நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் திமுக பெற்றிருக்கும் வெற்றிக்கு, ஆட்சிக்கு பொதுமக்கள் அளித்த நற்சான்றிதழாகவே எடுத்துக் கொள்ள வேண்டும் என திமுக முன்னணி தலைவர்கள் பெருமிதத்துடன் கூறத் தொடங்கியுள்ளனர்.
பகல் 2 மணியளவில் வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளும், முன்னணி நிலவரங்களும் திமுக தலைவர்களின் கூற்றை உறுதிப்படுத்தும் விதமாகதான் அமைந்துள்ளது.
மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளுக்குட்பட்ட வார்டுகளில் பதிவான வாக்குகள் முழுமையாக எண்ணி முடிக்கப்படாத நிலையிலேயே, பகல் 2 மணியளவில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் பெரும்பான்மையான இடங்களில் முன்னணி பெற்றுள்ளனர். அனைத்து மாநகராட்சிகளிலும் திமுகவைச் சேர்ந்தவர்களே மேயராக பொறுப்பு ஏற்பார்கள் என்ற நிலை உறுதியாகியுள்ளது.
இதேபோல், 138 நகராட்சிகளிலும் திமுகவும் மற்றும் அதன் கூட்டணி கட்சியினருமே முன்னிலையில் உள்ளனர். கோவை மாவட்டம் உள்பட அதிமுக செல்வாக்குள்ள பல்வேறு மாவட்டங்களில் கூட திமுக அதிசயத்தக்க வெற்றியை பெற்றுள்ளது. திமுக கூட்டணி 122 நகராட்சிகளில் வெற்றிப்பெற்றுள்ளது. அதிமுக கூட்டணி 9 நகராட்சிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சியின் மற்றொரு அமைப்பான பேரூராட்சிகளில் 489 மன்றங்களில் திமுக கூட்டணி 372 மன்றங்களை கைப்பற்றியுள்ளது. அதிமுக கூட்டணி 48 பேரூராட்சி மன்றங்களில் முன்னலை வகிக்கிறது.
ஆக மொத்தத்தில், மாநகராட்சிகளை முழுமையாக கைப்பற்றியுள்ள திமுக, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் அக்கட்சியே பெரும்பான்மையான மன்றங்களை கைப்பற்றும் நிலை உருவாகியுள்ளது.
இந்த தேர்தல் முடிவுகள் மூலம் திமுக ஆட்சிக்கு மக்கள் நற்சான்றிதழ் வழங்கியுள்ளதாக பெருமிதத்துடன் கூறும் திமுக முன்னணி தலைவர்கள், அதிமுகவின் கடந்த 10 ஆண்டு கால ஆட்சியின் ஊழல்களை பொதுமக்கள் இன்னும் மறக்கவில்லை என்று தெரிவிக்கிறார்கள்.