மறுமலர்ச்சி தி.மு.க மாணவர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் 18.10.2021 திங்கள்கிழமை அன்று, மாநில மாணவர் அணிச் செயலாளர் பால.சசிகுமார் தலைமையில் நடைபெற்றது.
மாணவர் அணி மாநில துணைச் செயலாளர்கள் இக்கூட்டத்திற்கு முன்னிலை வகித்தார். மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மறுமலர்ச்சி மாணவர் மன்ற நிர்வாகிகள் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர். .
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு :
தீர்மானம் எண்: 1
ஏழை எளிய பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் மருத்துவக் கல்விக்கு எதிராகவும், சமூக நீதிக்கு எதிராகவும் உள்ள நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் கழக மாணவர் அணி சார்பில் சென்னை, திருச்சி, கோவை, நெல்லை, தஞ்சாவூர் ஆகிய ஐந்து மையங்களில் ‘நீட் எதிர்ப்பு கருத்தரங்கம்’ நடத்தப்படும் என, கடந்த 23.09.2021 அன்று தலைவர் வைகோ அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
தலைவர் வைகோவின் ஆணைக்கு இணங்க, ஐந்து மையங்களிலும் தலைசிறந்த கல்வியாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களை கொண்டு, ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் வகையில் நவம்பர் மாத இறுதிக்குள் மாணவர் அணி சார்பில் நீட் எதிர்ப்பு கருத்தரங்கத்தை சிறப்பாக நடத்துவது என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் எண் : 2
நடைபெற்று முடிந்த ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கழகத் தோழர்கள் அனைவருக்கும் இக்கூட்டம் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் எண் : 3
தமிழ்நாட்டின் மேன்மைக்காகவும், தமிழர்களின் உரிமைகளுக்காகவும் கடந்த இருபத்தி எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ‘திராவிட இயக்கப் போர்வாள்’ தலைவர் வைகோவின் தலைமையில் பாடுபட்டு வந்திருக்கிறது.
தொண்டர்களின் தியாகத்தாலும் வியர்வையாலும், இரத்தத்தாலும் கட்டி எழுப்பப்பட்ட ஜிப்ரால்டர் கோட்டை போல், தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இருந்து வருகின்றது.
தமிழர் உரிமைகளை பாதுகாக்கும் களத்தில் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் உயிர்ப்போடு இருக்கவேண்டிய தேவை மறுமலர்ச்சி தி.மு.க.விற்கு இருக்கின்றது.
மாணவர்களையும், இளைஞர்களையும் அரசியல்படுத்துவதற்கும், கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சுவதற்கும் ‘இளம் புயல்’ திரு.துரை வைகோவை அரசியலுக்கு வரவேண்டும் என, கட்சியின் கடைக்கோடி தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை அனைவரும் விரும்புகிறார்கள். வரவேற்கிறார்கள்.
தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற மாணவர் அணி நிர்வாகிகள் மற்றும் தோழர்களின் ஒருமித்த கருத்து, திரு.துரை வைகோவை அரசியலுக்கு வரவேண்டும். தலைவர் வைகோவுக்கு உறுதுணையாக கட்சிப்பணி ஆற்ற வேண்டும் என்பதாகும்.
ஆகவே, 20.10.2021 புதன்கிழமை அன்று நடைபெறும் மறுமலர்ச்சி தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், திரு.துரை வைகோவுக்கு கட்சியில் உரிய, உயர்ந்த பொறுப்பை வழங்கி கழகப் பணி ஆற்றுவதற்கு தலைமைக் கழகம் அனுமதிக்க வேண்டும் என, இக்கூட்டத்தின் வாயிலாக மாணவர் அணி சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்ளப்படுகின்றது.
இவ்வாறு மறுமலர்ச்சி தி.மு.க.மாணவர் அணி கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன…