Thu. May 2nd, 2024

வெற்றி நடைப்போடும் தமிழகம்.. என்ற தலைப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மட்டும் முன்னிலைப்படுத்தி வரும் விளம்பரங்கள், ஆளும்கட்சி அமைச்சரவைக்குள்ளேயே அதிர்வேட்டுக்களை கிளப்பி வருகிறதாம். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இணையாக தன்னை பாவித்துக் கொண்டு இ.பி.எஸ். ஆடி வரும் ஆட்டம் அளவுக்கு மீறிப் போய்க் கொண்டிருப்பதாக கொந்தளிக்கிறார்கள் அமைச்சர்களின் ஆண்மையுள்ள விசுவாசிகள்.

‘தன்னிரில்லா தலைவர்’ தான்தான் என்ற தலைக்கணத்துடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி , ஆட்சியிலும், கட்சியிலும் போடும் ஆட்டத்திற்கு ஒட்டுமொத்தமாக முற்றுப்புள்ளி வைக்க, சின்னம்மா சசிகலாவின் தமிழகம் வருகையை ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கிறார்கள், இ.பி.எஸ்.ஸுக்கு எதிரணியில் உள்ள அமைச்சர்கள் பலர்.

கொரோனோ தொற்றை காரணம் காட்டி கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்கிய இ.பி.எஸ்.ஸின் ராஜாங்கம், கடந்த 27 ஆம் தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் திறப்பு விழாவில் உச்சக்கட்டத்திற்குச் சென்றதைக் கண்டு கொதித்துப் போன அமைச்சர்கள், இ.பி.எஸ்.ஸுக்கு எதிராக அணி திரள ஆரம்பித்துவிட்டார்கள். அமைச்சர்கள் மட்டத்தில் தனக்கு எதிராக இருக்கும் புகைச்சலை, எண்ணெய் ஊற்றி கொழுந்துவிட்டு எரிய வைத்துவிட்டார் இ.பி.எஸ் என்கிறார்கள், ஆத்திரத்தில் இருக்கும் அதி.மு.க. மூத்த நிர்வாகிகள்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா, உயிரோடு இருந்த காலத்தில், கட்சி விழாவாக இருந்தாலும், அரசு விழாவாக இருந்தாலும், மூத்த நிர்வாகிகளை, மூதத அமைச்சர்களை,தனது அருகிலேயே இருக்குமாறு பார்த்துக் கொள்வார். தனித்த ஆளுமையாக இருந்தாலும் கூட, மேடை நாகரிகம் கருதி, மூத்தவர்களுக்கு மரியாதை கொடுக்க ஒருபோதும் தயங்கியது கிடையாது, செல்வி ஜெயலலிதா.. ஆனால், அவரையே மிஞ்சிய தலைவர் தான் என்பதை நிலை நிறுத்தும் அளவிற்கு இ.பி.எஸ்.ஸுக்கு அதிகார மமதை அதிகமாகிவிட்டது என்று புலம்புகிறார்கள் எம்.ஜி.ஆர்.காலத்து அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள்.

அதற்கு அண்மைக்கால, உதாரணமாக அவர்கள் முன்வைப்பது, மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழாவைதான். அன்றைய தினம், துணை முதல்வர் ஓ.பி.எஸ்., சட்டப்பேரவைத்தலைவர் தனபால், தலைமைச் செயலாளர் கே.சண்முகம் ஆகிய மூன்று பேரை மட்டும் தனது அருகில் நிறுத்திக் கொண்டு, மூத்த அமைச்சர்கள், முன்னணி நிர்வாகிகள் உள்பட அனைவரையும், ஜெயலலிதா சமாதி வளாகத்திற்கு வெளியே நிறுத்தி வைத்து, காவல்துறையையும் வளையம் போல பாதுகாப்பாக நிறுத்தியது, ஒட்டுமொத்த அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று அனல் கக்க பேசுகிறார்கள் அமைச்சர்களின் விசுவாசிகள்.

இப்படிபட்ட தருணத்திற்காகவே காத்திருந்த ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள், , முதல்வர் இ.பி.எஸ்.ஸுக்கு எதிராக கொதிக்கும் அமைச்சர்களையும், முன்னணி நிர்வாகிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் ரகசியமாக ஈடுபட தொடங்கியுள்ளனர். முதலமைச்சர் வேட்பாளர் என்று அறிவித்துவிட்டதாலேயே, அ.தி.மு.க.வே தான்தான் என்ற மிதப்பில் ஆட்டம் போடும் இ.பி.எஸ்.ஸுக்கு உடனடியாக செக் வைக்க வேண்டும் என்று மூத்த அமைச்சர்கள், ஓ.பி.எஸ்.ஸை சந்தித்து கோரிக்கை வைத்தபோது, மெல்லிய புன்னகையுடன் அவர்கள் முன்பு அச்சடிக்கப்பட்ட சில தாள்களைப் தூக்கிப் போட்டாராம்.

அந்த தாள்களைப் புரட்டிய அமைச்சர்கள் அதிர்ச்சியில் உறைந்துப் போய்விட்டார்களாம்.. கொங்கு மண்டலத்தில் ஓ.பி.எஸ்., தனிப்பட்ட முறையில் எடுத்த கருத்து கணிப்பு முடிவுகள்தான், அதுவாம். அ.தி.மு.க. ஆட்சியையே காப்பாற்றிக் கொண்டிருப்பதே கொங்கு மண்டலத்து அமைச்சர்கள்தான் என்ற இமேஜையே சுக்கு நூறாக உடைந்து எறிந்திருந்ததாம், அந்த கருத்துக் கணிப்பு முடிவுகள். 20 சதவிகிதத்தில் இருந்து 25 சதவிகித்திற்கு மேல் ஒரு தொகுதியில் கூட அ.தி.மு.க.வுக்கு சாதகமாக இல்லையாம். இதே நிலை நீடித்தால், கொங்கு மண்டலத்திலேயே 5, 6 தொகுதிகளில் அ.தி.மு.க வெற்றி பெறுவதே குதிரைக்கொம்பு என்று புள்ளி விபரங்களுடன் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறதாம். கொங்கு மண்டலத்தில் தி.மு.க. வுக்கு அபார ஆதரவு இருப்பதும், இன்றைய நிலையிலேயே 35 சதவிகிதத்திற்கு மேல் ஆதரவு இருப்பதையும் போட்டு உடைத்துள்ளதாம் அந்த கருத்துக் கணிப்பு. .

தன்னை மட்டுமே முன்னிறுத்தி எடப்பாடி பழனிசாமி கர்வத்தோடு நடந்து கொள்வதை கொங்கு மண்டல அ.தி.மு.க நிர்வாகிகளே ரசிக்கவில்லை. வரும் தேர்தலில் பொதுமக்களை அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக வாக்களிக்க வைப்பதைவிட, அதிக சிரமப்பட வேண்டியிருக்கும் அ.தி.மு.க. நிர்வாகிகளையே இரட்டை இலைக்கு ஓட்டுப் போட வைப்பதற்கு என்று கருத்துக் கணிப்பு அறிக்கையில் குத்தி காட்டப்பட்டிருக்கிறதாம்.

கருத்துக் கணிப்பை பொய்யாக்க, தனக்கு வேண்டிய டூபாக்கூர் நபரை வைத்துக் கொண்டு, பெட்டி, பெட்டியாக பணத்தை கொடுத்து அ.தி.மு.க.வுக்கு 35 சதவிகிதம் ஆதரவு இருப்பதாக இ.பி.எஸ். நாடகம் ஆடுகிறார். அவரின் கபட நாடகம் தேர்தலில் எதிரொலித்து விடும். அப்போது அதை அவர் உணர்ந்து கொள்வார் என்றும் கருத்து பரிமாறப்பட்டதாம். என்றைக்குமே தனிமரம் தோப்பாகாது என்பதை தன்னை சந்தித்த அ.தி.மு.க. அமைச்சர்களிடமும், மூத்த நிர்வாகிகளிடமும் ஓ.பி.எஸ்.,நிதானமாக எடுத்துரைத்தாக கூறுகிறார்கள் அவருக்கு நெருக்கமான நிர்வாகிகள்.

நிறைவாக, வழக்கத்திற்கு மாறாக ஓ.பி.எஸ்., உச்சரித்த திருக்குறள்தான், இன்றைய நிலையில் இ.பி.எஸ்.ஸுக்கு மிகப் பொருத்தமாக இருக்கிறதாம். அ.தி.மு.க. தலையெழுத்து என்னவாகப் போகிறது, மீண்டும் சசிகலாவிடமே எல்லோரும் சரண்டாராகும் நிலையை இ.பி.எஸ்.ஸே வலிந்து உருவாக்கிவிடப் போகிறார் என்று புலம்புகிறார்கள் எம்.ஜி.ஆர் காலத்து அ.தி.மு.க. விசுவாசிகள்.

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்.

இந்தக் திறக்குறளைதான் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இப்போது அடிக்கடி உச்சரித்துக் கொண்டிருக்கிறாராம்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை விட நூறு மடங்கு சக்தி மிக்க தலைவர் தான்தான் என்று நினைத்துக் கொண்டிருக்கிற இ.பி.எஸ்.ஸுக்கு, திருக்குறள் அறவுரையெல்லாம் எம்மாத்திரம்….