Mon. May 6th, 2024

சிங்கப்பூர் டோபி காட்டில் உள்ள அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோவில் தமிழர்களுக்கு மட்டுமே உரித்தான ஆன்மிகப் பூமியல்ல. மதங்களைக் கடந்து, மொழிகளைக் கடந்து இறை நம்பிக்கையுள்ள அனைவருக்கும் ஆத்மார்ந்த நிம்மதிய தரும் ஆலயமாக, போற்றப்பட்டு வருகிறது

சிங்கப்பூரில் இந்த முருகன் கோவிலை, அந்த நாட்டு அரசு, தேசிய நினைவுச் சின்னமாக அறிவித்துள்ளதையடுத்தே, அதன் சிறப்பை உணர முடியும். இஸ்லாமியத்தை பேணும் ஒரு அரசு, தமிழ்க்கடவுளுக்கு கொடுக்கும் ஆகச் சிறந்த முக்கியத்துவத்தை, அந்நாட்டில் உள்ள அனைத்து மக்களும் தலை வணங்கி ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

சிங்கப்பூருக்கு வியாபார நிமித்தமாக சென்ற தமிழகத்தைச் சேர்ந்த நாட்டுகோட்டை செட்டியார்கள், 1859ல், அங்கு, தண்டாயுதபாணி கோவிலை கட்டினர்.சிங்கப்பூர் தேசிய பாரம்பரிய நினைவுச் சின்ன வாரியம், இந்த கோவிலை, சிங்கப்பூரின் தேசிய நினைவுச் சின்னங்களில் ஒன்றாக, தற்போது அறிவித்துள்ளது. ஏற்கனவே, இரண்டு இந்து கோவில்கள், சிங்கப்பூரின் தேசிய நினைவுச் சின்னங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. அந்த நாட்டின் தேசிய நினைவுச் சின்னங்களின் பட்டியலில், தண்டாயுதபாணி கோவில், 67வது இடத்தில் உள்ளது. ‘கலாசாரம், சமூகம், வரலாற்று முக்கியத்துவ அடையாளமாகவும், கட்டடக் கலை சிறப்பின் அடையாளமாகவும் திகழ்வதால், இந்த கோவிலை தேசிய நினைவுச் சின்னமாக அறிவித்துள்ளோம்’ என, சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொண்டாடப்படும் தைப்பூசத்திற்குச் சற்றும் குறைவில்லாத கொண்டாட்டங்கள் பல வெளிநாடுகளில் கொண்டாடப்படுகிறது. அதுவும் தமிழர்கள் அதிகம் நிறைந்த சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் கேட்கவே வேண்டாம். இந்த வருடம் கொரானா காரணமாக சில கட்டுப்பாட்டுகளை விதித்துள்ளார்கள்.

சிங்கப்பூர் குட்டி இந்தியாவில் உள்ள பெருமாள் கோவிலில் இருந்து காவடி புறப்பட்டு டோபி காட் என்ற இடத்தில் உள்ள தண்டாயுதபாணி முருகன் கோவிலை அடைகிறது.தோராயமாக மூன்று கிலோ மீட்டர் தூரம் இருக்கும்.

வழி நெடுக காவடி ஊர்வலம் செல்லப் பாதை ஒதுக்கிக் கொடுத்திருப்பார்கள், நம்மவர்கள் மேள சத்தத்துடன் நொறுக்கி தள்ளிட்டு போய் கொண்டு இருப்பார்கள். வேடிக்கை பார்க்காதவர்களே கிடையாது.வெளிநாட்டினர் காத்திருந்து பார்க்கிறார்கள், வழி நெடுக ஊர்வலத்தைப் பார்வையிட பார்வையாளர்களுக்காக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது, தண்ணீர் பந்தலும் உண்டு.

காலை 6மணிக்கு முன்பு இருந்தே காவடி வந்து கொண்டு இருக்கும், மாலை வரை வந்து கொண்டு இருப்பார்கள், அப்படியொரு கூட்டம்.

போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைக்காகப் பலத்த காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும்.வெளிநாட்டினர் காலையில் இருந்த படம் எடுக்கக் குவிந்து விடுவர்,

தண்ணீர்பந்தல் அமைக்கப்பட்டு இருக்கும், இங்கு வருபவர்கள் அனைவருக்கும் உணவு தண்ணீர் இலவசமாக வழங்கப்படும்.கோவிலினுள் சென்று பார்க்க முடியாதவர்கள் கடவுளைத் தரிசிக்க வெளியே பெரிய திரை அமைக்கப்பட்டு இருக்கும்.

சீனர் குழுவினர் பால்குடம் எடுத்து வருவார்கள், இவர்கள் ஸ்டைலில் ட்ரம்ஸ் அடிப்பார்கள்,பட்டய கிளப்பிடுவாங்க. அதுவும் வித்யாசமா ஒலி எழுப்புவாங்க…. உடம்பெல்லாம் மின்சாரம் பாய்ந்த மாதிரி இருக்கும்.

கூட்டம் இதோட முடிந்து விடும், காவடி நின்று விடும் என்று நினைத்துட்டே இருப்பீர்கள்..ஆனால் அது குறைந்த மாதிரியே தெரியாது.. வருவார்கள் வருவார்கள் வந்து கொண்டே இருப்பார்கள். சரமாரியா வந்துகொண்டே இருப்பார்கள்

ஆறு ஏழு மணி நேரமா நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கும் பக்தர்கள் பிறகு உள்ளே சென்று சாமி கும்பிட்டு விட்டு, கிளம்பவார்கள்.குட்டி இந்தியாவில் காவடி எடுத்துச் செல்பவர்கள் செல்ல வழி தடுப்பு வைத்து அமைத்து இருப்பார்கள். ட்ரம்ஸ் எல்லாம் வைத்து வழி முழுவதும் அடித்து அசத்து அசத்துனு அசத்திடுவார்கள் நம்ம மக்கள்.

வேடிக்கை பார்க்காதவர்களே கிடையாது, ஒரு சில வேன் பேருந்து ஓட்டுனர்கள் அவர்கள் அருகே நிறுத்தி வணங்கிச் செல்வர்.அங்கே அடிக்கிற அடிக்கு ஆட்டம் போட்டே ஆக வேண்டும் போல கால்கள் பரபரப்பாகிவிடும், எந்த தேவையில்லாத சிந்தனையும் இல்லாமல் பக்திமயமாக இருக்கும்,

மொத்தத்துல தைப்பூசம் சிங்கப்பூரை அதிர வைத்துவிடும் . அரசாங்கம் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்து தரும்.கோவில் பகுதியில் ஒரு பக்கம் போக்குவரத்தையே வேறு பக்கம் திருப்பி விட்டிருப்பார்கள். காவலர்களும் ஏகப்பட்ட பேர் பணியில் அமர்த்தப்பட்டு இருப்பார்கள்.

தைப்பூசம் சிறப்பாக நடப்பதற்க்கு கோவில் நிர்வாகம் சிறப்பான ஏற்பாடுகளை செய்து தரும், அதற்குத் துணையாக அரசாங்கமும் உதவி செய்யும் இவ்வளவு கூட்டத்தை வைத்துச் சிறப்பாக ஒரு திருவிழாவை நடத்துவது என்பது சாதாரண விசயமாகப் படவில்லை.

சிங்கப்பூரை அதிரவைப்பது தைப்பூசம் என்றால் மிகையல்ல.

இதுவும் ஆன்மீக பூமியாக மாறிவிட்ட பூமி, ஆத்ம திருப்திக்கு ஆலயங்களே சிறந்த தலமாக, உலகம் முழுவதும் போற்றப்பட்டு வருகிறது என்பதற்கு, வெளிநாடுகளில் உள்ள சைவ, வைணவத் திருத்தலங்களே சாட்சியாக நிற்கின்றன…