Fri. Nov 22nd, 2024

வடகிழக்கு பருவமழை வழக்கமாக அக்டோபர் முதல் வாரத்தில் துவங்கும்போதே, வானத்தை கிழித்துக் கொண்டு கொட்டும். அந்த நேரத்தில் சென்னை மாநகரம், கடலில் மிதக்கும் கப்பல் போல வெள்ளத்தில் சிக்கி தள்ளாடும். ஒவ்வொரு பருவ மழைக்காலத்தின் போதும் இதுதான் வாடிக்கையாக, வேதனை காட்சியாக இருந்து கொண்டிருக்கிறது. சென்னை மாநகரின் சாபக்கேடாக மாறிவிட்ட வடகிழக்கு பருவமழையின் பாதிப்புகளில் இருந்து நிகழாண்டில் சென்னையை மீட்டுவிடும் அதீத முயற்சியாக களம் இறங்கியிருக்கும் தமிழக அரசை எத்தனை முறை பாராட்டினாலும் சலிப்பே வரவில்லை என்கிறார் திமுக.வுக்கு எதிரான மனநிலையில் உள்ள பிரபலமான சமூக ஆர்வலர் ஒருவர்.

26 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் தான் பார்த்த புனரமைப்புப் பணிகளை போலவே 2021 ஆம் ஆண்டிலும் வேகமெடுத்திருப்பதை தன்னால் நம்பவே முடியவில்லை என்று வியப்பு நீங்காத மனநிலையிலேயே மனம் திறந்தார் நல்லரசுவுக்கு அறிமுகமான சமூக ஆர்வலர்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் பகுதிகளை சீரமைப்பதும், பாதுகாப்பதும் அரசு நிர்வாகத்திற்கு மிகப்பெரிய சவாலான ஒன்று. ஆக்கிரமிப்புகளாலும், அலட்சியத்தாலும் சென்னை மாநகரை ஊடுருவிச் செல்லும் நீர் வழித்தடங்கள் சிதிலமடைந்து குறுகி போவதும் தூர்ந்த போவதும் தடுக்கவே முடியாத கடுமையான பணியாக மாறிவிட்டது. மழைக்காலங்களையொட்டி அரசு நிர்வாகம் முன்னெடுக்கும் புனரமைப்புப் பணிகள் கூட பொதுமக்களின் அக்கறையற்றதன்மையால் கண்துடைப்பு நாடகமாக முடிந்து போவதே வாடிக்கையாக இருந்து வருகிறது. ஆனால், கடந்த சில நாட்களாக சென்னை மாநகரில் நடைபெற்று வரும் புனரமைப்புப் பணிகள் வியக்க வைப்பதுடன் நிம்மதி தருவதாகவும் இருக்கிறது.

1994 ஆம் ஆண்டில் சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்தவர் அலாவுதீன் ஐஏஎஸ். இன்றைய நிலை போல அன்றைக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுவிடவில்லை என்றாலும் கூட செப்டம்பர் மாதமே, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வெள்ள தடுப்பு மற்றும் நீர் நிலைகளில் தூர் வாரும் பணிகளை முடுக்கிவிட்டு, ஒவ்வொரு மண்டலமாக நேரில் சென்று ஆய்வு செய்தார் அலாவுதீன் ஐஏஎஸ். அதிகாலை, நண்பகல், மாலைப் பொழுது என சுற்றி சுற்றி அலாவுதீன் ஐஏஎஸ் வந்த போது, மாநகராட்சியின் அனைத்து துறை அதிகாரிகளும் முழு ஈடுபாட்டோடு புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

அலாவுதீன் ஐஏஎஸ்.ஸுக்கு ஈடுகொடுக்கும் வகையில் அப்போதைய சிறப்பு அதிகாரி பூர்ணலிங்கம் ஐஏஎஸ்.ஸும் களத்தில் இறங்கி புனரமைப்பு பணிகளை வேகப்படுத்தினார். அலாவுதீன் ஐஏஎஸ் வட சென்னையில் ஆய்வு மேற்கொண்டால், சிறப்பு அதிகாரி தென் சென்னையில் ஆய்வு செய்வார். முன்னவர் தென் சென்னைக்கு சென்றால், பின்னவர் வட சென்னையில் வீதி வீதியாகச் சென்று ஆய்வு மேற்கொள்வார். அன்றைக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லை என்பதால், இரண்டு உயர் அதிகாரிகளும் மிகுந்த சிரத்தை எடுத்துக் கொண்டனர்.

இப்படி இரண்டு உயரதிகாரிகளும் போட்டி போட்டுக் கொண்டு வடகிழக்கு பருவமழை பாதிப்பில் இருந்து பொதுமக்களை காக்க அரும்பாடுபட்டனர். அந்த கால கூட்டணி போல, இன்றைக்கு பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையரும், தலைமைச் செயலாளரும் போட்டி போட்டு கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தூள் கிளப்பி வருகிறார்கள்.

கடந்த 20 ஆம் தேதியன்று சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற புனரமைப்பு பணிகளை தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கினார். கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பணியாற்றிய காலங்களில் கிடைத்த அனுபவங்களை எல்லாம் ஒட்டுமொத்தமாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகளில் பயன்படுத்தி வருகிறார், ஆணையர் ககன் தீப் சிங் பேடி ஐஏஎஸ். அவரின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மண்டல அதிகாரிகள்.

https://twitter.com/chennaicorp/status/1439994411035680770?s=20

கடந்த 26 ஆண்டுகளில் பார்க்க முடியாத அற்புதம் இன்றைக்கு பார்க்க முடிவதுதான் வியப்பாக இருக்கிறது. ஐஏஎஸ் உயரதிகாரிகளை விட அதீத ஆர்வம் கொண்டவராக, முதல்வர் மு.க.ஸ்டாலினும் களத்தில் இறங்கி வெள்ள தடுப்பு பணிகளை ஆய்வு செய்து வருகிறார் என்பதுதான், கடந்த 30, 40 ஆண்டு காலத்தில் இல்லாத அதிசய நிகழ்வாகும்.

செப்டம்பர் முதல் வாரத்திலேயே சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஐஏஎஸ், மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து மண்டல அதிகாரிகளுக்கும் அறிவுரை வழங்கி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தினார். அதே காலகட்டத்தில் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ்.ஸும், அனைத்து துறை அதிகாரிகளையும் அழைத்து, வடகிழக்கு பருவ மழை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள், நிவாரண உதவிகள் உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆய்வு நடத்தி, தகுந்த அறிவுரைகளை வழங்கினார்.

உயர் அதிகாரிகளான வெ.இறையன்பு ஐஏஎஸ்.ஸும் ககன்தீப் சிங் பேடி ஐஏஎஸ்.ஸும், வெள்ள தடுப்பு நடவடிக்கைகளில் காட்டிய ஆர்வத்தைப் போலவே, முதல்வர் மு.க.ஸ்டாலினும், வடகிழக்கு பருவமழை பாதிப்பில் இருந்து தமிழக மக்களை காக்க களத்தில் குதித்துள்ளார்.

கடந்த 24 ஆம் தேதி தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ் தலைமையில் நடைபெற்ற அனைத்துத் துறை செயலாளர்கள் கூட்டத்திற்கு தலைமை வகித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை உள்பட மாநிலம் முழுவதும் குறிப்பாக கடலோர மாவட்டங்களில் தூர் வாரும் பணி, நிவாரண மையங்கள், மீட்பு நடவடிக்கைகளில் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அறிவுரைகளை வழங்கினார்.

அந்த கூட்டம் முடிந்த சில மணி நேரங்களிலேயே, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ், சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல் ஏரி, பூண்டி ஏரி, செம்பரபாக்கம் ஏரி ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, வடகிழக்கு பருவமழையின் போது பொதுமக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்பட்டிடாத வகையில் முன்னெச்சரிகை நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டார்.

அதற்கு அடுத்த நாளே, முதல்வர் மு.க.ஸ்டாலின் காலைநேரத்திலேயே சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் புனரமைப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்ய புறப்பட்டார். பெயரளவுக்கு ஒன்றிரண்டு இடங்களை பார்க்காமல், காலை முதல் பிற்பகல் வரை 9 க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்று வரும் தூர் வாரும் பணிகள், கழிவு நீர் கால்வாய் சீரமைப்பு உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் காணப்பட்ட அதீதமான கடமையுணர்வு, ஐஏஎஸ் அந்தஸ்து கொண்ட உயர் அதிகாரிகளிடம் காணப்படும் கடமை மற்றும் பொறுப்புணர்வை மிஞ்சியதாக இருந்ததை கண்கூடாக பார்த்துதான் வியந்து போனேன். அரசியல் ரீதியாக மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும் கூட, மக்கள் பணியில் மிகுந்த அக்கறையோடு செயல்படும் முதல்வராக மு.க.ஸ்டாலின் இருக்கிறார் என்பதை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

சமுதாய தொண்டில் அக்கறையுள்ள என்னைப் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது ஏற்பட்டுள்ள மனமாற்றம் குறித்து வியந்து வியந்து பேசிக் கொண்டிருக்கிறேன். என்னைப் போலவே பெரும்பான்மையானவர்களிடமும் திமுக ஆட்சி மீது நம்பிக்கை பிறந்திருப்பதுதான் மகிழ்ச்சி கொள்ள செய்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் மீதும், தலைமைச் செயலாளர், மாநகராட்சி ஆணையர் மீதும் ஏற்பட்டுள்ள நம்பிக்கையை காப்பாற்ற போகிறதா, கவிழ்த்து விடப்போகிறதா என்பதை வடகிழக்கு பருவமழை காலத்தின் போதுதான் உணர்ந்து கொள்ள முடியும். அதை வரை காத்திருக்க வேண்டும் என்று பொடி வைத்து பேசியவாறே கைபேசி இணைப்பைத் துண்டித்துக் கொண்டார், சமூக ஆர்வலர்.