Wed. Dec 4th, 2024

நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கை தாக்கல் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக காலை 11,30 மணியளவில் அனைத்து அரசியல் கட்சித்தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார். காணொலி வாயிலாக நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், தி.மு.க, அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறுக் கட்சிகள் கலந்துகொள்ளவுள்ளன.

ஆண்டின் தொடக்கதில் கூடியுள்ள நாடாளுமன்றத் கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று குடியரசுத் தலைவர் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார். அவரின் உரையை காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் புறக்கணித்தன.

பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,2021 – 22 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளார். இதனைத்தொடர்ந்து, அதன் மீதான விவாதங்கள் நடைபெறும்.

புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியில் 60 நாள்களுக்கு மேலாக அறவழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 26 ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு நடத்திய டிராக்டர் பேரணி வன்முறையில் முடிந்தது. இந்தப் பேரணியின் போது விவசாயிகள் மீது தடியடி நடத்தியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த விவகாரம், நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.