முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய உங்களில் நான் எனும் சுய சரிதை புத்தகத்தை வெளியிட்ட காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல்காந்தி, பின்னர் விழாவில் வாழ்த்துரை வழங்கினார்.
அவரின் பேச்சின் முக்கிய அம்சங்கள் இதோ:
ஒரு அருமையான புத்தகத்தை வழங்கியதற்காக நான் என்னுடைய மூத்த சகோதரர் மு.க.ஸ்டாலினை பாராட்டுகிறேன்.
அவரது வாழ்க்கை நீண்ட நெடிய போராட்டம் கொண்டது.
ஸ்டாலினுக்கு எத்தனை வயது இருக்கும் என நினைக்கிறீர்கள் என்று எனது தாயாரிடம் கேட்டேன்.
ஒரு 58 அல்லது 60 இருக்கும் என அவர் சொன்னார்.
69 வயது என்று சொன்னேன், அவர் கூகுளில் சர்ச் செய்து பார்த்துவிட்டுதான் ஆம் என ஒத்துக்கொண்டார்.
இளமையாக இருப்பது எப்படி என்பது பற்றி ஸ்டாலின் ஒரு புத்தகம் எழுத வேண்டும் –
தமிழ்நாடு வருவது எனக்கு எப்போதும் எனக்கு மகிழ்ச்சி தரக்கூடியது; இதனை நான் மேலோட்டமாக சொல்லவில்லை, மனதின் அடி ஆழத்திலிருந்து சொல்கிறேன்.
என்னை அறியாமலேயே பலமுறை தமிழ்நாட்டைப் பற்றி நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறேன்.
அந்த பத்திரிகையாளர் கேட்ட போதுதான் அதை உணர்ந்தேன். அப்போதுதான் “நானும் தமிழனே” என்றேன்
நாடாளுமன்ற உரைக்குப் பின்பு நானும் தமிழ்தான் என சொன்னதற்கு காரணம், எனது ரத்தம் இந்த மண்ணில் கலந்துள்ளதாலேயே நானும் தமிழன் என்று நெகிழ்ச்சி பட கூறினார், ராகுல் காந்தி.
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் மனைவியும் திமுக எம்பி தயாநிதி மாறன், சன் டிவி சேர்மன் கலாநிதி மாறன் ஆகியோரின் தாயாருமான மல்லிகாவின் கரத்தை பிடித்துக் கொண்டவாறே ராகுல் காந்தி பத்திரமாக அழைத்து வந்தது, மாறன் குடும்பத்தினரை மட்டுமின்றி விழாவில் பங்கேற்ற அனைத்து பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்தது.
கேரள முதல்வர்
கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்துரை வழங்கி உரையாற்றினார். அவரது பேச்சின் முக்கிய அம்சங்கள்:
கூட்டாட்சிக்கு ஆபத்து வரும் போது மாநில சுயாட்சியை காக்க முதல் ஆளாக நிற்பவர் மு.க.ஸ்டாலின்.
நாட்டை பிரித்தாளும் சக்திகளுக்கு எதிரானவர்களை ஒருங்கிணைத்து வருகிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
மலையாளிகளும், தமிழர்களும் ஒரே மண்ணின் மைந்தர்கள்; இரு மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் சகோதர, சகோதரிகள்.
காஷ்மீர் முன்னாள் முதல்வர்
காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா வாழ்த்துரை வழங்கினார். அவரது பேச்சில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்…..
காஷ்மீருக்காக தமிழ்நாடு குரல் கொடுத்து, தோளோடு தோள் நின்றதை மறக்க மாட்டோம்,
இந்தியாவிலேயே முதல் முறையாக மாநிலம் ஒன்று யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது.
எங்கள் மக்களிடம் எந்த கருத்தும் கேட்கப்படாமலேயே அது நடந்தது,
மொழி, மதம், ஆடை, உணவு சுதந்திரம் என்பது கேள்விக்குறியாக்கப்பட்டு வருகிறது.
ஹிஜாப் அணிவது, தாடி வைப்பதெல்லாம் சர்ச்சையாக்கப்பட்டு வருகிறது.
நாட்டின் மத சுதந்திரம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது;
நான் என்ன உடை அணிய வேண்டும், எதன் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்பது எனக்கும் என்னுடைய இறைநம்பிக்கைக்கும் இடையிலானது.
ஸ்டாலினின் உழைப்பை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்
என்னை போல, ஸ்டாலினும் சிறை வாசத்தை அனுபவித்துள்ளார்
நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி தேர்தல் என தொடர் வெற்றிகளை குவிக்கிறார் ஸ்டாலின்
மாநில அரசுகள் மத்திய அரசுக்கு கட்டுப்பட்டவை என்ற கருத்து உருவாக்கப்பட்டு வருகிறது.
காஷ்மீருக்கு வந்த நிலை தமிழ்நாட்டுக்கோ, கேரளாவுக்கோ வராது என்பது என்ன நிச்சயம்?
இவ்வாறு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா உரையாற்றினார்.
பீகார் எதிர்க்கட்சித் தலைவர்
பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆற்றிய வாழ்த்துரை:
தமிழ்நாட்டின் சமூக நீதி இயக்கத்தால் கவரப்பட்டவர் லாலு பிரசாத் யாதவ்; பீகாரிலும் அதை அமல்படுத்த முயற்சித்தார்..
சரித்திரம் படைப்பவர்கள் வரிசையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார்.
தமிழ்நாடு தனித்துவமான சமூகமாக கட்டமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை பார்க்கும் போது சமூக நீதி, மக்கள் ஒற்றுமை குறித்து ஆச்சரியமாக இருக்கும்.
தமிழகத்தில் இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.
இவ்வாறு தேஜஸ்வி யாதவ் உரையாற்றினார்.
நூல் வெளியீட்டு விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரி செல்வி, துர்கா ஸ்டாலின், உதயநிதி எம்எல்ஏ, முரசொலி செல்வம், தயாநிதி மாறன் எம்பி, மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் திரளாக கலந்துகொண்டனர்.