Mon. Apr 29th, 2024

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி. குன்னத்தூரில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பல கோடி ரூபால் செலவில் ( 80 கோடி ரூபாய் என தகவலும் வெளியாகி இருக்கிறது) கோயில் கட்டியுள்ளார் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார். தை பொங்கல் அன்று அடிக்கல் நாட்டப்பட்டு, மின்னல் வேகத்தில் 16 நாள்களுக்குள் கட்டப்பட்ட கோயிலுக்கு நாளை குடமுழுக்கு விழா. இதனையொட்டி, கடந்த சில நாட்களாக திருமங்கலம் மட்டுமல்ல, மதுரையே அல்லோகலப்பட்டு கிடக்கிறது. குடமுழுக்கு விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி,துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொள்கிறார்கள். குறைந்தது 50 ஆயிரம் பேரை திரட்ட வேண்டும் என்று இலக்கு வைத்து, வீடு வீடாக விழா அழைப்பிதழும், நூறு ரூபாயும், புடவை, வேட்டியும் வழங்கி வருகிறார்களாம் அமைச்சரின் விசுவாசிகள்.

ஜெயலலிதா மீதான அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் பக்தியை நினைத்தால் உடம்பெல்லாம் சிலிர்க்கிறது. இதே மதுரையில்தான், பிச்சையெடுத்த காசை எல்லாம், சுமார் ஒரு லட்சம் ரூபாயை கொரோனோ காலத்தில் மக்களுக்கு பயன்படட்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைந்தார், துாத்துக்குடி மாவட்டம், ஆலங்குளத்தைச் சேர்ந்த 65 வயதான பாண்டியன்.

இவருக்கு இருக்கிற சமுதாய சிந்தனை அளவுக்குக் கூடவா இல்லை அமைச்சர் பதவியை வகிக்கும் ஆர்.பி. உதயகுமாருக்கு என்று கேள்வி மேல் கேள்வி எழுப்புகின்றனர் விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். பத்தாண்டுகளுக்கு முன்பே அப்போதைய முதல்வர் செல்வி ஜெயலலிதாவால் கண்டிக்கப்பட்டும், அதில் இருந்து கூட இன்றைக்கும் பாடம் கற்றுக் கொள்ளாமல் இருக்கும் அமைச்சரை, பரிதாபமாக பார்க்கிறார்கள் அவரது நண்பர்கள்.

2011 ல் முதல்முறையாக அமைச்சராக பதவியேற்ற ஆர்.பி. உதயகுமார், காலணி அணியாமல் தலைமைச்செயலகத்திற்கு வந்தபோதே, அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் கண்டிப்புக்கு ஆளானவர். அம்மா இருக்கும் இடம் கோயில் என்று டைலாக் வேற விட்டார். அதை கேட்டுதான் அந்த அம்மாவே கூப்பிட்டு ஆர்.பி. உதயகுமாரை கடுமையாக எச்சரித்தார். அதன் பிறகு காலணி அணிந்து சட்டப்பேரவைக்கு வரத் தொடங்கினார்.

மதுரை மாவட்டத்தில் உள்ள மற்றொரு அமைச்சரான செல்லூர் ராஜுவை விட மனிதநேய மிக்கவர் என்பதும் அவரைப் போல கோமாளித்தனம் செய்யாதவர் என்றெல்லாம், நடுநிலையாளர்களே அமைச்சர் ஆர்.பி.உதயக்குமாரை பாராட்டுகின்றனர். அறிமுகமில்லாத நபர்கள் கூட அவரை அணுகி தங்கள் கருத்தை துணிச்சலாக கூறலாம் என்றளவுக்கு எளிய மனிதராக வலம் வரும் ஆர்.பி. உதயகுமார், ஆட்சி நிறைவடையும் தருவாயில், கோமாளித்தனத்தில் செல்லூர் ராஜுவையே மிஞ்சிக் காட்டுகிறேன் என்று சவால்விட்டால், எங்கே போய் தலையை முட்டிக் கொள்வது என்று புலம்புகிறார்கள் மதுரையை சேர்ந்த எம்.ஜி.ஆர். காலத்து அ.தி.மு.க. விசுவாசிகள்.

குன்னத்தூரில் கோயில் எதற்கு என்று அவரிடம் கேட்டபோது, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உதிர்த்த முத்துக்களை கொஞ்சம் வாசித்துதான் பாருங்களேன்.

ஜெயலலிதா வாழ்ந்த காலத்தில் தமிழர் குலசாமி , வாழும் தெய்வம் என தொண்டர்களால் அழைக்கப்பட்டார். உலகெங்கும் பரவியுள்ள தமிழர்களின் நெஞ்சங்களில் வாழும் தெய்வம் ஜெயலலிதா. அவரால் பயனடைந்தவர்கள் எல்லாம் அவரை தெய்வமாக போற்றி வணங்க வேண்டும். அவரால் இந்த உயர்வுக்கு வந்த நான் வாழ்நாள் முழுவதும் அவருக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். எந்த விஷயமாக இருந்தாலும் மதுரை எப்போதும் முன்மாதிரியாக இருக்கும் இந்த திருக்கோயிலும் ஒரு முன்மாதிரியாக இருக்கும் என்று மலர்ச்சியுடன் பேசியுள்ளார் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்.

விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதாக முன்மாதிரிகள் இருந்தால், மக்கள் கொண்டாடதான் செய்வார்கள. ஆனால், நூறாண்டு, ஆயிரம் ஆண்டு பழமையான கோயில்கள், சீரமைக்காமல் பாழடைந்து கிடக்கும் நேரத்திலும், ஒருவேளை கூட விளக்கு ஏற்றாமல், இருளடைந்து கிடக்கும் புராதன கோயில்கள் தமிழகத்தில் ஏராளமாக இருக்கும் போது, 80 கோடி ரூபாய்க்கு ஜெயலலிதாவுக்கும், எம்.ஜி.ஆருக்கும் கோயில் தேவைதானா? அந்த தலைவர்களே இருந்தால் கூட இதையெல்லாம் ரசிக்க மாட்டார்கள் என்கிறார்கள் திருமங்கலத்து அ.தி.மு.க. நிர்வாகிகள்.

மதுரையில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் நவீன கருவிகள் இல்லாமல், பல ஆயிரம் மக்கள் தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்று பல லட்சம் ருபாய் செலவில் மருத்துவச் சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நேரத்தில் அந்த மருத்துவமனையை மேம்படுத்த, இந்த பணத்தை செலவிட்டிருந்தால் கூட பல தலைமுறைகளுக்கு அமைச்சருக்கு வாழ்த்துகளைக் சொல்லிக் கொண்டிருப்பார்கள் என்கிறாகள் அமைச்சரின் வளர்ச்சி மீது உண்மையான அக்கறை கொண்ட நலம் விரும்பிகள்.

கோடிக்கணக்கான ரூபாயை தண்ணீர் போல வாரி இறைக்கிறாரே அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், திருமங்கலம் தொகுதியில் நின்றால் அமோக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று விடுவாரா? என்று கேட்டால், நமட்டுச் சிரிப்பு சிரிக்கிறார்கள் அவர் கூடவே வலம் வரும் அ.தி.மு.க. நிர்வாகிகள். மேம்போக்கிற்காகவும், அன்றாடம் செலவிற்கும் பணம் கிடைக்கிறது என்பதற்காகவே, அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பக்கம் கூட்டம் இருக்கிறது. தேர்தல் என்று வந்துவிட்டால், மக்களின் உண்மையான குணம் வெளிப்படும். அதை தாங்கும் சக்தியை, கோயிலில் முழு உருவத்தில் சிலையாக நிற்கும் ஜெயலலிதாவும், எம்.ஜி.ஆரும் தான் அமைச்சர் ஆ.பி.உதயகுமாருக்கு வழங்க வேண்டும் என்று அக்கறையோடு அங்கலாய்க்கிறார்கள் மதுரை மல்லி போல லேசுபட்ட மனம் கொண்டு அ.தி.மு.க. நிர்வாகிகள்.

ஆடு ராமா ஆடு.. வேற என்னத்த சொல்ல….