Fri. Nov 22nd, 2024

சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழந்த வழக்கில் மேலும் 4 காவலர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை மெரினா கடற்கரையில் குதிரை சவாரி பணியில் ஈடுபட்டு வந்த விக்னேஷ் உள்ளிட்ட 2 பேரை சென்னை தலைமைச் செயலக காலனி காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர். விசாரணையின் போது விக்னேஷ், காவல்துறையினர் கடுமையாக தாக்கியதாகவும், அதன்பேரில் அவர் உயிரிழந்ததாகவும் புகார் எழுந்தது.

இந்த விவகாரம் சட்டமன்றத்திலும் எதிரொலித்தது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து, காவல்துறையினரின் தாக்குதலில்தான் விக்னேஷ் உயிரிழந்ததாகவும், அவரை தாக்கிய காவல்துறையினர் மீது கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்த விவகாரத்தில் உரிய நீதி கிடைக்க, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

அப்போது பதிலளித்துப் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், விக்னேஷ் விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார்.

இதனையடுத்து, விக்னேஷ் உயிரிழந்த வழக்கில், அவரை கொடூரமாக தாக்கியதாக கூறி காவலர் குமார், ஊர்க்காவல் படை வீரர் தீபக், ஆயுதப்படை காவலர்கள் 2 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து வழக்கு விசாரணையில் தீவிரம் காட்டி வரும் சிபிசிஐடி போலீசார், மேலும் 4 காவலர்களை இன்று கைது செய்துள்ளனர். .

கைது செய்யப்பட்டுள்ள 6 காவலர்கள் மீதும் எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.