Sat. Apr 19th, 2025

தமிழக அரசின் இன்றைய தலைமைச் செயலாளர் கே.சண்முகம், வரும் 31 ஆம் தேதியுடன் ஓய்வுப் பெறுகிறார்.

1985 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர், 2019 ஆம் ஆண்டு ஜுன் இறுதியில் தமிழக அரசின் தலைமைச் செயலாளராக பதவியேற்றுக் கொண்டார். சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்தவர். கோயம்புத்தூர் வேளாண் கல்லூரியில் இளங்கலை பட்டம் பயின்ற இவர், 1985 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக தேர்வுப் பெற்றவுடன், அதே ஆண்டில் தஞ்சை மாவட்ட உதவி ஆட்சியராக பணியை தொடங்கினார்.

பின்னர், பதவி உயர்வுப் பெற்று சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களின் ஆட்சியராகவும் பணிபுரிந்தார். தொடர்ந்து, பல்வேறு அரசு துறைகளின் இணை செயலாளராகவும், செயலாளராகவும் பதவி உயர்வு பெற்றார்.

2010ஆம் ஆண்டு நிதித்துறை செயலாளராக நியமிக்கப்பட்ட கே.சண்முகம், தொடர்ந்து 10 ஆண்டுகள், அதாவது 2019 ஆம் ஆண்டுவரை நிதித்துறைச் செயலாளராக இருந்தார். இந்தக் காலத்தில், கலைஞர் கருணாநிதி, செல்வி ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என நான்கு முதல்வர்கள் ஆட்சியில் இருந்தபோதும், கே.சண்முகமே நிதித்துறைச் செயலாளராக நீடித்தார்.

இந்தநிலையில்தான், 2019 ஆம் ஆண்டில் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் கடந்தாண்டு ஜூலையோடு முடிவடைய இருந்த நிலையில், கொரோனோ தொற்றின் காரணமாக இரண்டு முறை பணிநீட்டிப்பு பெற்று, தலைமைச் செயலாளராகவே தொடர்ந்தார். அ.தி.மு.க. அமைச்சர்களுக்கு மட்டுமல்ல, முந்தைய தி.மு.க ஆட்சிக்காலத்திலும் அப்போதைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்களுக்கும் அறிமுகமானவர் என்பதாலும், நிதித்துறையை திறம்பட நிர்வகித்தவர் என்பதாலும், இரண்டு கட்சியில் உள்ள மேல் மட்ட தலைவர்களுடன் கே.சண்முகத்திற்கு நல்ல அறிமுகமும், நட்பு பாராட்டக் கூடிய அரசியல் தலைவர்களும் பலர் இருக்கின்றனர்.

மூத்த அரசியல் தலைவர்களின் பெயரைச் சொல்லி அழைக்கிற அளவுக்கு தலைமைச் செயலாளர் கே.சண்முகத்திற்கு நெருக்கமான பழக்கம் உள்ளதால், அவரோடு நிர்வாக ரீதியாக பேசுகிற போதும், இந்நாள் அமைச்சர்களும், முன்னாள் அமைச்சர்களும் மரியாதையுடனேயே நடந்து கொள்வார்கள்.

இன்றைய சூழலில் நிதி நிர்வாகத்தை திறம்பட கையாள கே.சண்முகத்தின் ஆலோசனைகளும், வழிகாட்டலும் மிகவும் அவசியம் என்பதால், இன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அவருக்கு மேலும் 3 மாத காலம் பணி நீட்டிப்பு பெற்றத் தர முயன்றார். ஆனால், அதை திட்டவட்டமாக மறுத்துவிட்டார் தலைமைச் செயலாளர்.

அதுபோல, ஏற்கெனவே இரண்டு முறை அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டபோது அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கலாம் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினிடம் அவருக்கு நெருக்கமான மூத்த வழக்கறிஞர் அனுமதி கேட்டார். ஆனால், அந்த பேச்சையே ரசிக்காத மு.க.ஸ்டாலின், சி.எஸ். எஸை டிஸ்டர்ப் செய்ய வேண்டாம் என்று ஒற்றை வார்த்தையில் அந்த வழக்கறிஞரின் விருப்பத்தை புறக்கணித்துவிட்டார்.

ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ், என இரண்டு பிரிவு அதிகார மிக்க பதவிகளில் இருந்து ஓய்வு பெறும் உயரதிகாரிகள், தங்களுக்கு விருப்பமான ஏதாவது ஒரு அரசியல் தலைவருக்கு, அரசியல் ஆலோசகராக செல்லவே விருப்பப்டுவார்கள். அந்தவகையான அதிகாரிகளுக்கு கிடைக்காத ஒரு அரிய வாய்ப்பு தற்போதைய தலைமைச் செயலாளர் கே.சண்முகத்திற்கு கிடைத்திருக்கிறது.

எடப்பாடி பழனிசாமியா… மு.க.ஸ்டாலினா

அ.தி.மு.க.வா… தி.மு.க.வா.. எந்த திடலில் அரசியல் விளையாட்டும், நிதி நிர்வாகத்துறை வித்தைகளையும் காட்டப் போகிறார் கே. சண்முகம். அவரது காலுக்கடியில் பந்து காத்திருக்கிறது. எந்த பக்கம் எட்டி உதைக்கப் போகிறார்.. இன்னும் சில மாதங்களில் விடை தெரிந்துவிடும். அது தேர்தலுக்கு முன்பாக இருக்க வாய்ப்பு இல்லை என்கிறார்கள், அவரோடு இணைந்து பணியாற்றி வரும் தலைமைச் செயலக உயர் அதிகாரிகள்…

4