Tue. Dec 3rd, 2024

தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் வகுத்துத் தந்த கொள்கைத் தடத்தில் என் பயணத்தை அமைத்துக் கொண்டிருக்கிறேன். தொடர்ந்து உங்களுக்காகப் பயணிப்பேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிப்பட தெரிவித்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய உங்களில் ஒருவன் எனும் சுயசரிதையின் முதல் பாகம் வெளியீட்டு விழா இன்று சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்றது.

காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல்காந்தி, இந்த விழாவில் கலந்துகொண்டு உங்களில் ஒருவன் எனும் நூலை வெளியிட்டார்.

இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்புரை ஆற்றினார். அவரின் பேச்சின் முக்கிய அம்சங்கள் இதோ:

உங்களால் உருவாக்கப்பட்டவன் நான், என்றும் உங்களில் ஒருவனே.

கலைஞர் போல எனக்கு பேசவோ, எழுதவோ தெரியாது, ஆனால் முயன்று பார்ப்பேன் எனத் தெரிவித்தேன்; அப்படி முயன்று பார்த்ததுதான் உங்களில் ஒருவன் நூல்.

நான் என்றும் மக்களில் ஒருவன் என்பதை சொல்லவே, உங்களில் ஒருவன் என நூலுக்கு பெயர் வைத்துள்ளேன்.

என்னுடைய முதல் 23 ஆண்டுகால வாழ்க்கைதான் உங்களில் ஒருவன் புத்தகம்; விளையும் பயிர் முனையிலேயே தெரியும் என்பார்கள், நான் அரசியல் பயிராகவே வளர்ந்தேன்.

அரசியலுக்கு வராமல் போயிருந்தால் என்னவாகி இருப்பீர்கள் என என்னிடம் கேட்டார்கள்;

நான் அரசியலில்தான் இருந்திருப்பேன் என பதில் சொன்னேன்; அரசியல் என்பது எனது ரத்தத்தில் கலந்தது.

கல்லூரி படித்தபோது நாடகம் போட்டது, திருமணம் செய்தது, திருமணமான 5 மாதத்தில் சிறை சென்றது என எல்லா திருப்பங்களையும் 23 வயதிற்குள் பார்த்தவன் நான்.

மாநில உரிமைகள் பறிக்கப்படுவதை தடுக்க அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற வேண்டும்

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தேசிய கட்சிகள் ஆதரவு தர வேண்டும்.

திராவிட ஆட்சி முறைதான் எங்களது கோட்பாடு; திராவிடவியல் கோட்பாட்டை இந்தியா முழுவதும் எடுத்துச் செல்ல வேண்டும்.

மாநிலங்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் அரசியலமைப்பு திருத்தப்பட வேண்டும். சட்டத்தின் ஆட்சி என்று இல்லாமல் சமூக நீதி ஆட்சி என்று மாறவேண்டும். திராவிடவியல் கோட்பாட்டை இந்தியா முழுவதும் விதைப்பேன்

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

உங்களில் ஒருவன் நூல் வெளியீட்டு விழாவில், கேரள முதல்வர் பினராய் விஜயன், தேசிய மாநாட்டு கட்சித் தலைவரும் காஷ்மீர் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா, பீகார் ராஷ்ட்டிரிய ஜனதா தள தலைவரும் அம்மாநில எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ், திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, நடிகர் சத்யராஜ், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.