அநாகரிகமாக நடந்துகொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கடிதம்..
தமிழக காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக அறிவிக்கப்பட்டுள்ள ரூபி மனோகரன் நேற்று நாங்குநேரி அருகே பரப்பாடியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற போது அப்பகுதி காங்கிரஸ் தொண்டர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார், இதனால் ரூபி மனோகரன் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்காமல் அங்கிருந்த கிரில் கம்பியில் மாலையைப் போட்டு சென்றார். இதனால் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரு தரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் நடந்ததால் அப்போது அங்கிருந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். காங்கிரசாரின் உட்கட்சி மோதலில் நடந்த வாக்குவாதத்தில் வழியில் நிறுத்தப்பட்ட காங்கிரஸாரின் வாகனங்களால் அரை மணி நேரத்துக்கும் மேலாக நாங்குநேரி திசையன்விளை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது மாநில பொறுப்பேற்ற பின் நாங்குநேரி தொகுதிக்கு வந்த ரூபி மனோகரனுக்கு அவரது கட்சியினரால் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிகழ்வு அவருக்கு கடும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தனக்கு எதிராக முழக்கமிட்டும், அநாகரிகச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது தமிழக காங்கிரஸ் கமிட்டி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் புகார் அனுப்பியுள்ளார். இதுதொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கும் ரூபி மனோகரன் கடிதம் எழுதியுள்ளதாக அவரது ஆதரவார்கள் தகவல் தெரிவித்தனர்.