Mon. Nov 25th, 2024

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் தி.மு.க. வேட்பாளர்கள் யார் என்பதை அக்கட்சியின் தலைமை அறிவிக்கும் முன்பே, உள்ளூர் தி.மு.க. நிர்வாகிகள், வேட்பாளர்கள் லிஸ்டை கையில் வைத்துக் கொண்டு, களத்தில் பூத்து விளையாடுகிறார்களாம்

திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தென்காசியை பிரித்து தனி மாவட்டமாக்கியபோதே, இரண்டு மாவட்டத்திற்கும் சேர்த்து தி.மு.க. பொறுப்பாளர்களை அறிவிப்பதற்கு, திருநெல்வேலியிலும் தி.மு.க. தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்திலும் நடந்த பஞ்சாயத்து ஊரறிந்து ரகசியம்.

ஆண்டாண்டு காலமாக திருநெல்வேலியை தனது அதிகாரத்தின் கீழ் வைத்திருந்த முன்னாள் பேரவைத் தலைவர் ஆவுடையப்பன், மாவட்டப் பிரிப்பிற்குப் பிறகும் தனது செல்வாக்கு சரிந்து வருவதைக் கண்டு மனம் நொந்தப் போய்வுள்ளாராம். வரும் தேர்தலில் தனது எம்.எல்.ஏ. கனவும் பணால் ஆகிடுமோ என்ற அச்சத்தில் அவர் இருப்பதாகவே கதைக்கிறார்கள் அவரது விசுவாசிகள்.

அவரின் புலம்பலை பார்ப்பதற்கு முன்பு, ஒவ்வொரு தொகுதியிலும் இன்னார்தான் தி.மு.க. வேட்பாளர் என்று கூறிக் கொண்டு வலம் வரும் தி.மு.க. உடன்பிறப்புகளின் வாக்குமூலத்தை வாசிப்போம் முதலிலி…

திருநெல்வேலி தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ.வாக தி.மு.க.வைச் சேர்ந்த ஏ.எல்.எஸ். லட்சுமணன் 5 ஆண்டு காலத்தை முழுமையாக நிறைவு செய்கிறார்.  தொகுதி முழுவதும் இவருக்கு நல்ல பெயர். அந்தளவுக்கு கடந்த தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றி விட்டாரா என்று அப்பாவியாக கேட்டு விடாதீர்கள்.

நரி,  இடம் போனால் என்ன.. வலம் போனால் என்ன.. மனிதர் மீது பாயாமல் இருக்கிறதே என்ற நிம்மதி போலதான், ஏ.எல்.ஏஸ். லட்சுமணன் மீது தொகுதிக்குள் நிலவும் நன்மதிப்பு. கடந்த 5 வருடங்களில் அடாவடி கிடையாது. உறவினர்கள், எம்.எல்.ஏ. ஆட்கள் என்று கூறிக் கொண்டு யாரும் கட்டப்பஞ்சாயத்து செய்தது கிடையாது. தான் உண்டு. தன் வேலை உண்டு என்று வலம் வருபவர் தி.மு.க. எம்.எல்.ஏ. லெட்சுமணன். அதனால், வரும் தேர்தலிலும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால், திருநெல்வேலி மக்கள், அவருக்கு வெற்றி மாலை சூடி  கொண்டாட தயாராகவே இருக்கிறார்கள் என்கிறார்கள் நெல்லை மக்கள்.

நெல்லையில், தி.மு.க. வெறறி எளிது என்பதால், அவரோடு மல்லு கட்ட 20 பேர் தயாராக இருந்தாலும், மூன்று நான்கு பிரபலங்கள், தி.மு.க. தலைமையிடம் கடுமையாக போராடி வருகிறார்கள். அதில் முக்கியமானவர்கள், பிள்ளைமார் சமுதாயத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன், யாதவ சமுதாயத்தைச் சேர்ந்த கே.ஆர்.ராஜு மற்றும் சுரேஷ், ம.தி.மு.க.வில் இருந்து தி.மு.க. வந்த பெருமாள் என நெல்லையை கைப்பற்ற தீவிர முயற்சியில் இருக்கிறார்கள். இதில், சுப்பிரமணியன் என்பவர், முன்னாள் பேரவைத் தலைவர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் தளபதியாக செயல்பட்டுக் கொண்டிருப்பவர். யார் எப்படி முட்டி மோதினாலும் எனக்கு தான் மீண்டும் சீட் என்பதில் உறுதியாக இருக்கிறார் சிட்டிங் எம்.எல்.ஏ. ஏ.எல்.எஸ். லெட்சுமணன்.

பாளையங்கோட்டை தொகுதி.. கற்பூரமே அடித்துச் சொல்லலாம் தி.மு.க. வேட்பாளர், அப்துல் வஹாப்தான் என்று. இவர், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் இதயக்கனியாக இருப்பவர். மிகுந்த நம்பிக்கைக்குரியவர். கடந்த 2012 ஆம் ஆண்டு திருநெல்வேலி தி.மு.க மாநகரச் செயலாளர் பொறுப்பில் இருந்து மாலைராஜா விலகிய நேரத்தில், தி.மு.க.விற்கு தோள் கொடுத்தவர் அப்துல் வஹாப். நெருக்கடியான நேரத்தில் கட்சிக்கு விசுவாசமிக்க நிர்வாகியாக தன்னை அடையாளம் காட்டிக் கொண்ட அப்துல் வஹாப்பை, தி.மு.க. தலைமையும் லேசில் விட்டுக் கொடுக்காது என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

தற்போதைய சிட்டிங் எம்.எல்.ஏ., வாக இருப்பவர் முன்னாள் அமைச்சர் மைதீன்கான். 70 வயதான இவர், தனது மகன் மறைவால் விரக்தியில் இருப்பதாக தலைமை கருதுகிறதாம். இருப்பினும், இவருக்கும், வஹாப்பிற்கும் பழைய பகை இருப்பதால், இந்த தொகுதியை முஸ்லீக் லீக்கிற்கு மாற்றிவிட, திரைமறைவில் மைதீன்கான் காய் நகர்த்துவதாக ஒரு பேச்சு இருக்கிறது. அதை தூசு போல தூக்கியெறிந்துவிட்டு களம் இறங்குவார் வஹாப் என்பதுதான்

இன்றைய நிலைமை. இவர்களுக்கு இடையே உள்ள பகையை பயன்படுத்தி தேர்தலில் போட்டியிட சீட் வாங்கிட புதிய தொழிலதிபர் அய்யாதுரை வேகம் காட்டி வருகிறார். கடந்த பல மாதங்களாக தொகுதிக்குள் கிராமம், கிராமமாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடத்தி, வாரம் தோறும் 50 லட்சம் ரூபாய் அளவுக்கு உதவிகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறாராம். இந்த தொகுதி தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பை எளிதாக பெற்றுத் தரும் என்பதால், புதிய பிரபலங்களுக்கு கூட ஆசை வந்திருக்கிறதாம். 

நாங்குனேரி இப்போது அ.தி.மு.க. வசம் இருக்கிறது. தி.மு.க. கூட்டணியில் இந்த தொகுதி, காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் என்று ஒரு பேச்சு பலமாக அடிபட்டாலும், தி.மு.க. தலைமையின் குடும்பத்தில் உள்ள இருவரின் ஆசிர்வாதம் கிரஹாம் பெல்லுக்கு இருக்கிறதால், இந்த தொகுதியில் தி.மு.க.தான் போட்டியிடும். நான் தான் எம்.எல்.ஏ. என்று கூறி வருகிறாராம் கிரஹாம் பெல். மேலோட்டமாக அவர் சொல்வதைவிட, அவரின் மனசாட்சியின் புலம்பலோ வேற மாதிரி என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியை குறி வைத்து தலைமையிடம் சரணாகதி அடைந்தார். ஆனால், ஞான திரவியம், அவரை விட வேகமாகவும், பலமாகவும் சரணாகதி அடைந்ததால், அப்போது அதிர்ஷ்டக் காற்று அவர் பக்கம் வீசியது. அதனால், பாதிப்பு கடுயைமாக இருந்தாலும், மாவட்டச் செயலாளர் பதவியை குறி வைத்தார் கிரஹாம் பெல். அதிலும் ஏமாற்றமே மிஞ்ச, நாங்குனேரி தொகுதியை முழுமையாக நம்பிக் கொண்டிருக்கிறார். அவருக்கு வாக்குறுதி அளித்துள்ள இளைஞர்கள் இரட்டையர், கவலைப்படாதீர்கள். அம்பாசமுத்திரம் தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்கிவிடலாம் என்று நம்பிக்கை கொடுத்திருக்கிறார்களாம்.. அதை கேட்டுதான் கிரஹாம் பெல் உச்சகட்ட சந்தோஷத்தில் இருக்கிறாராம். ஏனெனில், அவரது எதிரியான முன்னாள் பேரவைத தலைவர் ஆவுடையப்பன் அம்பாசமுத்திரம் தொகுதியை தான் குறிவைத்திருக்கிறாம்.

ராதாபுரம் தொகுதி, கடந்த ஐந்தாண்டுகளாக எம்.எல்.ஏ., வாக இருந்திருக்க வேண்டியவர் தி.மு.க.வைச் சேர்ந்த அப்பாவுதான். பாவம், 47 ஓட்டுகளில் தோற்றுப் போனார். அ.தி.மு.க. எம்.எல்.ஏ. இன்பதுரையின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அவருக்கு சாதகமாக தீர்ப்பு வெளியாகும் நேரத்தில், இன்பதுரை, உச்சநீதிமன்றத்தை அணுகி இடைக்கால தடையுத்தரவு பெற்றார். தனது எம்.எல்.ஏ., கனவு கலைந்துப்போனதால், இந்த முறையாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என தி.மு.க.தலைமையிடம் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்திருக்கிறாராம்.

வாழும் காமராஜர் என்று அவரை அவர் ஊர்பக்கம் ஒரு கூட்டம் அழைத்து வரும் நேரத்தில், அனுதாப ஓட்டுகளை மொத்தமாக அள்ளிவிட அப்பாவு, முழுமூச்சாக போராடி வருகிறார். அவரின் கனவையும் கலைக்க, கல்வி அதிபர் ஒருவர் 20 கோடி ரூபாய் தொழிலதிபர், சென்னையில் உள்ள ஒரு பிரமுகரின் செல்வாக்கை பயன்படுத்தி, ராதாபுரம் தொகுதியை அப்பாவுவிடம் இருந்து தட்டி பறித்திட காய் நகர்த்துகிறார் என்கிறார் ஒரு உடன்பிறப்பு. அவர் யார் என்பது பரம ரகசியமாம்..

அ.தி.மு.க. வசம் இருக்கும் அம்பாசமுத்திரம் தொகுதி, தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்படவில்லை என்றால், ஆவுடையப்பன் தி.மு.க தலைமையோடு கடுமையாக சண்டை  போடுவார் என்கிறார்கள் அவர் குணம் அறிந்த உள்ளூர் தி.மு.க. நிர்வாகிகள். அவரின் சப்த நாடியையும் குறைக்க, மகேஷ் பொய்யாமொழி, .. சிவகிரி ஜமீன் பரம்பரையைச் சேர்ந்த அஷிஸ் சேதுபதி என்பவரை களத்தில் இறக்கி விட்டுள்ளாராம்.  பொங்கல் திருவிழாவை முன்னிட்டு அம்பாசமுத்திரம் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் வீடு வீடாகச் சென்று அஷிஸ் புத்தம் புதிய வேட்டி, சேலைகளை வழங்கி ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பணத்தை தண்ணீரைக இரைத்திருக்கிறாராம். ஆவுடையப்பனின் ஆதரவாளர்களும் கூண்டோடு அஷிஸ் பக்கம் போய் விட்டார்களாம். அதைப் பார்த்து ஆடிப்போய்விட்டாராம் ஆவுடையப்பன். தனது தொகுதிக்குள்யேயே நடக்கும் உட்கட்சி அரசியலைப் பார்த்து ஆடி போயிருக்கும் ஆவுடையப்பன், தனக்கு அல்லது தனது மகன் பிரபாகரனுக்கு சீட் தர வேண்டும் என்று தி.மு.க. தலைமையிடம் கண்ணீர் மல்க  வேண்டுகோள் வைத்திருக்கிறாராம்..

முதற்கட்டமாக இந்த 5 தொகுதிகளிலும் பல்வேறு ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் நடத்திய கருத்துக் கணிப்பில், தி.மு.க.வுக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறதாக அழுத்தம் திருத்தமாக சொல்லியிருக்கிறார்களாம். கோஷ்டிப் பூசலை மறந்து ஒற்றுமையுடன் தி.மு.க உடன்பிறப்புகள் உழைத்தால், 5 தொகுதிகளையும் அலேக்காக அள்ளலாம் என்கிறார்கள் கருத்துக்கணிப்பில் ஈடுபட்ட ஊடகவியலாளர்கள்.