Fri. May 17th, 2024

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளையும் முழுமையாக கைப்பற்ற தி.மு.க. தலைமை வியூகம் வகுத்து, தேர்தல் களத்திற்கு தயாராக வருவதாக தகவல் கசிந்துள்ளது. கால்நூற்றாண்டுக்குப் பிறகு ராமதாதபுரம் தொகுதியில் உதயச்சூரியனை மலர வைக்க வேண்டும் எனும் உறுதிமொழியையும் தி.மு.க. தலைமை முன் வைத்துள்ளதாம்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில், கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 3 தொகுதிகளில் அ.தி.மு.க.வும், ஒரு தொகுதியில் தி.மு.க. கூட்டணியோடு தேர்தலை சந்தித்த காங்கிரஸும் கைப்பற்றியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.வே இல்லாமல் போனதை கௌரவக் குறைச்சலாக எடுத்துக் கொண்டுள்ள தி.மு.க. தலைமை, இந்த முறை மூன்று தொகுதிகளிலும் உதயச் சூரியனே மலர வேண்டும் என தீர்மானிததுள்ளாராம். அதன்படி, 1996 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, ராமநாதபுரத்தில் தி.மு.க. களம் காணாததால், இந்த முறை நேரடியாகவே களம் இறங்கப் போகிறதாம். தி.மு.க. அதுவும் பெண் வேட்பாளரை களத்தில் நிறுத்தி வாகை சூடவும் வியூகம் வகுத்துள்ளதாக அண்ணா அறிவாலய தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில், ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில் பெரும்பான்மை சமுதாயமாக உள்ள அகமுடையார் சமுதாயத்தைச் சேர்ந்த தி.மு.க. நிர்வாகிக்கு அதிர்ஷ்டம் அடிக்குமாம்.

தி.மு.க. தலைமையின் எண்ணவோட்டத்தை எப்படியோ ஸ்மெஸ் செய்துவிட்ட முன்னாள் எம்.பி. பவானி ராஜேந்திரன், அண்மைகாலமாக ராமநாதபுரத்தில் ஆக்டிவ் பாலிடிக்ஸில் கலக்கி வருகிறாராம். அண்மையில், தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்துகொண்ட நிகழ்ச்சிகளில் எல்லாம் உடன் பிறவா சகோதரி போல அன்பு காட்டி, அவரையையே நெகிழ வைத்துவிட்டாராம் பவானி ராஜேந்திரன். கனிமொழியுடனான நெருக்கமே அவருக்கு ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை பெற்றுத் தந்துவிடும் என்கிறார்கள் முன்னாள் எம்.பி.யின் ஆதரவாளர்கள்.

ஆனால், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் சாய்ஸோ, சாதாரண நிலையில் உள்ள ஒருவரைதான் வேட்பாளராக களத்தில் நிறுத்த வேண்டும் என தீர்மானித்துள்ளதாக அண்ணா அறிவாலய வட்டாரத்தில் தகவல்கள் பரபரக்கப்படுகிறது. அந்தவகையில், மண்டபம் யூனியன் முன்னாள் சேர்மன் கலைமதி ராஜா பெயரும் பலமாக அடிபடுகிறது. தற்போது, மகளிர் தொண்டர் அனி துணை அமைப்பாளராக உள்ள இவர், கடந்த 2011 முதுலு 2016 வரை மண்டபம் ஒன்றியத்தின் பெருந்தலைவராக இருந்துள்ளார். இவரது தந்தை, வி.சி.கனகராஜன், மூன்று முறை மண்டபம் தி.மு.க. ஒன்றியச் செயலாளராக இருந்தவர் என்பதும் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக தி.மு.க.வில் பல பொறுப்புகளை வகித்து வருகிறார் என்பதும் கலைமதிக்கு கூடுதல் பலம் என்கிறார்கள் ராமநாதபுரம் தி.மு.க. உடன்பிறப்புகள்.

ராமநாதபுரம் தொகுதி முழுவதும் அறிமுகமாகியுள்ள கலைமதியும், அவரது தந்தையுமான கனகராஜனுக்கு ஆதரவாகவும் களத்தில் நிற்கிறார்கள், அந்த தொகுதியில் பெரும்பான்மையாகவுள்ள அகமுடையார் சமுதாயத்தைச் சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள் பலர்.

இவர்களைத் தவிர ஆடவர் பிரிவில். இளைஞரணி அமைப்பாளர் ரகு. குணசேகரன் ஆகியோரும் களத்தில் நிற்கிறார்களாம். இதில், இரண்டாமவர், ஆர்.டி.ஓ. பதவியில் இருந்து விலகி அண்மையில்தான் தி.மு.க.வில் சேர்ந்தாராம்.

ராமநாதபுரம் தொகுதி இப்படியென்றால், பரமக்குடியிலும் போட்டி பலமாக இருக்கிறது. தி.மு.க. தலைமையோடு ஐந்தாறு பேர் மல்லுக்கட்டினாலும் போட்டி என்னவோ இரண்டு பேருக்கு இடையேதான் என்கிறார்கள் பரமக்குடி தி.மு.க.உடன்பிறப்புகள். கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் சதர்ன் பிரபாகர், தி.மு.க. வேட்பாளரை விட 13 ஆயிரம் ஓட்டுகள்தான் அதிகமாக வாங்கியிருக்கிறார் என்பதால், வரும் தேர்தலில் இந்த தொகுதியையும் எளிதாக வென்றுவிடலாம் என்ற கணக்கு தி.மு.க. வினரிடம் உள்ளது. அதை அறிந்துதான், பதிவாளர் பதவியில் இருந்து விலகிய பாலு என்பவர், தி.மு.க.வின் இரண்டாம் கட்ட தலைவர்களில் ஒருவரான ஆ.ராஜா எம்.பி.யின் ஆசியோடு, தான்தான் பரமக்குடி வேட்பாளர் என கம்பு சுற்றுகிறாராம். அவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்துவிடக் கூடாது என்று ஒன்றிரண்டு தி.மு.க. நிர்வாகிகள் அண்ணா அறிவாலயத்தை முட்டிக் கொண்டு இருந்தாலும், ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் முத்து ராமலிங்கத்திதன் ஆசியோடு கலைச் செல்வி என்ற மகளிர் அணி நிர்வாகியும் காய் நகர்த்தி வருகிறராம்.

திருவாடானை தொகுதி வேட்பாளர் என்று கூறினாலே, அந்த தொகுதியைச் சேர்ந்த அத்தனை தி.மு.க.நிர்வாகிகளும் மாவட்ட பொறுப்பாளர் முத்து ராமலிங்கத்தைதான் கையை காட்டுகிறார்கள்.

30 ஆண்டுகளுக்கு மேலாக ராமநாதபுரம் மாவட்டத்தையே தன் சுட்டு விரலால் ஆட்டிப்படைத்து வந்த சுப. தங்கவேலனின் ஆதிக்கத்தில் இருந்து மாவட்டப் பொறுப்பு முத்து ராமலிங்கத்திடம் தி.மு.க. தலைமை ஒப்படைத்துள்ளது. அந்தளவுக்கு நம்பிக்கையான அவருக்கு சட்டமன்ற தொகுதி சீட் கிடைக்காமலா போய்விடும் என பஞ்சாயத்து வைக்கிறார்கள், அவரது விசுவாசிகள்.

இருந்தாலும், அவருக்கும் போட்டியில்லாமல் இல்லை. முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன், இதே தொகுதியில் கடந்த முறை போட்டியிட்டு தோல்வியடைந்த சுப. தங்கவேலனின் மகன் சுப.த.திவாகரன் என பிரபலங்களும் சீட் பெற, தங்களுக்கு அணுசரணையாக உள்ள இரண்டாம் கட்ட தலைவர்களின் சிபாரிசுக்காக சென்னைக்கு அடிக்கடி படையெடுக்கிறார்களாம்.

எப்படியிருந்தாலும், இந்த முறை இந்த தொகுதியை அ.தி.மு.க.விடம் இருந்து பறிப்பதையும், நடிகர் கருணாஸின் அட்ராசிட்டிக்கு முற்றுப் புள்ளி வைக்கவும் தி.மு.க. உடன்பிறப்புகள் ஒட்டுமொத்தமாக சபதம் எடுத்திருக்கிறார்கள் என்பதுதான் ஹாட் நியூஸ்.

முதுகுளத்தூர

தி.மு.க. கூட்டணியில் கடந்த 2016 தேர்தலில் காங்கிரஸ் வெற்றிப் பெற்ற தொகுதி இது. காங்கிரஸுடன் தி.மு.க. கூட்டணி நீடித்தால், இந்த தொகுதி மீண்டும் காங்கிரஸுக்கு போகும் என்பதுதான் ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க.வினரின் பேச்சாக உள்ளது. அந்த வகையில், தற்போதைய எம்.எல்.ஏ., பாண்டி மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்படலாம்.

அல்லலது, அவரது மகன் வேட்பாளராக தேர்வு செய்யப்படலாம். இல்லையெனில், மறைந்த காங்கிரஸ் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சோ பாலகிருஷ்ணன் புதல்வர் சோபா.ரங்கநாதன், முதுகுளத்தூர் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்படலாம்.

ஆக மொத்தத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளையும் கைப்பற்றி, அ.தி.மு.க.வுக்கு ஒட்டுமொத்தமாக பட்டை நாமம் போட வேண்டும் என்பதைதான் சூளுரையாக அறிவித்துள்ளார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் என்கிறார்கள் ராமநாதபுரம் உடன்பிறப்புகள். அவரின் சூளுரையை இந்த முறை கண்டிப்பாக நிறைவேற்றுவோம் என்று உற்சாக குரல் எடுக்கிறார்கள் தி.மு.க. நிர்வாகிகள் கோரஸாக.