Thu. Dec 5th, 2024

தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டத்தை எதிர்த்த வழக்கு தள்ளுபடி.

திருவரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

குறிப்பிட்ட மொழியில்தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என நீதிமன்றம் வற்புறுத்த முடியாது.

தமிழில் அர்ச்சனை செய்ய எந்த தடையும் இல்லை – தலைமை நீதிபதி.

ஆகம விதிகளை கோவில்களில் மீறி தமிழில் அர்ச்சனை செய்ய அனுமதிக் கூடாது என்றும் கடந்த கால வழக்கப்படி சமஸ்கிருதத்தில் தொடர்ந்து அர்ச்சனை செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் கூறி திருச்சி மாவட்டம் திருவரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு மீதான விசாரணை தலைமை நீதிபதி அமர்வு முன்பு இன்று நடைபெற்றது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வாதங்களை முன்வைத்து வாதாடினார். அப்போது, நீதிபதிகள் குறுக்கிட்டு “ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பில் தமிழில் அர்ச்சனை செய்ய எந்த தடையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளன. எந்த மொழியில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்பது பக்தர்களின் விருப்பத்திற்கு உட்பட்டது.

பக்தர்கள் எந்த மொழியில் விருப்பப்பட்டு கேட்கிறார்களோ அந்த மொழியை அர்ச்சகர்கள் தேர்வு செய்யப்படுகிறது. குறிப்பிட்ட ஒரு மொழியில் தான் ஆராதனை செய்ய வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்த முடியாது. ஏற்கெனவே விரிவான ஆய்வுக்கு பிறகு தமிழில் அர்ச்சனை செய்வது தொடர்பாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதால், அந்த தீர்ப்பையே மறு ஆய்வுக்கு உட்படுத்த முடியாது.

கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது தொடர்பாக ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே, கடந்த 2008 ஆம் ஆண்டில் வழங்கிய தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய எந்த அவசியமும் இல்லை. அதனால், தமிழில் அர்ச்சனை செய்வதற்கு எந்த தடையும் விதிக்க முடியாது என்று தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், சமஸ்கிருதத்தில் மட்டுமே அர்ச்சனை செய்ய வேண்டும் என்று உத்தரவிட கோரி தொடர்ந்த மனுவையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.