Tue. Dec 3rd, 2024

அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு மதுரை மண்டல நிர்வாகிகள் அவசரக் கூட்டம் இன்று மதுரை மண்டல கௌரவத் தலைவர் ஆதிமூலம் தலைமையில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் பி.ஆர்.பாண்டியன் பங்கேற்று முல்லைப் பெரியாறு அணை குறித்தும், இன்றைய பிரச்சனையும் தீர்வு குறித்து சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் ஆலோசித்து தீர்மானிக்கப்பட்ட அம்சங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்ததாவது:

தமிழ்நாட்டில் தேனி மதுரை திண்டுக்கல் இராமநாதபுரம் சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகள் முல்லைப் பெரியாறு,வைகை நீர் பாசனத்தை நம்பி வாழ்வாதாரமாக வாழ்ந்து வருகிறார்கள். கடந்த பல ஆண்டுகளாக ஒரு போகம் சாகுபடி கூட முழுமையாக மேற்கொள்ள முடியாமல் வறட்சியால் பாதிக்கப்பட்டதோடு, மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்திப்பது தொடர்கதையாகி உள்ளது.

இந்நிலையில் நடப்பாண்டு உரிய அளவுக்கு தென்மேற்கு பருவ மழை பெய்து முல்லைப் பெரியாறு அணை 137அடி நிரம்பி வருகிறது.142 அடி கொள்ளளவை உயர்த்தினால் 5 மாவட்ட விவசாயிகள் சாகுபடி மேற்கொள்வதற்கு வசதியாக இருக்கும். கேரளாவில் பெரும் மழை பொழிவால் முல்லைப் பெரியாறு அணையை திறக்க வேண்டும் என வலியுறுத்தி கேரள முதலமைச்சர் தமிழக முதலமைச்சருக்கு எழுதி உள்ள கடிதம் உள்நோக்கம் கொண்டதாகும்.

உச்சநீதிமன்றத்தில் 142 அடி தண்ணீரை தேக்க கூடாது எனவும் முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளதாகவும் கேரளாவின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அவ்வழக்கு குறித்து உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆய்வுக்குழு அமைத்து ஆய்வு செய்து பெறப்பட்ட ஆய்வறிக்கையின் அடிப்படையில் அணை வலுவாக உள்ளதாகவும், 142அடி தண்ணீரை தேக்கி வைக்க எந்தத் தடையும் இல்லை என்று உச்சநீதிமன்றமும் ஏற்றுக்கொண்டு இறுதி தீர்ப்பு வழங்கி உள்ளது.

இதனைஇதனை கண்காணிக்க உச்சநீதிமன்றம் அறிவுரையின் பேரில் மத்திய அரசால் அமைக்கப்பட்ட வல்லுனர் குழு தொடர்ந்து அவ்வபோது அணைகள் ஆய்வு செய்து அணை வலுவாக உள்ளதை உறுதி செய்து வருகிறது. நேற்றும் (27.10.2021) ஆய்வுக்குழு உச்சநீதிமன்றத்தில்அணை வலுவாக உள்ளது 142 அடி தண்ணீரைத் தேக்கி அதற்கு எந்தத் தடையும் இல்லை என்பதை உறுதியாக தெரிவித்துள்ளது. இதனால் கேரளாவில் ஏற்ப்பட்டுவரும் அரசியல் அழுத்தத்தின் காரணத்தினால் பினராயி விஜயன். மூலம் இக்கடிதம் எழுதப்பட்டதாக தோன்றுகிறது.

கேரளாவில் பெய்து வரும் தென்மேற்கு பருவ மழையும் முடிவடைந்துள்ளது.555 அடி கொள்ளளவு கொண்ட இடுக்கி அணையில் தற்போது 444 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது.
இதன் மூலம் கேரளாவிற்கு எந்த பாதிப்பும் இல்லை என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
கம்பம்மெட்டு முல்லைப் பெரியாறு நீர்பிடிப்பு பகுதிகளில் மட்டும் கேரள அரசு இடுக்கி அணை உள்ளிட்ட 21 அணைகளை தற்போது கட்டி உள்ளது. அவ்வாறு கட்டப்பட்ட அனைத்து அணைகளிலும் ஒரு சொட்டு தண்ணீர் கூட சாகுபடிக்கு பயன்படுத்தவில்லை. முழுமையும். வணிகரீதியாக மின்சாரம் தயார் செய்வதற்கு மட்டுமே பயன்படுத்தி வருகிறது.

நிலைமை இவ்வாறு இருக்க கேரள முதலமைச்சர் முல்லைப் பெரியாறில் 136 அடிக்கு மேல் தண்ணீரை தேக்கக்கூடாது உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுதினார்.பதில் கடிதம் எழுதிய தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் இரு மாநில மக்கள் நலன் கருதி சட்டத்திற்கு உட்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தார்.

மேலும் முல்லைப் பெரியாறு அணை வலுவிழந்துவிட்டதாகவும். இதனால் பேரிடர் ஏற்ப்பட உள்ளதாக கேரள நடிகர்கள், வழக்கறிஞர்கள் அவதூறு பிரச்சாரம் மேற்க்கொண்டுவருவது தமிழக விவசாயிகள் மத்தியில் பெரும் அச்சத்தையும் பதற்றத்தையும் உருவாக்கி உள்ளது.

அதே நேரத்தில் கேரள சட்டமன்றத்தில் முல்லைபெரியாறு அணை வலுவாக உள்ளதாகவும்,அணை குறித்து அவதூறு பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ள கேரள முதலமைச்சரின் கருத்து சற்று ஆறுதல் அளித்தாலும்,புதிய அணை கட்டியே தீருவேன் என உறுதிப்பட தெரிவித்துள்ளது சந்தேகமளிகளிக்கிறது. மேலும் தமிழக முதலமைச்சரோடு இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.

ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் கேரளா, தமிழக அரசுகளின் சார்பில் முல்லைப்பெரியாறு அணை குறித்து தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டு 142 அடி தண்ணீர் இருப்பை உயர்த்தி 5 மாவட்ட விவசாயிகளும் பயன் பெறுகின்ற வகையில் தண்ணீரை தேக்கி வைக்க அணை வலுவாக உள்ளது மேலும் கொள்ளளவு 152 அடி உயர்த்திக் கொள்ளலாம் எனவும், அதற்கு முன் பேபி அணையை பலப்படுத்திக்கொள்ளவும் உச்சநீதிமன்றமும் இறுதி தீர்ப்பில் கூறி உள்ளது. இந்நடவடிக்கைகளை ஆய்வு செய்திட நிபுனர் குழுக்களையும் அமைத்து மத்திய அரசும், உச்சநீதிமன்றமும் கண்கானித்துவருகிறது. எனவே இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்பதில் தமிழக அரசு உறுதியோடு இருக்க வேண்டும்.

இந்நிலையில் வரும் 29ம் தேதி காலையில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படும் பதிமூன்று மதகு வழியே வழியே தண்ணீரை திறக்கப்பட உள்ளது கேரள அரசின் சார்பில் பத்திரிக்கை இணையதளங்களில் 27ம் தேதியே வெளியிட்டனர்.

அதன்படியே நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரோசி அகஸ்ட்டின் கேரள மக்களின் நலன் கருதி இடுக்கி மாவட்ட ஆட்சியர் எடுத்த முடிவின் அடிப்படையில் 29ம் தேதி திறந்து வைத்தார் என வருவாய்த்துறை அமைச்சர் ராஜன் தெரிவித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

அதே நேரத்தில் தமிழகத்தின் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் தமிழக அரசு முடிவெடுத்த அடிப்படையில் அக்டோபர் மாதம் அணையில் நீர்த்தேக்கம் குறித்து ஏற்கனவே உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் அடிப்படையிலேயே தமிழக அரசு மதுரை மண்டல முதன்மை பொறியாளர் மூலம் திறக்கப்பட்டது என பத்திரிக்கை, ஊடகம் மூலமாக செய்தி வெளியிட்டுள்ளார்.

இரு மாநில அமைச்சர்களின் முரண்பட்ட செய்தி தமிழக முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகள் மத்தியில் மிகுந்த சர்ச்சையையும், சந்தேகத்தையும், அதிர்ச்சியையும், உருவாக்கியிருக்கிறது.

காரணம் அணையை உடைத்து விடவேண்டும் என்று திட்டமிட்டு கேரள அரசு எடுக்கும் முயற்சிக்கு தமிழகம் இறையாகி விடக்கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வோடு விவசாயிகள் தமிழக அரசு செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

கடந்த 27ம் தேதியே அணை திறக்கப்படும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை கேரள மாநிலத்தில் முல்லைப் பெரியாறு அணை பகுதியில் இருக்கிற கிராமங்களில் ஒலிபெருக்கி மூலமும் தண்டோரா மூலமும் கேரள அரசாங்கம் தகவல் தெரிவித்துள்ளது.

இவற்றையெல்லாம் ஒப்பிட்டு பார்க்கும் போது திட்டமிட்டு அணையில் 142 அடி தண்ணீரை தேக்கக்கூடாது என்ற அடிப்படையிலும் அணையை அபகரிக்கும் நோக்கோடும் கேரள அரசு செயல்பட்டிருப்பது வெளிப்பட்டுள்ளது. இதனை தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் உரிய முறையில் எடுத்துரைக்க வேண்டும் குடியரசு தலைவரிடத்தில்ம் நேரில் முறையிட வேண்டும். சட்டத்திற்கு விரோதமாக அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணாக, இரு மாநில உறவுகளை சீர்குலைக்கும் விதமாக கேரள மாநில இரு அமைச்சர்களும் செயல்பட்டுள்ளது உறுதியாகிறது.

எனவே இருவரையும் அமைச்சரவையிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்பதை முன்னிருத்தியும், தொடர்ந்து தமிழக முல்லைப் பெரியாறு உரிமையை பாதுகாப்பதற்கும் 5 மாவட்ட விவசாயிகள் நலனை பாதுகாக்கும் நோக்கோடு கீழ்க்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வரும் நவம்பர் 12ம் தேதி தேனி மாவட்டம் கூடலூர் லோயர்கேம்ப் அருகே ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்கும் மாபெறும் உண்ணாவிரதம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. தேனி மாவட்டத்தில் வணிகர்கள் ஆதரவளித்து கடையடுப்பு நடத்திட கோருவது என முடிவெடுக்கப்பட்டது.

கோரிக்கைகள்:

1)கடந்த 2018 கேரள அரசு புதிய அணை கட்ட வரவு திட்ட அறிக்கை தயார் செய்ய மத்திய அரசு வழங்கியுள்ள அனுமதியை திரும்பப் பெற செய்திட வேண்டும்.

2)அணைக்கு மும்முனை மின்இணைப்பு வழங்கினால் தான் அணைக்கதவுகள் ஒரே நேரத்தில் திறந்து மூட முடியும் எனவே உடன் மும்முனை மின் இணைப்பு பெறவேண்டும்.

3)அணைக்கு பொறியாளர்கள் சென்று வர தமிழக அரசு வழங்கிய அண்ணா படகினை இயக்க கேரளம் அனுமதி வழங்க மறுத்ததால் 5 வருடங்களுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அச்சுறுத்தலின்றி அவசர பணிகளை மேற்க்கொள்ள அவ்வபோது பொறியாளர்கள் நமது படகு மூலம் சென்று வர அனுமதி பெற வேண்டும்.

4)செயற்பொறியாளர் உள்ளிட்ட பொறியாளர்கள் அணைப்பகுதியில் தங்கி பணியாற்றவும், அலுவலக செயல்பாட்டிற்கும் உரிய நடிவடிக்கை எடுத்திடுவதோடு, அவர்களுக்கு முழு பாதுகாப்பும் வழங்கிட வேண்டும்.

5) 152 அடி கொள்ளளவை உயர்த்துவதற்கு பேபி அணையை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் மத்திய அரசின் ஆய்வுக் குழுவின் பரிந்துரையின் பேரில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.அதற்கான கட்டுமான பொருட்களை கொண்டு செல்வதற்கு உரிய சாலை அமைத்து கனரக வாகன போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்திட வேண்டும்

6) அணைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் மத்திய அரசின் தொழில் பாதுகாப்புப் படை பாதுகாப்பு வழங்கிட மத்திய அரசை
கோரிப்பெற வேண்டும்.

7)அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணாக இரு மாநில உறவுகளை சீர்குலைக்க முயற்சியோடு செயல்பட கேரள மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரோஸி அகஸ்டின்,வருவாய் துறை அமைச்சர் ராஜன் இருவரையும் குடியரசுத் தலைவர் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

கூட்டத்தில் தேனி மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் முத்துராமலிங்கம், மதுரை மாவட்ட செயலாளர் மேலூர் அருண்,மாவட்ட தலைவர் உசிலம்பட்டி மணிகண்டன்,மதுரை வழக்கறிஞர் ராவணன், உயர்மட்ட குழு உறுப்பினர் தர்மலிங்கம், தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநில தலைவர் எல் பழனியப்பன், சிவகங்கை மாவட்ட செயலாளர் முருகன், மாவட்ட தலைவர் மாணிக்கவாசகம், ராமநாதபுரம் மாவட்ட தலைவர தேனி மாவட்ட செயலாளர்கூடலூர் செந்தில்குமார்,மாவட்ட தலைவர் பூபாலன், திண்டுக்கல் மாவட்ட தலைவர் சக்திவேல்,செய்தித்தொடர்பாளர் என் மணிமாறன் ஆகியோர் கலந்துகொண்டனர்.