பஞ்சாப் மாநில முதலமைச்சராக பகவந்த் மான் இன்று காலை பதவியேற்றுக் கொண்டார்.
சுதந்திர போராட்ட தியாகி பகத்சிங்கின் சொந்த ஊரான கட்கர் கலான் கிராமத்தில் நடைபெற்ற பிரம்மாண்டமான பதவியேற்பு விழாவில் ஆம் ஆத்தி கட்சித் தொண்டர்கள் லட்சக்கணக்கில் திரண்டனர்.
பகவந்த் மானுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
பதவியேற்பு விழாவில் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனருமான அரவிந்த் ஜெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.
பஞ்சாப் மாநில சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களை பிடித்து தனிப்பெரும் கட்சியாக உள்ளது. அறுதி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட கூடுதலான இடங்களில் வெற்றிப் பெற்ற ஆம் ஆத்மி கட்சியின் சார்பில், பகவந்த் மான், முதல்வர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தேர்தலில் வெற்றிப் பெற்றவர்கள் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பாக ஆம் ஆத்மி பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை என்ற தகவல் வெளியான நேரத்திலேயே செய்தியாளர்களைச் சந்தித்த பகவந்த் மான், தான் முதல்வராக பதவியேற்கும் இடம் குறித்து தெரிவித்தார். ஆளுநர் மாளிகையில் தான் முதல்வராக பதவியேற்க மாட்டேன். சுதந்திரப் போராட்ட தியாகி பகத் சிங்கின் சொந்த ஊரான கட்கர் கலான் கிராமத்தில்தான் பதவியேற்பு விழா நடைபெறும் என்று அறிவித்திருந்தார்.
அதன்படி, இன்று காலை கட்கர் கலான் கிராமத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பகவந்த் மானின் வேண்டுகோளை ஏற்று, மஞ்சள் நிற தலைப்பாகை அணிந்து பதவியேற்பு விழாவில் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.