ஆயுள்முழுவதும் உயிரைக் கொடுத்து உழைத்து உச்சத்திற்கு வருபவர்களிடையே, ஒரு சில நிமிட சமயோசித புத்தியால் அந்த உயரத்திற்கு எளிதாக வந்துவிடும் அதிர்ஷ்டம் ஒரு சிலருக்கு மட்டுமே வாய்க்கும் என்று பொதுவாக ஒரு பேச்சு உண்டு.
புத்திக்கு இந்த உதாரணத்தை சொன்னால், வீரத்திற்கு மற்றொரு உதாரணத்தை முன் வைப்பார்கள். போர்க்களத்தில் நாம் தூக்க வேண்டிய ஆயுதத்தை எதிரிதான் தீர்மானிக்கிறான் என்பார்கள்.
அந்த வகையில் , இந்துகளுக்கு தி.மு.க. எதிரி என்று பா.ஜ.க. உள்ளிட்ட ,இந்து மத அமைப்புகள் காலம் காலமாக ஊர், ஊராகவும், டி.வி. டி.வி.யாகவும் ஆக்ரோஷமாக கூவிக் கொண்டு இருந்தனர். தமிழகத்தில் பகுத்தறிவு சிந்தனையில் பெரும்பான்மையான மக்கள் உள்ள நிலையில், இந்து மதத்திற்கு எதிராக தி.மு.க. இருக்கிறது என்று பிரசாரத்தை, அவர்களுக்கு எதிராக ஒரு ஆயுதமாக பயன்படுத்தி வந்தார்கள்.
ஆனால், ஆயுள் முழுவதும் அவர்கள் செய்து வந்த பிரசாரத்தை ஒரு நொடியில் சுக்குநூறாக உடைத்து எறிந்துவிட்டார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் என்று தமிழக பா.ஜ.க. தலைவர்கள் நேற்றிரவு முதல் கொண்டாட்ட மனநிலைலேயே கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழக பா.ஜ.க.வில் உள்ள முன்னணி நிர்வாகிகள், இரண்டாம் கட்ட தலைவர்களில் பலர், தங்களுக்குள்ளாகவே, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெள்ளி வேலோடு காட்சி தந்ததை சிலாகித்து பேசிக் கொள்கிறார்களாம். மேலும், பலர், தங்களுக்கு அறிமுகமான தி.மு.க. முன்னணி நிர்வாகிகளுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உங்கள் தலைவர் வெள்ளி வேல் ஏந்தி காட்சி தந்தது எங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது தெரியுமா? என்று புளாங்கிதம் அடைந்து பேசுகிறார்களாம். பா.ஜ.க. தமிழக தலைவர் எல்.முருகன், வேல் யாத்திரை திட்டத்தை கையிலெடுத்து ஒரு மாதத்திற்கு மேலாக ஊர், ஊராக யாத்திரை மேற்கொண்ணட போதும் கிட்டாத புகழை, ஒரு சில நிமிடங்களிலேயே தூள் தூளாக்கி உலகம் முழுவதும் பரவியிருக்கும் முருகப்பெருமான் பக்தர்கள் கோடிக்கணக்கானோரின் மனங்களை எல்லாம் குளிர வைத்துவிட்டார் என்று நெகிழ்ச்சியோடு கருத்துகளை பகிர்ந்து கொள்கிறார்களாம்.
திருத்தணியில் முருகனின் வேலை எந்த கூச்சமும் இன்றி ஏந்தியதைப் போல, இந்துக் கடவுள்களுக்கு எதிராக எந்தக் கருத்தையும் எப்போதும், அட்லீஸ்ட் தேர்தல் முடியும் வரையாவது தி.மு.க. தலைவர்கள் பேசாமல் இருந்தால், அக்கட்சிக்கு எதிரான மனநிலையில் இருக்கும் பிராமணர்கள் கூட, வரும் தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்றும் இதேபோல, இந்து மதத்திற்கு எதிராகவோ, கடவுள்களையோ நிந்திப்பதை தி.க, விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சி தலைவர்கள் கைவிட வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கட்டளையிட வேண்டும் என்றும் ஆலோசனைகளை, தங்கள் விருப்பத்தை வலியுறுத்தி கூறுகிறார்கள் என்று நம்மிடம் கூறினார் தி.மு.க. நிர்வாகி ஒருவர்.
ஒரு சில நிமிடங்களுக்கு மட்டுமே மு.க.ஸ்டாலின் வேலை கையில் ஏந்தியிருந்ததற்கே, பா.ஜ.க. வினர் இப்படி உற்சாகத்தை காட்டுகிறார்களே என்று தி.மு.க. இரண்டாம் கட்ட தலைவர்களும் வியந்து போய்விட்டார்களாம். அ.தி.மு.க. கூட்டணியில் இந்த நிமிடம் வரை பா.ஜ.க. இருந்தாலும், பெரும்பான்மையான தமிழக பா.ஜ.க. தலைவர்களுக்கு மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வரக்கூடாது என்ற எண்ணம்தான் மேலோங்கி இருப்பதாக நமக்கு நன்கு அறிமுகமான தி.மு.க. இரண்டாம் கட்ட தலைவர்கள் அதிர்ச்சி கலந்து ஆச்சரியத்துடன் கூறுகிறார்கள்.
இதற்கு முன்பு எப்போதும் இருந்திராத வகையில் அரசு ஒப்பந்தங்களில் 40 சதவிகிதம் கமிஷன், பணி நியமனம், பணியிட மாற்றம் போன்றவற்றுக்கு மனசாட்சியே இல்லாத அளவுக்கு அமைச்சர்களே கமிஷன் வாங்குகிறார்கள். இவர்களை மீண்டும் ஆட்சியள அனுமதித்தால், தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று கொதிப்புடனே பா.ஜ.க. முன்னணி நிர்வாகிகள் பேசுவதாக கூறுகிறார் தி.மு.க. முன்னணி நிர்வாகி.
இப்படி, தி.மு.க.வுக்கு பரம வைரியாக இருந்து வரும் பா.ஜ.க. தலைவர்கள், ஒருநாளில் எப்படி அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினை கொண்டாடும் நிலைக்கு மனம் மாறினார்கள் என்றால், எல்லாம் திருத்தணியில் உள்ள அம்மையார்குப்பத்தில் நிகழ்ந்த அதிசயம்தான் என்கிறார்கள்.
மாநிலம் முழுவதும் தி.மு.க. சார்பில் நடந்து வரும் மக்கள் கிராம சபை கூட்டம் நேற்று, திருத்தணி அருகே உள்ள அம்மையார்குப்பம் கிராமத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்ற அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுயரை மாலை அணிவித்து, திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுகவினர் சார்பில் வெள்ளி வேல் ஒன்றும் பரிசாக அளிக்கப்பட்டது. உண்மையான முருகப் பக்தர்கள் வேல் ஏந்தி நிற்பதைப் போலவே, மு.க.ஸ்டாலினும் வெள்ளி வேலை ஏந்தி நின்ற காட்சி, அடுத்தடுத்த சில நிமிடங்களிலேயே உலகம் முழுவதும் மின்னலை விட அதிவேகமாக பரவியது.
அந்த ஒரு புகைப்படம் தான், கடந்த 20 மணிநேரத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறதாம். தி.மு.க.வினரை விட வேல் ஏந்தி நிற்குமும் மு.க.ஸ்டாலின் புகைப்படத்தை நூறு முறைக்கு மேல் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறார்களாம் பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சியினர்.