Sun. Nov 24th, 2024

திமுகவை துவக்கிய பேரறிஞர் அண்ணாவின் அன்புக்கு பாத்திரமான பேராசிரியர், மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் ஆரூயிர் தோழராக வாழ்ந்து வந்தார். திமுகவின் பொதுச் செயலாளராக நீண்ட காலம் பதவி வகித்து வந்த பேராசிரியர், அக்கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் முதல் முன்னணி தலைவர்கள் வரை அனைவராலும் பெரிதும் மதிக்கப்பட்டவர். பேராசிரியர் என்றால், க. அன்பழகனின் நினைவுதான் திமுகவில் உள்ள நிர்வாகிகளுக்கு மட்டுமல்ல, தமிழக அரசியல் தலைவர்கள் அனைவராலும் நினைவுக்கூறப்படும்.

திராவிட கொள்கையில் பள்ளிப் பருவம் முதல் தன் மறைவு வரை உறுதியாக இருந்தவர் என்பதுடன், திமுக மேடைகளில் மட்டுமல்ல பொது மேடைகளிலும் திராவிட கொள்கைகளை, தன்மான உணர்வை, பகுத்தறிவு கொள்கைளை அழுத்தம் திருத்தமாக மக்கள் மனங்களில் விதைத்தவர், பேராசிரியர்.

திமுக முன்னோடிகளில் மிகச் சிறந்த இடத்தை பிடித்த பேராசிரியர் க.அன்பழகன் மறைந்து இரண்டாண்டுகள் கடந்த நிலையில், மார்ச் 7 ஆம் தேதியை நினைவுக்கூர்ந்து, அவரது இரண்டாவது நினைவு நாளை திமுக நிர்வாகிகள் இன்று கடைப்பிடித்து வருகின்றனர்.

அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பி, மேயர் ஜெகன் பெரியாசமி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் இன்று பேராசிரியர் க.அன்பழகனின் திருவுருப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதேபோல் சேலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மாநில திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ, அங்குள்ள கட்சிஅலுவலகத்தில் பேராசிரியர் திருவுருப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில், எம்எல்ஏ ராஜேந்திரன், மேயர் ராமச்சந்திரன் மற்றும் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதேபோல், மாநிலம் முழுவதும் பேராசிரியர் 2 ஆம் ஆண்டு நினைவு நாளை திமுக நிர்வாகிகள் கடைப்பிடித்து வருகின்றனர்.