சுதந்திரத்திற்கு முன்பாக இந்திய தேசிய ராணுவத்தை கட்டமைத்த சுபாஷ் சந்திர போஸின் 12r பிறந்தநாளை முன்னிட்டு, மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் பிரமாண்டமான பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் கலந்து கொண்டு பேசிய அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, சுழற்றி முறையில் இந்தியாவில் நான்கு தலைநகரங்கள் செயல்பட வேண்டும் என்றும், அதுபோலவே, நாடாளுமன்றக் கூட்டமும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் கூட்டப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கொல்கத்தாதான் இந்தியாவின் தலைநகரகமாக இருந்ததை சுட்டிக்காட்டிய அவர், பரந்த இந்தியாவில் ஒரு தலைநகர் மட்டும் ஏன் இருக்க வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இதனைத்தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள் விழா சிறப்பு அஞ்சல் தலை வெளியீட்டு விழாவில் முதல்வர் மம்தா பானர்ஜியும் கலந்துகொண்டார். விழாவில் பேச அவரை அழைத்தபோது, அங்கு கூடியிருந்த பா.ஜ.க. தொண்டாகள், ஜெய் ராம் என்று முழக்கமிட்டனர். இதனால், அதிருப்தியடைந்த அவர், இது அரசியல் விழா அல்ல, அரசு விழா. இந்த விழாவில் தேச ஒருமைப்பாட்டிற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் முழக்கமிடுவது சரியல்ல. அதனால், இந்த விழாவில் நான் பேச விரும்பவில்லை என்று கூறி, தனது எதிர்ப்பை தெரிவித்தார்.
தொடர்ந்து சிறப்பு அஞ்சல் தலைலை வெளியிட்டு பேசிய பிரதமர் மோடி, சுபாஷ் சந்திர போஸின் கனவை இந்தியா தற்போது நனவவாக்கிக் கொண்டிருப்பதாக பெருமிதத்துடன் கூறினார். இந்தியாவின் எல்லையை பாதுகாப்பதில் நமது ராணுவம் உறுதியுடன் இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.