Sat. Nov 23rd, 2024

தமிழகத்தின் ஆளுநராக பதவியேற்றுக் கொண்ட பின்னர் 2வது முறையாக டெல்லி சென்றுள்ள ஆளநர் ஆர்.என்.ரவி, பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார்.

இந்த சந்திப்பு குறித்து தமிழக ஆளுநர் மாளிகை தமது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் தமிழக மக்களுக்கான நல்வாழ்வு மீதும் பிரதமர் மோடி மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 18 ஆம் தேதி தமிழகத்தின் ஆளுநராக ஆர்.என். ரவி பதவியேற்றுக் கொண்டார். அதன் பிறகு டெல்லி சென்ற அவர், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணை தலைவர் வெங்கைய்யா நாயுடு, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது பிரதமர் மோடி, அமெரிக்க சென்றிருந்ததால் அவரை சந்திக்காமல் சென்னை திரும்பினார்.

இந்நிலையில், நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, இன்று பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியுள்ளார்.

முதல் டெல்லி பயணத்திற்குப் பிறகு, திமுக அரசு மீது குற்றம் சாட்டி பாஜக, அதிமுக ஆகிய கட்சிகள் புகார் பட்டியலை வழங்கின. இதற்கு முன்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஆளுநரை சந்தித்து, ராஜிவ் கொலையாளிகள் 7 பேர் விடுதலை, நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட தமிழக அரசின் சார்பிலான கோரிக்கைகள் குறித்தும் ஆளுநருடன் விவாதித்தாக தகவல் வெளியானது.

இப்படிபட்ட சூழலில், ஆளுநர் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளது, தமிழக அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.