Sat. Nov 23rd, 2024

கோவை பதிவுத்துறை துணைத் தலைவர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி மருமகன் தினேஷ் மீது தன்னுடைய நிலத்தை மீட்டு தருமாறு திருப்பூரைச் சேர்ந்த சஞ்சய் குமார் ரெட்டி சார்பாக அவரது வழக்கறிஞர் விஜயகுமார் புகார் மனு அளித்துள்ளார்.

இதுகுறித்து வழக்கறிஞர் விஜயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருப்பூர் ராக்கியாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய் குமார் ரெட்டி. இவருக்குத் திருப்பூர் தெற்கு வட்டம் கண்டியன் கோவில் கிராமத்தில் 2.26 ஏக்கர் பூமி உள்ளது. இதில் அவர் பண்ணை வீடு கட்டி வந்துள்ளார்.

அப்போது கட்டுமான பணிகளுக்காக முன்னாள் அமைச்சர் தங்கமணியின் மருமகன் தினேஷ் என்பவரிடம் ரூ.50 லட்சம் கடன் கேட்டுள்ளார். அப்போது தினேஷ் அவரின் உறவினர்கள் கே.ஆர் தங்கராஜ் மற்றும் எஸ்.ஹரிபாஸ்கர் பெயரில் நிலத்தைக் கிரயம் செய்து கொடுத்தால் கடன் கொடுப்பதாகக் கூறியுள்ளார்.

இதற்கு சஞ்சய் குமார் ரெட்டி ஒப்புக்கொண்டார். மேற்படி சொத்தின் வழிகாட்டி மதிப்பு அடிப்படையில் அவருக்கு ரூ.20 லட்சத்து 39 ஆயிரம் மட்டும் கொடுத்துவிட்டு நிலத்தைத் திருப்பூர் தொட்டிப்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கிரயம் செய்துவிட்டார்கள்.

பின்னர் கடனை திருப்பி செலுத்தியவுடன் நிலத்தை சஞ்சய் குமார் ரெட்டி பெயரில் திருப்பி கிரயம் செய்து கொடுப்பதாக உறுதி அளித்துள்ளனர். இதனிடையே காங்கேயம் பகுதியில் உள்ள ஒருவர் அந்த நிலத்தை மூன்றாம் நபருக்குப் பேசி விற்பனை செய்ய முயன்றுள்ளார்.

இதனிடையே கடனை திருப்பி செலுத்தி விடுகிறேன் நிலத்தை மீண்டும் என் பெயரில் கிரயம் செய்து கொடுக்க வேண்டும் என சஞ்சய் குமார் ரெட்டி தினேஷிடம் கேட்டு உள்ளார். இதற்கு அவர் மறுத்துள்ளார்.

இந்நிலையில் கிரயப்பத்திரத்தை ரத்து செய்யக் கோரி திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்வதைத் தடுக்க கோரியும், நிலத்தை மீட்டுத் தரக்கோரியும் பதிவுத்துறை துணைத் தலைவர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.