Sun. May 19th, 2024

மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடம், சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் நினைவிட வளாகத்தில் சுமார் 80 கோடி ரூபாய் மதிப்பில் எழில்மிகு வடிவத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. எத்தனை முறை சரிந்து விழுந்தாலும் மீண்டும் எழுகிற மனவுறுதியைக் கொண்ட ஃபீனிக்ஸ் பறைவையின் வடிவத்தில் அமைக்கப்பட்ட அவரின் நினைவிடத் திறப்பு விழா இன்று காலை 11 மணியளவில் நடைபெற்றது.

சட்டப்பேரவைத் தலைவர் தனபால், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ரிப்பன் வெட்டியும், கல்வெட்டையும் திறந்து வைத்தார். பின்னர், முதல்வர்,துணை முதல்வர், சட்டப்பேரவைத் தலைவர் ஆகியோர் மலர் தூவி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் கே.சண்முகம், பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் மருத்துவர் மணிவாசன் மற்றும் அமைச்சர்கள், அ.தி.மு.க. எம்.பி.ரவீந்திரநாத், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள், எம்.ஜிஆர், ரசிகர்கள் என பல்லாயிரக்கணக்கான மக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

பின்னர் அதே வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், வரும் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றிப் பெற்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சபதத்தை நிறைவேற்றும் வகையில் , அ.தி.மு.க. ஆட்சியை மீண்டும் அமைக்க ஒற்றுமையுடன் தேர்தலை எதிர்கொள்வோம் என அழைப்பு விடுத்தனர்.