கோவையில் தேர்தல் பிரசாரத்தை இன்று மேற்கொண்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, என்னை யாரும் விலை கொடுத்து வாங்க முடியாது என்று உருக்கமாக பேசினார்.
தமிழகத்தில் மார்ச் மாத இறுதியில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்காக, பிரசாரத்தை அ.தி.மு.க. முன்னெடுத்துள்ளது. வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற தலைப்பில், கடந்த டிசம்பர் மாத நிறைவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் பரப்புரையை தொடங்கினார். தொடர்ந்து ஒவ்வொரு கட்டமாக மேற்கு மண்டலத்தில் தேர்தல் பிரசாரத்தை முதல்வர் மேற்கொண்டு வருகிறார். அதன்படி இன்று கோவை மாவட்டத்தில் பிரசாரத்தை அவர் தொடங்கினார்.
போத்தனூரில் ஜமாத் நிர்வாகிகளுடனான காலையில் கலந்துரையாடிய முதல்வர் பழனிசாமி, எந்த மதத்தை சேர்ந்தவர்கள் ஆனாலும் அவர்கள் உரிமையை அதிமுக அரசு பாதுகாக்கும் என்று உறுதிபட தெரிவித்தார்.
தொடர்ந்து டவுன்ஹால் பகுதியில் உரையாற்றிய முதல்வர், ஜெயலலிதா மறைவின்போது, தி.மு.க தலைவர் ஸ்டாலின் கட்சியையும், ஆட்சியையும் கலைக்க முயன்றார். ஆனால் நாங்கள் தொண்டர்களின் உதவியுடன் அதனை முறியடித்து ஆட்சியை தொடர்ந்து வருகிறோம். நான் முதலமைச்சராக பதவியேற்ற நாளில் இருந்து இன்னும் 1 மாதத்தில் ஆட்சி கலைந்து விடும். 6 மாதத்தில் ஆட்சி கலைந்து விடும் என கூறி வந்தார். ஆனால் நான் பொறுப்பேற்று 4 ஆண்டுகளை நிறைவு செய்து விட்டேன் என்று தெரிவித்தார்.
நாளையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோயம்புத்தூர் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.