Sat. Nov 23rd, 2024

முருகப் பக்தர்களின் நீண்ட கோரிக்கைக்கு தீர்வு

உலகமெங்கும் பரவியிருக்கும் தமிழர்கள் உற்சாக கொண்டாடும் ஆன்மிகத் திருவிழாவில் முக்கியமானது தைப் பூசத் திருவிழா. தமிழகம் மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, இலங்கை என தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா மிகுந்த பக்தியுடனும் எழுச்சியுடனும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்தந்த நாடுகளில் உள்ள அரசுகள், தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, முருகப் பக்தர்களுக்கு வேண்டிய உதவிகளை தாராளமாக செய்து தருகிறது. மொழி, இனம், பக்தி வேறுபட்டிருந்தாலும் கூட, அவரவர் நம்பிக்கைக்கு மதிப்பளிக்கும் மாண்பு, வெளிநாடுகளில் பல்வேறு கலாச்சாரங்கள் இருந்தாலும் மிகச் சிறப்பாக இருக்கிறது.

ஆனால், தமிழகத்தில் மட்டும் தைப்பூச திருவிழாவுக்கு அரசு சார்பில் எந்த முக்கியத்துவமும் வழங்கப்படுவதில்லை என்ற மனக்குறை முருகப் பக்தர்களிடம் இருந்து வந்தது. பல லட்ச மக்கள் உணர்வுப் பூர்வமாக கொண்டாடும் தைப் பூசத் திருவிழா நாளை, அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஆண்டுதோறும் எழுப்பப்பட்டு வந்தது.

பக்தர்களின் மனவுணர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில், தைப் பூசத் திருநாளை, அரசு பொது விடுமுறை நாளாக அறிவித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அடுத்தடுத்த ஆண்டுகளிலும் பொது விடுமுறை நாளாகவே தைப் பூசத் திருநாள் இருக்கும் வகையில், பொது விடுமுறைப் பட்டியலில் இந்த நாளை சேர்க்கும்மாறும் முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக, அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.