Mon. Nov 25th, 2024

தமிழகத்தில் முதல் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று தொடங்கியுள்ளார். 3 நாள் பயணமாக டெல்லியில் இருந்து தனிவிமானம் மூலம் காலையில் கோவை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அவர்கள் மத்தியில் பேசிய ராகுல்காந்தி, தொழிற்துறை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் தமிழகம் இந்தியாவிற்கே முன்னுதாரமாக உள்ளது என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், தமிழக மக்கள் புதிய வாழ்க்கை முறையையும் புதிய அரசையும் விரும்புவதாகவும் தெரிவித்தார். தமிழக மக்களை இரண்டாம் தர குடிமக்களாக பிரதமர் மோடி கருதுவதாக குற்றம்சாட்டிய ராகுல்காந்தி, தமிழ் மொழி, பண்பாட்டிற்கும் பிரதமர் எதிராக உள்ளதையும் சுட்டிக்காட்டினார். ஒரே மொழி, ஒரே கலாச்சாரத்தை கொண்டு வர பா.ஜ.க. முயற்சி செய்வதாகவும் ராகுல்காந்தி கூறினார்.
25 ஆம் தேதி வரை மேற்கு மண்டலத்தில் உள்ள திருப்பூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

தமிழக மக்களுடன் என் உறவு அரசியல் ஆதாயம் கொண்டது அல்ல என்றும் என் மனதிலிருந்து தோன்றும் ரத்தப்பிணைப்புடன் இணைந்த ஓர் உணர்வு என்றும் உணர்ச்சிகரமாக குறிப்பிட்டார் ராகுல்காந்தி. தொடர்ந்து, கோவையில் உள்ள சிறு,குறு தொழில் முனைவோர்களுடன் கலந்துரையாடிய அவர், காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஜி.எஸ்.டி. வரியை எளிமைப்படுத்தி வரி குறைப்பு செய்யும் மாற்றத்தைக் கொண்டு வரும் என்றும் உறுதிபட தெரிவித்தார்.