திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
காலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் தூர் வாரும் பணிகளை ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பின்னர், திருச்சி மாவட்டம் புலிவலம் பகுதியில் உள்ள நீர்நிலைகளில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நீர்நிலைகளை முழுமையாக தூர்வாருவதற்காக ஏறத்தாழ 65 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், டெல்டா மாவட்டம் முழுவதும் தூர் வாரும் பணிகள் முனைப்புடன் நடைபெற்று வருகிறது.
தஞ்சை மாவட்டத்திற்கு மட்டும் பிரத்யேகமாக 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், திருச்சி மாவட்டத்திற்கு 6 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திருச்சியில் பிரபலமான உய்யகொண்டான் வாய்க்காலை தூர் வார வேண்டும் என்பது பாசன விவசாய சங்கத்தினரின் பல வருட கோரிக்கையாகும்.
புலிவலம் கிராமத்தில் இருந்து மணற்போக்கில் செல்லும் வடிகால் வாய்க்கால் தூர்வாரப்பட வேண்டும் என்று தொடர்ந்து விவசாய சங்கங்கள் வலியுறுத்தி வந்தன. அதனை ஏற்று த்ற்போது தூர் வாரும் பணி துவங்கியுள்ளது. 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
குறுவை சம்பா சாகுபடி பணிக்காக, மேட்டூர் அணையில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறந்துவிடப்படும் நிலையில் ஈரோடு, கரூர், நாமக்கல் மாவட்டங்களை கடந்து திருச்சி மாவட்டத்தை தாண்டி கடைமடை பகுதி வரை தண்ணீர் செல்ல வேண்டும் என்பதே அனைத்துப்பகுதி விவசாயிகளின் கோரிக்கை.
அதனை நிறைவேற்றும் வகையில், தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடைமடை வரை நீர் சென்று சேர வேண்டும் என்ற நோக்கில், வழித்தடங்களாக உள்ள நீர் நிலைகள் தொடர்ந்து தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தள்ள நிலையில், ஏற்கெனவே தேர்தல் வாக்குறுதியாக, தமிழ்நாட்டில் பயிரிடப்படும் விளை நிலங்களின் பரப்பை 75 சதவீதமாக உயர்த்துவோம் என்ற இலக்கை விரைவாக எட்டுவோம் என்று உறுதிபடக் குறிப்பிட்டுள்ளார்.