தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு முறைப்பயணமாக இன்று மாலை துபாய் புறப்பட்டுச் சென்றார்.
சட்டப்பேரவைக் கூட்டம் நிறைவடைந்ததுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் துபாய் புறப்பட்டார். அதற்கு முன்பாக சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் மு.கருணாநிதி ஆகியோர் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மாலையில் விமானம் நிலையம் புறப்பட்டுச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினை மூத்த அமைச்சர்கள் உள்பட அனைத்து அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் ஏராளமானோர் சாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். அங்கு தயாராக இருந்த தனி விமானம் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் புறப்பட்டுச் சென்றனர். விமான நிலையத்தில் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ், தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு ஐஏஎஸ் ஆகியோர் முதல்வரை வழியனுப்பி வைத்தனர்.
துபாயில் நடைபெறும் 192 நாடுகள் பங்கேற்கும் பல்தொழில் கண்காட்சியில் பங்கேற்று தமிழக அரசு சார்பில் அமைக்கப்படும் அரங்குகளை திறந்து வைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சர்வதேச தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுக்கிறார்.
இதனை தொடர்ந்து சார்ஜாவில் உள்ள பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது.
முதலமைச்சருடன் எம்.எம். அப்துல்லா எம்.பி., முதலமைச்சரின் தனி செயலாளர்கள் உள்ளிட்டோரும் செல்கின்றனர்.
சுற்றுபயணத்தை முடித்து கொண்டு வரும் 28 ஆம் தேதி முதலமைச்சர் தமிழகம் திரும்புகிறார்.
முதல்வரின் துபாய் பயணத்தை முன்னிட்டு அவரது புதல்வரும் மாநில திமுக இளைஞரணிச் செயலாளரும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் நேற்று துபாய் புறப்பட்டுச் சென்றார். தொழில் அதிபர்களுடன் கலந்துரையாடல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை அவர் ஒருங்கிணைத்து வருகிறார் என்று தகவலும் வெளியாகியுள்ளது.