ஆவின் தலைமை அலுவலகத்தில், உயர் மட்டத்தில் நடைபெற்று வரும் தில்லுமுல்லு களை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர் சு. ஆ. பொன்னுசாமி தோலுரித்துக் காட்டியுள்ளார்…
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை இதோ….
“ஆவினில் ஊழல், முறைகேடுகளில் ஈடுபட்டவர்களை காப்பாற்ற அவை வெளிச்சத்திற்கு வர காரணமான நேர்மையான அதிகாரிகள் மீதே நடவடிக்கை எடுப்பதா…?”
கடந்த அதிமுக ஆட்சியில் தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவினில் பால் கொள்முதல் தொடங்கி விற்பனை வரையிலும், அலுவலக ஸ்டேசனரி பொருட்கள் வாங்கியதில் தொடங்கி பணியாளர்கள் நியமனம் வரையிலும், உள்ளூர் பால் விற்பனை தொடங்கி உலக நாடுகளில் பால் விற்பனை வரையிலும், பால் உற்பத்தி தொடங்கி உப பொருட்கள் உற்பத்தி வரையிலும் எங்கெங்கு காணினும் பால்வளத்துறையின் அனைத்து துறைகளிலும் ஊழல், முறைகேடுகளைச் செய்து தமிழக வரலாற்றில் மிகப்பெரிய சாதனைகள் நடந்திருப்பதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வெளிக் கொண்டு வந்து அதனை தொடர்ந்து வெளிச்சம் போட்டுக் காட்டி முன்னாள் பால்வளத்துறை அமைச்சர்கள் மாதவரம் மூர்த்தி, “மோடி எங்களது டாடி” புகழ் ராஜேந்திர பாலாஜி வரை அனைவரது மோசடிகளையும் தோலுரித்து காட்டி வந்திருக்கிறது.
மேலும் கடந்த அதிமுக ஆட்சியில் மதுரை ஆவினில் 30கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக கூறி விசாரணைக்கு உத்தரவிட்ட போது பால் பதிவு அலுவலரும், விசாரணை அதிகாரியுமான அலெக்ஸ் ஜீவதாஸ் எந்த ஒரு முறைகேடுகளும் நடைபெறவில்லை என அறிக்கை அளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தமிழகத்தில் ஆட்சி மாறியுள்ள நிலையில் ஆவின் ஊழல் அதிகாரிகள் மீது கண்டிப்பாக நடவடிக்கை பாயும் என்கிற நிலையில் தன்னை தற்காத்துக் கொள்ள தற்போது சுமார் 13.71 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக முன்னுக்குபின் முரணான அறிக்கை அளித்திருக்கிறார் திரு அலெக்ஸ் ஜீவதாஸ்.
அதுமட்டுமின்றி கூட்டுறவுச் சட்டம் மற்றும் விதிகளுக்கு புறம்பாக சென்னை இணைய விற்பனை பிரிவு முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க பால் பத அலுவலரான திரு அலெக்ஸ் ஜீவதாஸ்க்கு அனுமதி அளித்திருப்பதோடு, அதில் சுமார் 5 கோடி ரூபாய்க்கு மேல் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான ஆவணங்கள் காணாமல் போகவும் அவர் காரணமாக இருந்திருப்பதாக தகவல்கள் வரும் நிலையில் கோப்புகளை பராமரிக்கும் பொறுப்பு அலுவலர்கள் மீது இதுவரை ஆவின் நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதது முறைகேட்டில் ஈடுபட்டு ஊழல் செய்தவர்களை காப்பாற்ற ஆவின் நிர்வாகம் துணை போகிறதோ..? என்கிற பலத்த சந்தேகம் எழுவதை நம்மால் தவிர்க்க முடியவில்லை.
கடந்த அதிமுக ஆட்சியில் ராஜேந்திர பாலாஜியின் பினாமியாக செயல்பட்டு ஆவினில் முறைகேடுகளே நடைபெறவில்லை என ஆவின் உயரதிகாரிகளுக்கு நற்சான்றிதழ் அளித்தவரும், தன் மீதான குற்றச்சாட்டு தொடர்பான ஆவணங்கள் அடங்கிய கோப்புகளையே காணாமல் போகச் செய்து, பொய்யான தகவல்கள் கூறி பதவி உயர்வு பெற்றவரும், பால்வளத்துறை அதிகாரிகளுமான திரு. அலெக்ஸ் ஜீவதாஸ், திரு. கிறிஸ்துதாஸ் ஆகியோரை தற்போது விசாரணை அதிகாரிகளாக நியமனம் செய்திருக்கும் போது, அங்கே ஆவணங்கள் காணாமல் போவதில் என்ன வியப்பு இருக்க முடியும். பாலுக்கு பூனையை காவல் வைத்தால் என்னாகுமோ அதே கதை தான் தற்போது ஆவின் விற்பனை பிரிவிலும் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் கடந்த ஆட்சியில் ஆவினில் பல நூறு கோடி ரூபாய்க்கு மேல் ஊழல், முறைகேடுகள் நடைபெற்றிருப்பதை கண்டறிந்து அதன் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்ததில் பால்வள கூட்டுறவு தணிக்கைத்துறை இயக்குனர் கா.பிரமிளா அவர்களின் பங்களிப்பு அளப்பரியது. அவர் சிறந்த முறையில் செயல்பட்டதால் தான் பால் கொள்முதல் ஊழல், C/F ஏஜென்ட் முறைகேடுகள், தனியார் பால் நிறுவனங்களோடு மறைமுக கூட்டு வைத்து நடைபெற்ற முறைகேடுகள் என சுமார் 500கோடி ரூபாய்க்கு மேலான ஊழல் முறைகேடுகள் எங்களுக்கு மட்டுமின்றி வெளி உலகிற்கும் தெரிய வந்தது. ஒருவேளை அவர் சரியாக செயல்படாமலோ அல்லது தமிழகம் முழுவதும் உள்ள ஆவின் ஒன்றியங்கள் மற்றும் இணையத்தின் ஆவணங்களை முறையாக ஆய்வு செய்யாமல் போயிருந்தாலோ ஆவினில் நடைபெற்ற ஊழல், முறைகேடுகள் ஒட்டுமொத்தமாக, முற்றிலும் மூடி மறைக்கப்பட்டிருக்கும். ஆவின் நிறுவனத்தின் அழிவை எவராலும் தடுக்க முடியாமல் போயிருக்கும்.
ஆனால் ராஜேந்திர பாலாஜியின் பினாமியாக செயல்பட்ட அதிகாரிகள் தங்களையும், ராஜேந்திர பாலாஜியையும் காப்பாற்றிக் கொள்ள பல கோடி ரூபாய் முறைகேடுகள் தொடர்பான ஆவணங்களை தொலைத்து விட்டோ அல்லது தொலைந்து போக செய்து விட்டோ தற்போது அதன் பழியை பால்வள கூட்டுறவு தணிக்கைத் துறை இயக்குனர் கா.பிரமிளா அவர்கள் மற்றும் ஆவின் நிறுவனத்தில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டிய ஆவின் அலுவலர்கள் சிலர் மீதே பழி சுமத்தியிருப்பதோடு அவர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டிருப்பது தவறான முன்னுதாரணமாகி விடும் என்பதை மரியாதைக்குரிய ஆவின் நிர்வாக இயக்குனர் திரு கந்தசாமி ஐஏஎஸ் அவர்களும், தமிழக அரசும் உணர வேண்டும். அதற்கு கால்நடைத்துறைச் செயலாளரின் கோப்பு எண் 831 (A1)/ MP II/ 2021 யை, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரும், முதல்வரின் செயலாளரும் ஆய்வு செய்தாலே, ஆவினில் நடைபெற்று வரும் முறைகேடுகள் தொடர்பாக நாங்கள் தொடர்ந்து கூறி வரும் குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை உணர்ந்திட முடியும்.
எனவே பால்வளத்துறை தலைமை அலுவலகம் மற்றும் ஆவின் இணையத்தின் தலைமை அலுவலகத்தில் உயர் பொறுப்பில் உள்ள அலுவலர்கள் அனைவரும் கூண்டோடு மாற்றப்பட்டு அவர்கள் மீது சட்டரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்கு உத்தரவிட்டால் மட்டுமே பால்வளத் துறையை சீர்படுத்த முடியும் என்பதை தமிழக முதல்வர் அவர்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறோம்.
மேலும் ஆவினில் கடந்த ஆட்சியின் போது முறைகேடாக நியமிக்கப்பட்ட 236பணியிடங்களும், நிறுத்தி வைத்துள்ள 147பணியிடங்களும் இன்றைய தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படாமலேயே இருக்கிறது என்பதையும் மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறோம்.
தவறிழைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் நடைபெற்ற முறைகேடுகளை தகுந்த ஆவணங்கள் மூலம் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்திய பால்வள தணிக்கைத்துறை இயக்குனர் மீதே நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ள ஆவின் நிர்வாக இயக்குனரின் அறிக்கை ஆவின் ஊழல் விவகாரங்களை நீர்த்துப்போக செய்யும் முயற்சியாகவே பார்க்க முடிகிறது. பாலவளத்துறை இயக்குனரின் கீழ் பணியாற்றி வரும் குற்றச்சாட்டுக்கு ஆளான அதிகாரிகள் மீது இதுவரை எவ்வித ஒழுங்கு நடவடிக்கை எடுக்காது, ஊழலுக்கு துணை நின்ற அதிகாரிகளை விசாரணை அதிகாரிகளாக நியமனம் செய்து, நேர்மையான அதிகாரிகள் மீதே நடவடிக்கை எடுக்கப்படுமானால் நேர்மையான அதிகாரிகள் நமக்கு எதற்கு என ஊழல், முறைகேடுகளை கண்டு கொள்ளாமல் கடந்து போகும் சூழ்நிலை ஏற்பட்டு விடும். இதனால் இழப்பு அரசுக்கும், ஆவினுக்கும் தான் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.
மோசடிப் பேர்வழிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் முறைகேடுகளை சுட்டிக் காட்டிய அதிகாரிகள் மீதே நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்திருப்பது திருட்டு செயலில் ஈடுபட்ட குற்றவாளியை கையும் களவுமாக பிடித்த காவலர் மீதும், குற்றவாளிக்கு தண்டனை வழங்கிய நீதிபதி மீதும் நடவடிக்கை எடுப்பது போன்றதாகும்.
எனவே, ஆவின் விற்பனை பிரிவு முறைகேடுகள் தொடர்பான ஆவணங்கள் காணாமல் போன விவகாரத்தில், நிதித்துறையின் கீழ் இயங்கும் நேர்மையான பால்வள கூட்டுறவு தணிக்கைத்துறை இயக்குனர் என்று கூறப்படும், இயக்குனர் பிரமிளா அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருப்பதை கைவிட்டு ஊழல் அதிகாரிகளான திரு. அலெக்ஸ் ஜீவதாஸ் மற்றும் கிறிஸ்துதாஸ் உள்ளிட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் அத்துடன் ஏற்கனவே நாங்கள் கோரிய படி சி.பி.ஐ விசரணைக்கோ அல்லது லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு துறையின் நேரடி விசாரணைக்கோ உத்தரவிட வேண்டும் என தமிழக முதல்வர் அவர்களை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்வதோடு, ஆவின் முறைகேடுகள் தொடர்பான விவகாரத்தில் தனி கவனம் செலுத்தி ஆவினையும், பால் உற்பத்தியாளர்களையும் காத்திட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். தமிழக முதல்வர் அவர்கள் ஆவின் ஊழல், முறைகேடுகளை களைய சிறப்பு தனி கவனம் செலுத்தவில்லையென்றால், ஆவின் முறைகேடுகள் மீண்டும் அரங்கேறும் சூழல் உருவாகும் அத்துடன் “ஆவின் நிறுவனத்தை அந்த ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது” என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர் சு. ஆ. பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்..