம், வெல்லமணி நடராசன் உள்ளிட்டோருக்கு எதிராகவும் கோஷம் எழுப்பட்டது.

.9 நாட்களுக்குப் பிறகு நேருக்கு நேராக சந்தித்த போதும் எடப்பாடி பழனிசாமியும், ஓபன்னீர் செல்வமும் ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்ளவில்லை.

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகமும் அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களை நிராகரிப்பதாக மேடையிலேயே கடும் ஆவேசத்துடன் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பொதுக்குழுவில் பேசிய முன்னாள் அமைச்சர் வளர்மதி, தனது பேச்சை தொடங்கும்போதே என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே.. அந்த தலைவர் எங்கே இருக்கிறார் அவர் விரைவில் வருவார் என மிக ஆவேசமாக பேசினார்.