குவாட் உச்சி மாநாடு நடைபெறும் வெள்ளை மாளிகையின் கிழக்கு அறைக்கு அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடி, பிரதமர் யோஷிஹிடே சுகா மற்றும் பிரதமர் ஸ்காட் மாரிசன் ஆகியோர் சென்றனர்.
இதனை தொடர்ந்து குவாட் உச்சி மாநாடு தொடங்கியது. அப்போது பிரதமர் மோடி பேசியதாவது
இந்த குவாட் உச்சி மாநாட்டில் நேரில் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுத்த ஜோ பைடனுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2004 சுனாமிக்கு பிறகு இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கு உதவ முதல் முறையாக நான்கு நாடுகள் ஒன்றிணைந்தன.
உலகம் இன்று கொரோனாவுடன் போராடும்போது, குவாட் உறுப்பினர்களாகிய நாங்கள் மீண்டும் மனிதநேயத்தின் நலனுக்காக ஒன்றிணைந்து இருக்கிறோம். எங்கள் குவாட் தடுப்பூசி முயற்சி இந்தோ-பசிபிக் பிராந்திய மக்களுக்கு நிச்சயம் உதவும்.
பொதுவான ஜனநாயக மதிப்புகளின் அடிப்படையில், நேர்மறையான சிந்தனை மற்றும் அணுகுமுறையுடன் முன்னேற குவாட் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. விநியோகச் சங்கிலி அல்லது உலகளாவிய பாதுகாப்பு, காலநிலை நடவடிக்கை, கொரோனா தடுப்பு, தொழில் நுட்பத்தில் ஒத்துழைப்பு ஆகியவை குறித்து குவாட் உறுப்பினர்களுடன் விவாதிப்பதில் நான் மகிழ்ச்சியடைவேன்.
உலக நன்மைக்கான சக்தியாக இந்த குவாட் கூட்டமைப்பு இயங்கும். குவாட்டில் எங்கள் ஒத்துழைப்பு இந்தோ-பசிபிக் மற்றும் முழு உலகிலும் அமைதியையும் செழிப்பையும் உறுதி செய்யும் என்று நான் நம்புகிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.