மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்த சென்னை போயஸ் கார்டனில் உள்ள ‛வேதா இல்லம், நினைவு இல்லமாக மாற்றப்பட்டது.அதனை முதல்வர் பழனிசாமி இன்று காலை திறந்து வைத்தார்.பின்னர், வீட்டு வளாகத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்த ஜெயலலிதா உருவப்படுத்திற்கு முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து சென்னை போயஸ் கார்டனில் அவர் வசித்த வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என தமிழக அரசு அறிவித்தது.அதன்படி அவரது இல்லம் அமைந்த நிலத்தை அரசு கையகப்படுத்தியது. அதற்கு இழப்பீடாக 68 கோடி ரூபாய் அரசு சார்பில் நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டுள்ளது.
ஜெ. வீட்டை நினைவு இல்லமாக மாற்ற அவரது வீடு முழுதும் வர்ணம் பூசப்பட்டு திறப்பு விழாவுக்கு தயாரானது. இதனை எதிர்த்து, அவரது அண்ணார் ஜெயராமனின் மகன் தீபக், மகள் தீபா ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அதனை விசாரித்த நீதிமன்றம், திறப்பு விழாவுக்கு தடை விதிக்க மறுத்து சில நிபந்தனைகளுடன் இடைக்கால உத்தரவுப் பிறப்பித்தது.
சென்னை போயஸ் தோட்டத்தில் ஜெ. நினைவு இல்ல திறப்பு நிகழ்ச்சியை நடத்தி கொள்ளலாம். ஆனால் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விடக்கூடாது’ என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


பொது மக்களின் பார்வைக்கு திறந்து விடக்கூடாது என்ற உத்தரவிற்கு எதிராக, தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு மீதான விசாரணை நாளை ( வெள்ளிக்கிழமை )நடைபெற உள்ளது.