Wed. Dec 4th, 2024

திருவள்ளூர் தொகுதியில் தற்போதைய தி.மு.க. சடடமன்ற உறுப்பினர் V.G. ராஜேந்திரனுக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்படலாம் என்று அண்ணா அறிவாலய நிர்வாகிகள் அடித்துக் கூறுகின்றனர். செங்குந்த முதலியார் சமுதாயத்தைச் சேர்ந்த இவர், கல்லூரி தாளாளராகவும் உள்ளார். இரண்டாவது முறையும் இவருக்கே வாய்ப்பு கிடைத்து, வெற்றி பெற்று எம்.எல்.ஏ., ஆனால், திருவள்ளூர் மாவட்ட தி.மு.க. அமைச்சர் என்ற அதிர்ஷ்டக் காற்று, வி.ஜி.ராஜேந்திரனை தாலாட்டும் என்கிறார்கள், அவரது விசுவாசிகள்.

இவ்வளவு பின்னணி இருந்தாலும், இவரோடு மோதி, மல்லுக்கட்டி தொகுதியை பெற திருவள்ளூர் நகர செயலாளர் சி.சு.ரவிச்சந்திரனும் அண்ணா அறிவாலயத்திற்கு படையெடுத்து வருகிறார்.

கும்மிடிபூண்டி தொகுதி அ.தி.மு.க. வசம் உள்ளது. 2006 மற்றும் 2016 ஆகிய இரண்டு சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற கே..எஸ். விஜயகுமார், ஹாட்ரிக் சாதனைப் படைக்க மூன்றாவது முறையும் அ.தி.மு.க. சார்பில் களத்தில் இறங்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அ.தி.மு.க.வை எதிர்த்து தி.மு.க.வே இந்த முறை இந்த தொகுதியில் போட்டியிடும் என தெரிகிறது. அக்கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் முன்னிலையில் உள்ளார்.

அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டால் முன்னாள் ஒன்றிய பொறுப்பாளர் வழக்கறிஞர் P.வெங்கடாசலபதிக்கு அதிர்ஷ்டம் அடிக்கலாம்.

பூந்தமல்லி தொகுதியில் 2019ல் இடைத்தேர்தல் நடைபெற்றதால், 5 ஆண்டு முழுமையாக சட்டமன்ற உறுப்பினர் பணியை நிறைவேற்றாததால், சிட்டிங் எம்.எல்.ஏ.வான ஆ.கிருஷ்ணசாமி பெயரே ஆணித்தரமாக இருக்கிறதாம்.

பொன்னேரி தொகுதியில் மீஞ்சூர் (தெ) ஒன்றிய செயலாளர் வள்ளூர் S.ரமேஷ்ராஜ் முன்னிலையில் இருக்கிறார். கொரோனோ காலத்திலும் தி.மு.க தலைமை அறிவித்த அத்தனை நிகழ்வுகளிலும், நலத்திட்ட வழங்கும் நிகழ்விலும் பம்பரமாக சுற்றி வந்தவர் என்ற பெயர், தொகுதிக்குள் பரவலாக எதிரொலிக்கிறது.

அவருக்கு ஒருவேளை அதிர்ஷ்டம் கைகூட வில்லை என்றால், ஒருங்கினைந்த திருவள்ளூர் மாவட்ட முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் கன்னிகை G.ஸ்டாலினுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

இருவருக்கும் அதிர்ஷ்டம் இல்லையெனில், கடந்த முறை சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த டாக்டர் பரிமளம் பெயர் டிக் அடிக்கப்படலாம் என்கிறார்கள் தி.மு.க முன்னணி நிர்வாகிகள்.

கடந்த முறை தோல்வியை தழுவியர் என்பதால், தொகுதிக்குள் தன் மீது இருக்கும் அனுதாபமே, தி.மு.க. வெற்றியை எளிதாக்கும் என்று நம்பிக்கை வார்த்தைகளை, முன்னணி தி.மு.க. நிர்வாகிகளிடம் பகிர்ந்து வருகிறாராம் டாக்டர் பரிமளம்..

ஆவடி என்றாலே சா.மு. நாசர் என்றுதான் அண்ணா அறிவாலயம் வரை பெயர், கல்வெட்டுப் போல பதிவாகியாகி இருக்கிறது.

இந்த தொகுதியில் கடந்த முறை அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற மா.பா.பாண்டியராஜன், அமைச்சராகவும் உள்ளார். அவரை எகிறி அடிக்க நாசர்தான் சரியான ஆள் என்று தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகிகளே கூறுகின்றனர். இவரும் எம்.எல்.ஏ., வாக தேர்ந்தெடுக்கப்பட்டால், அமைச்சர் என்ற அதிர்ஷ்டம் நாசரையும் அரவணைக்கலாம். அ.தி.மு.க. அமைச்சரை வீழ்த்தியவர் என்ற பெருமையும கூடுதல் கவனத்தை பெறும்.

இருந்தாலும், அரசியல் தட்பவெப்ப நிலை ஒருவேளை மாறினால், மத்திய மாவட்ட செயலாளர் சா.மு.நாசருக்குப் பதிலாவ பூவை ஜெரால்ட் வேட்பாளராக அறிவிக்கப்படலாம்.

திருத்தணி தொகுதிக்கு சென்று வந்த பிறகுதான், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் இமேஜே வெகுவாக மாறி இருக்கிறது. வெள்ளி வேலை அவர் ஏந்த, ஒட்டுமொத்த தமிழக பா.ஜ.க.வே ஆடிப்போயிருக்கிறது.

இந்த வரலாற்றுப் பெருமையைக் கொண்ட திருத்தணி தொகுதியில். பழம்பெரும் தி.மு.க. தலையே களத்தில் குதித்திருப்பதுதான், இளம்தலைமுறை தி.மு.க. நிர்வாகிகளை கதிகலங்க வைத்திருக்கிறது. மறைந்த தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதியின் அன்பைப் பெற்றவர்தான் அந்த மூத்த தலைவர் இ.ஏ.பி. சிவாஜி. அதனாலேயே தற்போதைய தலைவர் மு.க.ஸடாலினின் நம்பிககையையும் முழுமையாக பெற்றிருப்பவர் இவர் என்கிறார்கள் திருத்தணி தி.மு.க. பிரமுகர்கள்.

திருத்தணி தொகுதியில் 1996 ல் வெற்றி, 2001ல் தோல்வி, திருவள்ளூர் தொகுதியில் 2006ல் வெற்றி, 2011ல் தோல்வி என கலகல தேர்தல் அனுபவங்களைக் கொண்டவர் இ.ஏ.பி. சிவாஜி என்பதால், முதல் சாய்ஸ் ஆக இவர் தான் இருக்கிறார் என்கிறார்கள் அண்ணா அறிவாலய முன்னணி நிர்வாகிகள்.

திருத்தணியில் வெற்றியை நிர்ணயிக்கக் கூடிய செங்குந்த முதலியார் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதும் சிவாஜிக்கு உள்ள கூடுதல் பலமாகும். பழுத்த அரசியல்வாதி சிவாஜி என்பதால், இந்த முறை போட்டியிட வாய்ப்பு கிடைத்து வெற்றிப் பெற்றால், அமைச்சராவதற்கும் அதிர்ஷ்டம் அடிக்கும் என்கிறார்கள் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள்.

இப்படி பழுத்த அரசியல்வாதியான சிவாஜியோடு, களத்தில் துணிந்து நிற்கிறார்கள். திருத்திணி எஸ்.சந்திரனும்,, மாவட்ட பொறுப்பாளர் எம்.பூபதியும்.

திருத்தணி தொகுதியில், வல்லவனுக்கு வல்லவன் யார் என்பதில், மூவருக்குள்ளும் கடும் போட்டி நிலவுகிறதாம்.

கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் நான்கு தொகுதிகளை அ.தி.மு.க. கைப்பற்றியது. 2 இடங்களில் மட்டுமே தி.மு.க. வெற்றிப் பெற்றது. அதனால், இந்த முறை ஆறு தொகுதிகளையும் லபக்காக அள்ள வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். அவரின் எண்ணத்தை நிறைவேற்ற, திருவள்ளூர் மாவட்ட தி.மு.க.நிர்வாகிகள் வெறித்தனமாக நிற்கிறாகள்.

தேர்தல் முடிவு எப்படியிருக்கும்..? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்…