Fri. Apr 26th, 2024

தமிழகத்தைச் சேர்ந்த 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் அடுத்த மாதம் நிறைவடைவதையொட்டி, வரும் 10 ம் தேதி 6 இடங்களுக்கும் தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. திமுக சார்பில் 3 பேர் போட்டியிடுவார்கள் என்று அறிவித்த அக்கட்சித் தலைமை, அக்கட்சியைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞர் கிரிதரன், தஞ்சை மாவட்ட திமுக பொறுப்பாளர் மற்றும் தற்போதைய எம்பி ரமேஷ் குமார் ஆகியோரின் பெயர்களை அறிவித்திருந்தது. மூன்று பேரும் ஏற்கெனவே மனு தாக்கல் செய்துவிட்ட நிலையில், திமுக ஆதரவுடன் 4 வது இடத்தை காங்கிரஸ் கட்சிக்கு திமுக தலைமை வழங்கியது.

நீண்ட இழுபறிக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி மாநிலங்களவை வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்றிரவு அறிவிக்கப்பட்டார். அதனையடுத்து திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து நன்றி தெரிவித்த ப.சிதம்பரம், இன்று காலை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவைச் செயலாளரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது திமுக அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் உடனிருந்தனர்.

இதேபோல, அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள 2 பதவிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கு அக்கட்சி தலைமை மிகவும் திணறியது. இரட்டை தலைமையில் செயல்பட்டு வரும் அக்கட்சியில், வடமாவட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகமும், ஓ.பி.எஸ்.ஸின் ஆதரவாளரான தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.தர்மரும் மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர்.

இதனையடுத்து, இரண்டு வேட்பாளர்களும் அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர், செல்வி ஜெயலலிதா ஆகியோரின் திருவுருச்சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்திவிட்டு, அங்கிருந்து ஊர்வலமாக தலைமைச் செயலகத்திற்கு வந்தனர்.

அங்கு சட்டப்பேரவைச் செயலாளரிடம் இருவரும் மனு தாக்கல் செய்தனர். இந்த நிகழ்வின் போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் மூத்த நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

அதிமுக வேட்பாளர் ஆர். தர்மர் வேட்புமனுதாக்கல் செய்தார்…