நாம் தமிழர் கட்சியின் பிரதான முழக்கமே, திராவிடம் என்பது தமிழினத்திற்கான அடையாளம் இல்லை.. தமிழினம் தனித்த அடையாளத்தை கொண்டது. தமிழ் மொழி, தமிழினம், தமிழர் பண்பாடு என்று உலகம் முழுவதும் பரவியிருக்கும் தமிழை தாய்மொழியாக கொண்ட மக்கள், தமிழ் தேசியத்தை படைக்கவும், அதன் தாயகமாக தமிழ்நாடு திகழ வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஒட்டுமொத்த தமிழினத்தின் கனவை நிறைவேற்றுவதே நாம் தமிழர் கட்சியின் கடமை என்று வாய் திறந்து பேசும் ஒவ்வொரு நேரத்தின் போதும் நரம்பு புடைக்கவே கர்ஜித்துக் கொண்டிருக்கிறார், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
அவருக்கு முன்பாகவே, தமிழ் தேசியக் கொடியை தூக்கிப் பிடித்து போராடிய தமிழ் ஆன்றோர்கள் எண்ணற்றோர், தமிழ் மண்ணில் வாழ்ந்திருக்கிறார்கள். மேலும், சீமானைப் போலவே நிகழ் காலத்தில் பெ.மணியரசன், பழ நெடுமாறன் உள்ளிட்ட தலைவர்களும் தமிழ் தேசியத்தை அமைப்பது தங்கள் வாழ்நாள் கடமையாக கொண்டிருக்கிறார்கள். ஆனால், இவர்கள் மத்தியில் சீமானின் கர்ஜனை மட்டுமே இளம் தலைமுறையினரை அதிகமாக ஈர்த்துக் கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் மிகவும் ஆச்சரியமான அம்சம் என்னவென்றால், பள்ளிப் பருவத்தில் இருக்கிற மாணவ, மாணவியர்கள்கூட, யூ டியூப்பில் வெளியாகும் சீமானில் அனல் கக்கும் பேச்சுகளால் ஈர்க்கப்பட்டு, தமிழ் தேசியம் அமைக்கப்பட வேண்டும் என்று பேசும் அளவிற்கு இன்றைக்கு தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் மெல்ல, மெல்ல ஏற்பட்டு வருகிறது.
இந்த அம்சத்திலும் வியப்பிற்குரிய ஒன்றாக, களத்தில் நித்தம் நித்தம் பணியாற்றிக் கொண்டிருக்கும் அரசியல் ஆய்வாளர்கள் கூறும் தகவல் உள்ளது. கிறிஸ்துவம், இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகள் கூட, சீமானின் அதிதீவிர ரசிகர்களாக மாறி வருவதும் ஆச்சரியமாக இருக்கிறது என்கிறார்கள். அவர்களில் 10 க்கு 5 பேர் சீமானைப் போலவே தமிழ் தேசியம் ஏன் அமைக்கப்பட வேண்டும் என்று உரத்த குரலில் வாதாடுகிற அளவுக்கு தமிழ் தேசியத்தின் கட்டமைப்பை பல்வேறு தரவுகள் மூலம் கற்றுக் கொண்டு வருக்கிறார்கள் என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள் வியப்பு நீங்காமல்..
அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் திமுக அமோக வெற்றிப் பெற்றிருந்தாலும் கூட, அந்த கட்சியை இன்றைக்கும் ஆதரித்துக் கொண்டிருக்கும் அரசியலுக்கு அப்பாற்பட்ட தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள், திராவிட முன்னேற்றக் கழகம், திராவிடப் பார்வையில் இருந்து, பாதையில் இருந்து முழுமையாக விலகி, தமிழர் என்ற அடையாளத்தை முழுமையாக சுமப்பதற்கே பெரிதும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்த தொடங்கியிருக்கிறார்கள்.
கடந்த பத்தாண்டுகளுக்கு முன்புவரை திராவிட சித்தாந்ததை முழுமூச்சாக பரப்பி வந்த திராவிட முன்னேற்றக் கழகம், தமிழ் தேசியப் பாதைக்கு திரும்ப வேண்டும் என்று வலியுறுத்தும் மனப்பான்மையுடையவர்கள் திமுக.விலும் பெருகிக் கொண்டே வருகிறார்கள். இப்படிபட்ட நேரத்தில், கடந்த சில நாட்களாக சட்டப்பேரவையில் திராவிட சித்தாந்தத்தை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்யும் நடவடிக்கைகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அவை முன்னவரும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் உரையும் அமைந்திருப்பது, தமிழ் தேசியத்தை கட்டமைக்க அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கும் தலைவர்களிடைய அதிகளவு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலின்போது திராவிட சித்தாந்தத்தை முழங்காமல் அடக்கி வாசித்தவர்கள், ஆட்சியைப் பிடித்த பிறகு மீண்டும் திராவிட சித்தாந்ததை நிலை நிறுத்த முயற்சிப்பதே தமிழ் தேசியவாதிகளை சினம் கொள்ள தூண்டுதலாக அமைந்திருக்கிறது என்கிறார்கள் திமுக.வில் உள்ள தமிழ் தேசியப் போராளிகள்.
நீதிக் கட்சி, திராவிடர் கழகம், திமுக ஆகியவை ஒன்றன் பின் ஒன்றாக துவங்குவதற்கு முன் 1000 ஆண்டுகளுக்கு முன்பாக, சோழப் பேரரசர்கள், தமிழ் தேசியத்தை கட்டமைத்ததாகவும், தமிழர் ஆட்சி வட இந்தியாவின் எல்லை வரை விரிந்திருந்ததாகவும், அடுக்கடுக்கான ஆதாரங்களை வைத்து வாதாடிக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படி இன்றைய அரசியல் உலகில், திராவிடத்தை எதிர்த்து தமிழ் தேசியவாதிகள் படை திரட்டி வரும் நேரத்தில், ஆரியத்தை எதிர்க்க பிறப்பெடுத்த திராவிடம், இன்றைக்கு வழக்கொழிந்துவிட்டது என்பதுடன், ஆரியத்தை எதிர்ப்பதிலும் உறுதியை இழந்து, பகுத்தறிவுக் கொள்கையை நிலை நாட்டுவதில் சமரசம் செய்து கொண்டு ஆட்சி நடத்தும் திமுக, திராவிட சித்தாந்தத்தையும் உடும்பு பிடியாக பிடித்துக் கொண்டு செய்யும் அரசியலை, பிழைப்பு வாத அரசியல் என்று சினம் கொப்பளிக்க குரல் கொடுக்கிறார்கள் தமிழ் தேசியவாதிகள்.
இப்படிபட்ட மோதல் போக்கு, திராவிடத்திற்கும் தமிழ் தேசியத்திற்கும் இடையே கனன்றுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், தமிழ் தேசியம்தான் திராவிடம் என்று புது விளக்கம் சொல்லும் வேளையில் திமுக.வுக்கு ஆதரவாக நிற்கும் தலைவர்களும்கூட செய்து கொண்டிருக்கிறார்கள் என்று குற்றம் சுமத்தும் தமிழ் தேசிய போராளிகள், தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள் கூட, திராவிடத்திற்கு முட்டுக்கொடுத்து கொண்டிருப்பதைப் பார்த்து, ஆரியராக உள்ளவர்கள் நகைப்புடன் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில், அந்த இனத்தின் அடையாளமாக இருப்பவர்கள், திராவிடம் என்று சொல்வது தமிழ் இனத்தின் அடையாளமாகாது என்று பாடம் நடத்த துவங்கியிருப்பதுதான் தமிழ் இனத்திற்கு நேரிட்ட அவமானம் என்று வருத்தம் தெரிவிக்கிறார்கள் தமிழ் மொழியை சுவாசமாக்கிக் கொண்டுள்ள எழுத்தாளர்கள்.
அவர்களின் கூற்று உண்மை என்பதைப்போலதான் இருக்கிறது பிரபல ஊடகவியலாளர் சுமந்த் ராமன், காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ்ஸுக்கு கூறியுள்ள அறிவுரை என்கிறார்கள் அவர்கள்.
தமிழ் தேசியத்தை கட்டமைப்பதில் தங்கள் வாழ்நாட்களையே தியாகம் செய்துக் கொண்டிருக்கும் தமிழ் தேசியவாதிகள், 100, 200 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை அடிப்படையாக கொண்டு தமிழ்நாட்டைப் பார்க்கக் கூடாது என்றும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிற மொழி கலப்பில்லாத பழம்பெரும் தமிழ் இலக்கியங்களான சங்கத் தமிழ், அதற்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த தொல்காப்பியம் ஆகிய நூல்களின் அடிப்படையில் தமிழ்நாட்டை, தமிழர்களின் தாய்மண்ணாக, தமிழ் தேசியமாக பார்க்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்கள்.
திராவிடச் சொற்களுக்குள் அடங்கியுள்ள கேரளா மாநிலத்தவர், தங்களை மலையாளிகள் என்ற தனித்த அடையாளத்தையோடு முன்னிறுத்திக் கொள்வதைப் போல, தெலுங்கை தாய் மொழியாகக் கொண்டவர்கள், கன்னடத்தை தாய் மொழியாகக் கொண்டவர்கள் அவரவர் தாய் மண்ணிற்கு ஏற்ப, மொழிப் பற்றோடு, இனப் பற்றோடு வாழ்ந்துக் கொண்டிருக்கும்போது, அந்த மூன்று மாநிலத்தைச் சேர்ந்தவர்களே திராவிடம் என்ற அடைமொழியை முழுமையாக புறக்கணித்தப் பிறகு, தமிழனை மட்டும் ஏன் திராவிடன் என்று அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கிறீர்கள் என்று திமுக மீது கோபத்தோடு கேள்விகளை முன்வைக்கிறார்கள்.
இதற்கு தெளிவான பதிலை திமுக தலைவர்களால் கூற முடியாத நிலையில், துணிவில்லை என்பதால்தான், பீட்டர் அல்போன்ஸ் போன்றவர்கள் மூலம் புதுசு புதுசா விளக்கம் கொடுத்து சப்பைக்கட்டும் முயற்சியில் மறைமுகமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் திமுக தலைவர்கள் என ஆக்ரோஷம் காட்டுகிறார்கள் தமிழ் தேசியத்தலைவர்கள்..
ஆரியத்திற்கு எதிரான போராட்டம் வலுவிழுந்து, திராவிடத்திற்கும் தமிழ் தேசியத்திற்கும் இடையே நாளுக்கு நாள் எழுந்துக் கொண்டிருக்கும் போர், அண்ணன், தம்பிகளுக்கு இடையேயான மோதல் என்று மனவேதனையுடன் பார்க்கிறார்கள் தமிழ் எழுத்தாளர்கள்.