
பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆர்மார்த்த தோழி சசிகலா, விரைவாக பூரண நலம் பெற வேண்டும் என்று அவரது உறவினர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதுபோலவே, அவரது விசுவாசிகளான இந்நாள், முன்னாள் அ.தி.மு.க.வினரும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சிறையில் இருந்த போதும், உடல்நலம் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும், சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபட்டுதைப் போல, இப்போதும் கோயில் கோயிலாக வழிபாடு நடத்தி வருகின்றனர்.
அ.தி.மு.க. பிரமுகர்களில் பலர், மறைமுகமாக வேண்டுதல்களில் ஈடுபட்டு, அதுதொடர்பான தகவல்களை பெங்களூரில் முகாமிட்டுள்ள சசிகலாவின் உறவினர்களைத் தொடர்பு கொண்டு தங்கள் பிரார்த்தனைகளைப் பற்றி உருக்கமாக தகவல் பகிர்ந்து வருகின்றனர்.

இவர்கள் எல்லோரையும் விட, சசிகலா உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்நாளிலேயே மனம் வேதனை அடைந்தாராம், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி. மற்றவர்களைப் போல பிரார்த்தனைகளில் ஆர்வம் காட்டாமல், உடனடியாக கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, சசிகலாவுக்கு உயர்தரமான சிகிச்சை வழங்குங்கள். அரசியலில் ஆயிரம் கருத்து வேறுபாடு இருந்தாலும், நோயுற்ற ஒருவரின் உடல்நிலையோடு விளையாடுவது நல்லதல்ல. இன்றைய அரசியல் சூழ்நிலையில், சசிகலா பூரண ஆரோக்கியத்தோடு சென்னை திரும்ப வேண்டும், அவர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை நிர்வாகம் பற்றி கிடைக்கிற தகவல்கள் கவலையளிக்கிறது, மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு எதிராக சொத்துக் குவிப்பு வழக்கு நான் தொடுத்திருந்தாலும் கூட, அந்த வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை முறையாக அனுபவித்தவர் சசிகலா. அவருக்கு வழங்கப்பட்ட பரோல் அனுமதியைக் கூட அவர் மீறவில்லை. தனியார் மருத்துவமனையில் அவருக்கு உரிய சிகிச்சை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டால்கூட காலதாமதம் செய்யாதீர்கள் என்று முதல்வர் எடியூரப்பாவிடம் உருக்கமான வேண்டுகோளை டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி வைத்ததாக, பெங்களூரில் உள்ள பா.ஜ.க. தலைவரிடம் இருந்து நமக்கு தகவல்கள் கிடைக்கின்றன.

சசிகலாவின் உடல்நிலையில் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி இவ்வளவு அக்கறை, சிரத்தை எடுத்துக் கொள்வதைப் பார்த்து, முதல்வர் எடியூரப்பா. உண்மையிலேயே, நெகிழ்ந்துப் போனாராம். ஆனால், சசிகலாவுக்கு தேவையான சிகிச்சை அளிக்க வேண்டிய விவகாரத்தில், அவரது கைகள் டெல்லியால் கட்டப் பட்டிருக்கிறது என்பதை எப்படி டாக்டர் சுப்பிரமணியன் சுவாமியிடம் பகிர்ந்து கொள்வது என்று தெரியாமல்தான் தவித்தாராம். இருப்பினும், அவரது தொலைபேசி வேண்டுதலின் போது மனசாட்சியோடு பதில் கூறாமல், சம்பிரதாயமாக விளக்கம் அளித்து, கவலைப்படாதீர்கள், முழு ஆரோக்கியத்துடன் சசிகலா தமிழகம் திரும்புவதற்கு கர்நாடக அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று கூறி, தப்பித்துக் கொண்டார் எடியூரப்பா என்கிறார்கள், அவருக்கு நெருக்கமான பா.ஜ.க. தலைவர்கள்.